Saturday, January 14, 2017

 விஜய்-யின் பைரவா: சினிமா விமரிசனம்

ஒரு வழக்கமான வெகுஜன மசாலா திரைப்படம் இது. விஜய் போன்ற மக்கள் திரளின் பெரும் அபிமானம் பெற்ற நடிகர்கள், தங்களின் பாதுகாப்பான பாதையிலிருந்து விலகவே விரும்பவில்லை என்பதை உறுதிப்படுத்தியிருக்கும் இன்னொரு சலிப்பான படைப்பு. சமகால சமூகப் பிரச்னைகளை ஊறுகாயாகத் தொட்டுக்கொண்டு அதன்மூலம் தன்னை அவதார நாயகனாக முன்நிறுத்திக் கொள்ளும் எம்.ஜி.ஆர் காலத்து ஃபார்முலாவை 'பைரவா'வும் சலிக்க சலிக்கப் பின்பற்றியிருக்கிறது. 'கத்தி' திரைப்படத்தில் விவசாயிகளின் பிரச்னைகளைப் பற்றி பேசுவதாக அமைந்த பாவனை, இத்திரைப்படத்தில், ரவுடிகளாக இருந்தவர்கள் கல்வித் தந்தைகளாக மாறியிருக்கிற ஆபத்தைப் பற்றியதாக மாறியிருக்கிறது.
அவ்வளவே. மற்றபடி வெகுஜன திரைப்படத்தின் அதே வழக்கமான விஷயங்கள். 
 ***
நாயகன் (விஜய்) சென்னையில் கலெக்ஷன் ஏஜெண்ட்டாகப் பணிபுரிபவன். பெரும் நிதியைக் கடனாக வாங்கிவிட்டு பிறகு வங்கி அதிகாரியை மிரட்டி ஏமாற்ற முயலும் ரவுடிக்கும்பலை அடித்து உதைத்து பணத்தை மீட்கும் சாகசங்களோடு படம் தொடங்குகிறது. அதிகாரியின் மகளுடைய திருமணத்துக்குச் செல்லும்போது நாயகியிடம் (கீர்த்தி சுரேஷ்) வழக்கம்போல் முதல் சந்திப்பிலேயே காதலில் விழுகிறான். அவளுக்குப் பின்னால் சில ஆபத்துகள் ஒளிந்திருப்பதை அறிகிறான். என்னவென்று விசாரிக்கிறான். நாயகி படிக்கும் மருத்துவக் கல்லூரி தொடர்பான மோசடிகளை அறிகிறான். கசாப்புக் கடை வைத்திருந்த ரவுடியொருவன் தனது பலத்தின் மூலமும் அரசியல் தொடர்பின் மூலமும் கட்டியிருக்கும் வணிக சாம்ராஜ்யத்தை நாயகன் வீழ்த்தும் காட்சிகளோடு படம் நிறைகிறது. முதல் பாதி சென்னையிலும் பிற்பாதி நெல்லையிலும் நிகழுமாறு காட்சிகள் அமைகின்றன.

வெகுஜன மனநிலைக்கு இணக்கமான ஒரு திரைப்படத்தை உருவாக்குவது அத்தனை சுலபமான விஷயமில்லை. எந்த அடுக்கில் காட்சிகளை எப்படி அடுக்கினால் அவர்கள் ரசிப்பார்கள் என்பது தொடர்பான நுணுக்கங்கள் அத்துப்படியாக தெரிந்திருக்கவேண்டும். இயக்குநர் பரதனுக்கு இதில் அடிப்படையான திறமை வாய்த்திருக்கிறது. 'பைரவா'விலும் அப்படி ரசிக்கக்கூடிய சில காட்சிகள் இருக்கின்றன. இந்தக் கதை சொல்லும் திறமையை வைத்துக்கொண்டு ஒரு புதிய களத்தில், பாணியில் இறங்கி விளையாடினால் பார்வையாளர்கள் நிச்சயம் வரவேற்பார்கள். ஆனால் தேய்வழக்கான திரைக்கதை, காட்சிகளின் மிகையான வடிவமைப்பு போன்றவை சலிப்பூட்டுகின்றன.

விஜய்க்கு 42 வயதாகிறது. ஆனால் இன்னமும் தன் இளமையைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறார் என்பது ஆச்சர்யம். ஒரு காட்சியில் தன் சட்டையைக் கழற்றி விட்டு ஓடுகிறார். அவர் தன் உடலை கச்சிதமாக வைத்துக் கொண்டிருக்கும் விதம் பாராட்ட வைக்கிறது. ஆனால் இளமை மாறாதிருப்பதைப் போலவே அவருடைய நடிப்பிலும் பல வருடங்களாக மாற்றமில்லை என்பதுதான் அதிகம் சோர்வூட்டக்கூடியது. 'பைரவா'வில் அவருடைய தலையில் 'விக்' சேர்ந்திருப்பதுதான் கவனிக்கத்தக்க மாற்றம்.
கீர்த்தி சுரேஷ் வழக்கமான நாயகி. சில கோணங்களில் அழகாகவே இருக்கிறார். ஜெகபதி பாபு வழக்கமான வில்லன். துணை வில்லனான டேனியல் பாலாஜி சிறிது வித்தியாசம் காட்ட முயன்றிருக்கிறார். ஆனால் பாவம், அவரும்தான் என்ன செய்யமுடியும்?

Laughing gas துணை கொண்டு பாத்திரங்களைச் சிரிக்க வைப்பது போல சில காட்சிகள் வருகின்றன. சதீஷூம் தம்பி ராமையாவும் அவ்வாறே நம்மைச் செயற்கையாக சிரிக்க வைக்க முயல்கிறார்கள். ஒன்றும் தேறவில்லை. விஜயராகவன் போன்ற அற்புதமான மலையாள நடிகர்கள் எல்லாம் ஓரமாக வந்து வீணடிக்கப்பட்டிருக்கிறார்கள்.
***
இதன் உருவாக்கத்தில் குறிப்பிட்டு பாராட்டப்பட வேண்டியவர்களாக ஒளிப்பதிவாளர் எம்.சுகுமாரையும் சண்டைக்காட்சி வடிவமைப்பாளர் அனல் அரசுவையும் சொல்ல வேண்டும். இவர்களின் கூட்டணி ஒத்திசைவில் சண்டைக்காட்சிகள் மிகையாக இருந்தாலும் அனல் தெறிக்கிறது. ஆனால் இவர்கள் போன்றவர்களின் அசாதாரணமான உழைப்பு மோசமான திரைக்கதைகளுக்காக வீணாகிக்கொண்டிருக்கும் பரிதாபமும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து நிகழ்கிறது.

தாம் நிரம்பும் பாத்திரத்துக்கேற்ப நீர் தன்னை உருமாற்றிக் கொள்வதற்கேற்ப, சந்தோஷ் நாராயணன் போன்ற புதுமையான இசையமைப்பாளர்களும் வணிகப்படங்களுக்கேற்ப மாற வேண்டிய பரிதாபம். 'நில்லாயோ' பாடல் மட்டும் அருமை. 'காற்றின் உடலா, பெண்பால் வெயிலோ' என்று வசீகரிக்க முயன்றிருக்கிறார் வைரமுத்து. இதர பாடல்கள் சப்தங்களின் தொகுப்பு. 'வர்லாம் வா' பாடலும் அதன் இசையும் அவசியமான இடங்களில் படத்தின் விறுவிறுப்புக்கு நன்றாக உதவியிருக்கிறது. ஒரு சண்டைக்காட்சியில் வழக்கமான பின்னணி இசையாக அல்லாமல் மாறுதலான இசையை சந்தோஷ் முயன்றிருப்பது வரவேற்கத்தக்கது.

விறுவிறுப்பான காட்சியோடு தொடங்கும் திரைப்படம், கீர்த்தி சுரேஷ் தன் ஃபிளாஷ்பேக்கை விவரிக்கும் நீளமான பின்னணிக் காட்சிகளால் சுவாரசியத்தை இழந்துவிடுகிறது. பிறகு நாயகன் வில்லனை வெற்றி கொள்ளும் காட்சிகள். அத்தனை பலம் பொருந்திய வில்லனை ஒற்றை ஆளாக நாயகன் எதிர்கொள்வது சிரிப்பைத்தான் வரவழைக்கிறது. எதிலுமே புதுமையோ, வித்தியாசமோ இல்லை. நாயகனின் உடலில் எரிபொருளை வீசி தீப்பற்ற வைக்கும் காட்சி சற்று ஆர்வத்தை தூண்டி, பிறகு எதுவுமே இல்லாமல் அணைந்து போகிறது. போலவே இதன் கிளைமாக்ஸ். இப்படியொரு உச்சக்காட்சியை சிந்திப்பதற்கெல்லாம் ஹாலிவுட்டுக்கே சவால் விடும் மூளையமைப்பும் துணிச்சலும் வேண்டும். திருநெல்வேலியில் காவல்துறை அதிகாரியாக இருக்கும் நாயகியின் தந்தையே அங்குள்ள கல்லூரி மோசடிகளை அறியாத அப்பாவியாக இருக்கிறார் என்பது போன்று பல தர்க்கப் பிசிறுகள்.

சமூகப் பிரச்னைகளைத் தங்களின் வணிகத்துக்காகத் தந்திரமாகப் பயன்படுத்தும் இதுபோன்ற திரைப்படங்கள் தமிழ் சினிமாவின் ஆகப் பெரிய சோகங்களுள் ஒன்று.
Dailyhunt

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...