Thursday, January 12, 2017

இந்தியாவிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பான நகரம் கோவை.. எப்படி?

இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக கோவை தேர்வு  செய்யப்பட்டுள்ளது. பெண்களை மரியாதையாக நடத்துவதில் கோவைவாசிகள் சிறந்தவர்கள் என தேசிய குற்றப்பதிவுகள் ஆவணம் (2015ன்படி) தெரிவிக்கிறது. 
நாட்டின் தலைநகரமான டெல்லி நிச்சயம் பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக அல்ல. அங்கு பாலியல் பலாத்காரம், ஈவ்டீசிங் அடிக்கடி நடக்கும். வர்த்தக நகரமான மும்பையிலும் அதே நிலைதான். இந்தியாவின் இன்டர்நெட் நகரம் என்று  அழைக்கப்படும் பெங்களூருவில், புத்தாண்டு இரவு கொண்டாட்டங்களின் போது பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட வீடியோ ஆதாரங்கள் வைரலானது. 
நாட்டில் பெரும்பாலான நகரங்கள் பெண்களுக்கு பாதுகாப்பற்றதாக மாறி வரும் நிலையில், தமிழக நகரங்கள் பெண்களுக்கு பாதுகாப்பு மிகுந்ததாக விளங்குவதாக குற்றப்பதிவு ஆவணத்தின் பதிவுகள் சொல்கிறது. 
இந்தியா முழுவதும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் முக்கிய குற்றங்களை மையமாக வைத்து, குற்றச்செயல்கள் ஆராயப்பட்டது. பாலியல் பலாத்காரம், பலாத்கார முயற்சி, வரதட்சணைக் கொடுமை, பாலியல் தொல்லை, பாலியல் துன்புறுத்தல், கணவர் கொடுமை, கணவரின் உறவினர்களால் கொடுமை போன்ற 7 குற்றச் செயல்களை மையமாக வைத்து ஆய்வு செய்யப்பட்டது. 
பாதுகாப்பான நகரம் கோவை
அதில், இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக கோவை தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 53 நகரங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரமாக இந்தியாவில் ஜோத்பூர் இருக்கிறது. கோவையில் 0.01 குற்றச் செயல் என்றால் ஜோத்பூரில் 0.54 என பெண்களுக்கு எதிரான குற்றச் செயல் நிகழ்கிறது. 
கோவை முதலிடம் பிடிக்க பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. வீடுகளில் பெண் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, நன்றாக படிக்க வைப்பது, பொதுவாகவே பெண்களை மரியாதையாக பார்க்கும் கண்ணோட்டம் கோவைவாசிகளிடம் இருக்கிறதாம். பெண்களை மரியாதையாக நடத்துவதிலும் கோவை முதலிடம் பிடிக்கிறது. 
பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை தலைநகர் சென்னை பிடித்திருக்கிறது. ஐந்தாவது இடத்தை திருச்சி 0.03 புள்ளிகளுடன் பெற்றுள்ளது. இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் முதல் 10 நகரங்களில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று நகரங்கள் பெற்றுள்ளன. அதே வேளையில் பாதுகாப்பற்ற நகரங்கள் பட்டியலில் முதல் 10 இடத்தில் எந்த தமிழக நகரங்களும் இடம் பெறவில்லை என்பதும் மகிழ்ச்சிக்குரிய விஷயம். இது வேறு எந்த மாநிலத்துக்கும் கிடைக்காத பெருமை.
தமிழகத்தை அடுத்து கேரளத்தைச் சேர்ந்த கண்ணூர், மலப்புரம் பாதுகாப்பான முதல் பத்து நகரங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. கண்ணூர் நகரத்தை கேரளத்தின் பீகார் என்பார்கள். வன்முறைக்கு பெயர் போன நகரம். ஆனாலும் பெண்கள் பாதுகாப்பில் கண்ணூர் நகரம் அகில இந்திய அளவில் 4-வது இடத்தைப் பெற்றுள்ளது. 
பாதுகாப்பான நகரங்கள்: கோவை 0.01, சென்னை 0.01, சூரத் 0.3, கண்ணூர் 0.03, திருச்சி 0.03, அகமதாபாத் 0.04, மலப்புரம் 0.05, வதோரா 0.06, ராஜ்கோட் 0.06, கொல்கத்தா 0.07. சென்னை, கொல்கத்தா ஆகிய இரண்டு மெட்ரோ நகரங்கள் மட்டுமே இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. 
பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரங்கள் பட்டியலில் ராஜஸ்தானின் ஜோத்பூர் 0.54 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. தலைநகர் டெல்லி 0. 47 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடிக்கிறது. பாட்னா, கேட்டா, குவாலியர், அசன்சால், விஜயவாடா, பரீதாபாத், மீரட், ஜெய்ப்பூர் நகரங்கள் முதல் பத்து இடங்களில் உள்ளன.

No comments:

Post a Comment

MCC moves to lower qualifying percentile

 MCC moves to lower qualifying percentile  PG MEDICAL INTAKE HALTED  TIMES NEWS NETWORK  11.01.2026 Ahmedabad : Round 3 of PG medical counse...