Sunday, December 4, 2016

ஜன்தன் கருப்புப் பணம் ஏழைகளுக்கே!

By DIN  |   Published on : 04th December 2016 04:49 AM  |

modi

பெருமதிப்புடைய ரூபாய் நோட்டுகள் வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு, ஜன்தன் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்ட கருப்புப் பணம் ஏழைகளுக்கு செல்வதை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, "மாற்றத்திற்கான யாத்திரை' என்ற பெயரில் பாஜகவினர் கடந்த சில மாதங்களாக அந்த மாநிலம் முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக மொராதாபாத் நகரில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் திரும்பப் பெறுவதாக அறிவிப்பு வெளியான பிறகு, ஏழைகளுக்காக வங்கிகளில் தொடங்கப்பட்ட ஜன்தன் கணக்குகளில் சிலர் அதிக அளவிலான பணத்தைச் செலுத்தி உள்ளனர்.
அவ்வாறு செலுத்தப்பட்ட பணத்தை ஜன்தன் கணக்கு வைத்திருப்பவர்கள் அவர்களுக்கு திருப்பி அளிக்கக் கூடாது. அவ்வாறு நீங்கள் உறுதியுடன் இருந்தால்தான், உங்கள் கணக்குகளில் சட்டவிரோதமாக பணம் செலுத்தியவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள். அத்துடன், அந்தப் பணம் முழுவதும் ஏழைகளுக்குச் செல்வது உறுதிப்படுத்தப்படும். அதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறேன்.
வறுமையிலிருந்து விடுபட வேண்டும்: தேசத்தில் வறுமை ஒழிக்கப்பட வேண்டுமானால், உத்தரப் பிரதேசம், பிகார், மகாராஷ்டிரம் போன்ற மிகப் பெரிய மாநிலங்களில் முதலில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
மிகப் பெரிய மாநிலங்களில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும்போது வறுமை நிலையில் சிக்கித் தவிக்கும் மக்களின் எண்ணிக்கை குறையும்.
கிராமங்களில் வசிப்பவர்கள் தொலைக்காட்சியில் வரும் நிகழ்ச்சிகளைப் பார்க்க வேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால், இன்னமும் பல கிராமங்களில் மின்சார வசதி கிடைக்காமல் உள்ளது.
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை மூலம் மீட்கப்படும் கருப்புப் பணம், ஏழைகளின் நலத் திட்டங்களுக்காகப் பயன்படுத்தப்படும்.
ரூபாய் நோட்டு விவகாரம் காரணமாக பயிர் விதைப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
ஆனால், இத்தனை பிரச்னைகளுக்கு மத்தியிலும் பயிர் விதைப்புக்கு பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொண்ட விவசாயிகளுக்கு எனது மனமார்ந்த நன்றி என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

"டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு இந்தியா தயார்'

ஊழலுக்கு வழிவகுக்கும் ரொக்கப் பணப் புழக்கத்தைக் குறைப்பதற்காக நாட்டு மக்கள் அனைவரும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறைக்கு மாற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
ஏடிஎம் மையங்களில் நீங்கள் (மக்கள்) பணம் எடுக்கத் தேவையில்லை. இன்றைய காலத்தில் ஸ்மார்ட்ஃபோன் மூலம் வங்கிக் கணக்கை இயக்கி, நாம் வாங்கும் பொருள்களுக்கும், இதர சேவைகளைப் பெறவும் பணம் செலுத்த முடியும்.
நாட்டில் 40 கோடி பேர் ஸ்மார்ட்ஃபோன்களைப் பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் அனைவரும் டிஜிட்டல் வழியில் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம்.
கல்வி அறிவு இல்லாதவர்கள் எவ்வாறு செல்லிடப்பேசியில் தங்களது வங்கிக் கணக்கைப் பயன்படுத்தி பணத்தை செலவு செய்ய முடியும் என்று சிலர் வாதம் செய்ய வாய்ப்பிருக்கிறது.
இந்தியர்கள் எப்போதும் மாற்றத்துக்குத் தயாராக இருப்பார்கள் என்று அவர்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன்.


பிச்சைக்காரரிடம் ஸ்வைப் மெஷின்

கட்சிசெவி அஞ்சலில் (வாட்ஸ் அப்) ஒரு விடியோ பரவி வருகிறது. அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. அந்த விடியோவில், "பண உதவி செய்ய விரும்புவதாகவும், அதேநேரம் தன்னிடம் சில்லறை இல்லை' என்றும் பிச்சைக்காரரிடம் ஒருவர் கூறுகிறார். அதற்கு "சில்லறை இல்லையென்பதால் கவலைப்படத் தேவையில்லை; நீங்கள் விரும்பினால் என்னிடம் உள்ள பணம் செலுத்தும் இயந்திரம் (ஸ்வைப் மெஷின்) மூலம் எனக்கு விரும்பும் தொகையை பற்று அட்டையைப் பயன்படுத்திக் கொடுக்கலாம்' என்று அந்த பிச்சைக்காரர் கூறுகிறார்.



வரிசையில் நிற்பது இதுவே கடைசி

புதிய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதுடன் மக்கள் வரிசையில் நிற்கும் முறை முடிவுக்கு வந்துவிடும் என்று உறுதி அளிக்கிறேன்.
ஏனென்றால், கடந்த 70 ஆண்டுகளாக அத்தியாவசியத் தேவைகளுக்காக நீங்கள் வரிசையில் நின்றுகொண்டிருந்தீர்கள்.
சர்க்கரை, மண்ணெண்ணெய், கோதுமை என அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்காக நீங்கள் (காங்கிரஸ்) மக்களை வரிசையில் நிற்க வைத்தீர்கள்.
அதுபோன்று மக்கள் இனி வரிசையில் நிற்கத் தேவையில்லை. புதிய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக வரிசையில் நிற்பதே கடைசியாக நீங்கள் அத்தியாவசியத் தேவைக்காக வரிசையில் காத்திருந்ததாக இருக்கும்.
நேர்மையான முறையில் பணம் சம்பாதித்தவர்கள் மட்டுமே வரிசையில் நிற்கிறார்கள். சட்டவிரோதமாக பணம் வைத்திருந்தவர்கள் ஏழைகளின் வீட்டுக்கு முன்பு வரிசையில் காத்திருக்கின்றனர்.
அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை செல்லாது என்ற அறிவித்ததற்காக எதிர்க்கட்சியினர் என்னை குற்றவாளியாக சித்திரிக்கின்றனர்.
எது நடந்தாலும் ஊழலுக்கும், ஊழல்வாதிகளுக்கும் எதிரான நடவடிக்கைகளில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்று உறுதிமொழி எடுத்திருக்கிறேன்.
ஒரு விஷயத்தின் பின்னணியில் உள்ள சரியான காரணத்தைத் தெரிந்துகொண்டால், எந்தவொரு புதிய மாற்றத்தையும் ஏற்க இந்தியர்கள் நீண்டகாலம் எடுத்துக் கொள்ளமாட்டார்கள்.

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...