Sunday, January 8, 2017

 வெற்று ‘கதறல்‘களாக மாறிப்போன இடிமுழக்கம்..! நாஞ்சில் சம்பத் கடந்து வந்த பாதை

பேச்சு தான் திராவிட கட்சிகளின் மூலதனம். திராவிட கட்சிகள் தமிழகத்தில் காலூன்றவும், 50 ஆண்டுகாலம் தங்களை ஆட்சி பீடத்தில் தக்க வைத்துக்கொள்ளவும் மிக முக்கிய காரணமாக இருந்தது திராவிட இயக்க பேச்சாளர்களின் நாவன்மையே. பேரறிஞர் அண்ணாவில் துவங்கி, கலைஞர், நெடுஞ்செழியன், ஈ.வெ.கி.சம்பத், மதியழகன், அன்பழகன், வைகோ, நாஞ்சில் சம்பத் என நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும்.
எல்லா பேச்சாளர்களும் பேச்சுத் தமிழில் பேசிய போது, திராவிட தலைவர்களும், பேச்சாளர்களும் செந்தமிழில் பேசினார்கள். கல்வியறிவு இல்லாத பாமர மக்களையிடையே பேசும் போது செந்தமிழ் எதற்கு என கேள்வி எழுந்தது. ஆனால் அது தான் வெற்றி பெற்றது. காரணம் தமிழின் பெருமைகளை கொண்டு சேர்க்க, தமிழ் பண்பாட்டை சொல்லி விளக்க செந்தமிழில் தான் பேச வேண்டியிருந்தது. அதுவே அவசியப்பட்டது.
சொல் மாறாமல் பேசுபவர்...
நிகழ்வுகளை அடுக்கி, அதில் மக்களின் சந்தேகங்களை போக்கி.. தாங்கள் சொல்ல வந்ததை மக்களிடம், தங்களின் நாவன்மையால் கொண்டு சேர்த்து விடுவார்கள் இந்த பேச்சாளர்கள். அவர்களில் ஒருவர் தான் நாஞ்சில் சம்பத்
குற்றால அருவியாக கொட்டும் பேச்சாற்றல், பிசிறு தட்டாத வார்த்தை ஜாலம், குறிப்புகள் ஏதும் இன்றி உலக நிகழ்வுகளை சமகால நிகழ்வுகளுடன் எடுத்துரைக்கும் பாங்கு என எல்லா ஆற்றலும் கொண்ட நாஞ்சில் சம்பத்தின் நாவில் இருந்து நர்த்தனம் ஆடிய வார்த்தைகளுக்கு ஆயிரமாயிரம் பேர் அடிமைகளாக இருந்துள்ளனர். நாக்கு பிறழாமல், ஒரு சொல் கூட மாறாமல், சொற்களை செதுக்கும் வல்லமை வாய்ந்தவராய் இருந்தார் நாஞ்சில் சம்பத். ஆனால் இப்போது அவர் அப்படியில்லை என்பது உண்மை.
தேன் கசந்து போனது...
நாஞ்சில் சம்பத், ம.தி.மு.க.வில் இருந்த போது வைகோவின் போர்வாள் என புகழப்பட்டவர். கட்சியில் வைகோவுக்கு அடுத்தபடியாக அபாரமான பேச்சாற்றலுடன் வலம் வந்தவர். ம.தி.மு.க.வில் இருந்து நிர்வாகிகள் பலர் வெளியேறிய நெருக்கடியான காலகட்டத்தில், "கலசங்கள் விழுவதால் கோபுரங்கள் சாயப்போவதில்லை. கலசங்கள் கீழே விழத்தான் செய்யும். ம.தி.மு.க. ஒரு வெண்கலப்பானை. கீழே விழும். சத்தம் கேட்கும். ஆனால் உடையாது.  ம.தி.மு.க. என்பது தேன். தேன் தானும் கெடாது. தன்னை சார்ந்து இருப்பவர்களையும் கெட விடாது. இந்த இயக்கத்தில் இருந்தால் மரியாதை. அதை விட்டுப் போனால் அவமரியாதை என்பதை வரலாறு பல பேருக்கு கற்பித்து கொடுத்துள்ளது"  எனப்பேசி வலம் வந்தார்.
ஒரு கட்டத்தில் ம.தி.மு.க.வில் இருந்த சம்பத்துக்கும் வைகோவுக்கும் இடையே உரசல் என செய்திகள் வெளியாக அதை மறுத்தார். இது தொடர்பாக எழுந்த சந்தேகங்களுக்கு பதிலளித்து பேசிய நாஞ்சில் சம்பத், ‘‘ராமாயணத்தில் வரும் அனுமன் தனது நெஞ்சில் ராமன் இருப்பதை பிளந்து காட்டியது போல, எனது ஒரே தலைவன் வைகோ தான். அவரைத் தவிர என் நெஞ்சில் யாரும் இல்லை என மார்பை பிளந்து காட்டவும் தயாராகவும் இருக்கிறேன்’’ என உணர்ச்சி மிகுதியில் பேசினார்.
சர்ச்சையை ஏற்படுத்திய அந்த பேச்சு...
ஆனால் அடுத்த ஒரு வாரத்தில், பதவியும், பகட்டான காரையும் பெற்றுக்கொண்டு அ.தி.மு.க.வில் ஐக்கியமானார் நாஞ்சில் சம்பத். அரசியல் பற்றி பேசும்போது பிழைகள் கூடாது என்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் பிழைகளுடன் பேசவே அரசியல் தலைவர்கள் விரும்புகிறார்கள். அதற்கு உதாரணமாக மாறிப்போனார் நாஞ்சில் சம்பத். எந்த பேச்சால் விரும்பப்பட்டாரோ, அதே பேச்சால் ஓரங்கட்டப்பட்டார்.
2015 டிசம்பரில் சென்னையில் கொட்டி தீர்த்த மழையை எட்டிப் பார்க்க கூட முடியாத ஆட்சியாளர்களின் செயலை நியாப்படுத்தும் விதத்தில் பேசி மக்களை கோப்படுத்தினார். வெள்ளம் பாதித்த நிலையிலும், அதிமுக பொதுக்குழு கூட்டம் கோலாகலமாக நடைபெற்றதே என்ற கேள்விக்கு, "ஒரு வீட்டில் இழவு விழுந்து விட்டது என்பதற்காக, இன்னொரு வீட்டில் கல்யாணம் நடக்காமல் இருக்குமா?" என்றும், "யானைகள் நடக்கும் போது சில எறும்புகள் சாகத்தான் செய்யும்" என்றும் இவர் பேசிய எதுகை மோனை பேச்சை மக்கள் ரசிக்கவில்லை.
இந்த பேச்சு மக்களை மட்டுமல்லாது, ஆட்சி செய்த ஜெயலலிதாவையும் கோபப்படுத்தியது. அதனாலே மேடைகள் கொடுக்காமல் ஓரங்கட்டியது தலைமை. மீண்டும் தேர்தல் வர பிரசாரத்துக்கு ஆள் வேண்டுமே என்பதற்காக மீண்டும் சேர்க்கப்பட்டார் நாஞ்சில் சம்பத். தேர்தலுக்கு பின்னர் மீண்டும் ஒதுக்கி வைக்கப்பட்டார்.
முதலில் எதிர்ப்பும், பின்னர் ஆதரவும்...
இந்த நேரத்தில்தான் ஜெயலலிதா மரணம் நிகழ்ந்தது. ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாய் எழுந்த கருத்தை நாஞ்சில் சம்பத்தும் ஆமோதித்திருந்தார். ‘‘தொண்டர்கள் நினைப்பது சரிதான். தொண்டர்களின் சந்தேகத்தை  அ.தி.மு.க தலைமை தீர்த்து வைக்க வேண்டும்" "சசிகலாவுக்கு மட்டும்தான் பொதுச் செயலாளர் ஆகும் தகுதி இருக்கிறது என்றால் அவரை பொதுச் செயலாளராக ஏற்றுக்கொள்ளும் தகுதி எனக்கில்லை’’ என அவரது பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியது. ஜெயலலிதா தனக்கு கொடுத்த காரை அ.தி.மு.க. தலைமையிடம் திருப்பிக்கொடுத்தார் நாஞ்சில் சம்பத். அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக சொன்னார். பொதுமேடையில் அரசியல் பேசுவதை தவிர்த்தார்.
ஆனால் இந்த செய்திகளின் தாக்கம் மறைவதற்குள், யாரை எதிர்த்து பேசினாரோ, யாருக்கு தகுதி இல்லை என்று மறைமுகமாக சாடினாரோ, அதே சசிகலாவை சந்தித்து வாழ்த்து பெற்று, மீண்டும் அ.தி.மு.க.வின் பேச்சாளர் அவதாரம் எடுத்திருக்கிறார்.
பெரும்பாலும் கட்சி விட்டு கட்சி மாறும் பேச்சாளர்கள்,  தங்கள் சுயத்தை இழந்து விடுகிறார்கள். ஏற்கெனவே இரு முறை கட்சி மாறி, இப்போது மாறிய தலைமையை ஏற்றுள்ள நாஞ்சில் சம்பத் நிலையும் இது தான். எந்த பேச்சால் பெரும்பாலானோரை கவர்ந்தாரோ, அதே பேச்சால் இப்போது அவமானப்பட்டு நிற்கிறார் நாஞ்சில் சம்பத்.
போதையில் இருப்பவர் பேச்சு நிலையாக இருக்காது என்பார்கள். நாஞ்சில் சம்பத்தும் போதையில் தான் இருக்கிறார். அது அரசியல் போதையா? பதவி போதையா? என தெரியவில்லை. அதை நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.
- இரா.மோகன்.

No comments:

Post a Comment

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question CBI to question actor-TVK chief on crowd control la...