Tuesday, January 10, 2017

தவிர்க்க முடியாது!

By ஆசிரியர்  |   Published on : 10th January 2017 01:11 AM
சில நீதிமன்றத் தீர்ப்புகள் யதார்த்த நிலையைப் பிரதிபலிப்பதாக அமைவதில்லை. அப்படி ஒரு தீர்ப்பு ஜனவரி 2-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்டிருக்கிறது. தீர்ப்பின் நோக்கம் உன்னதமானது என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், அது நடைமுறை சாத்தியமா என்றால் இல்லை.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 123(3)இன்படி, வேட்பாளரோ அவரது முகவரோ அல்லது அவரது ஒப்புதலுடன் வேறு ஒருவரோ மதம், ஜாதி, இனம், குழு, மொழி ஆகியவற்றின் பெயரால் வாக்குகள் கோருவது தடை செய்யப்பட்டிருக்கிறது. இப்படியொரு பிரிவு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் இருக்கிறதே தவிர, இது அப்படியே பின்பற்றப்படுகிறதா என்றால் இல்லை.

பின்பற்ற முடியுமா என்று கேட்டால், அதுவும் சாத்தியம் என்று முடியவில்லை.

உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு இந்தச் சட்டப் பிரிவின் வரம்பை அதிகரித்து விட்டிருக்கிறது. இந்தத் தீர்ப்புக்குப் பிறகு பெரும்பாலான வேட்பாளர்கள் போட்டியிட முடியாத சூழல் ஏற்படக்கூடும். ஏழு பேர் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வில் நான்கு பேரின் பெரும்பான்மையுடன் அறிவிக்கப்பட்டிருக்கும் தீர்ப்புப்படி, இனிமேல் 90% வேட்பாளர்களின் வெற்றி நீதிமன்றங்களில் தடை கோரப் படலாம்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, ஏதாவது ஒரு மதத் தலைவரோ, ஜாதி சங்கத் தலைவரோ, குறிப்பிட்ட வேட்பாளரின் ஒப்புதலுடன், அவருக்கு வாக்களிக்கும்படியோ, அல்லது எதிர்த்து நிற்பவருக்கு வாக்களிக்காமல் இருக்கும்படியோ வேண்டுகோள்

விடுத்தால், அந்த குறிப்பிட்ட வேட்பாளர் பதவி இழக்கக் கூடும். வேட்பாளரின் ஒப்புதலுடன்தான் அந்த மதத் தலைவர் அல்லது ஜாதி சங்கத்தைச் சேர்ந்தவர் வேண்டுகோள் விடுத்தார் என்பதை எப்படி உறுதிப்படுத்துவது என்பதை உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தவில்லை.
இது ஏதோ ஜாதி அல்லது மதத்தின் பெயரால் விடுக்கப்படும் வேண்டுகோள்களுக்கோ, பிரசாரத்திற்கோ மட்டுமானதல்ல. மொழியின் பெயரால் ஒரு வேட்பாளர் வாக்குக் கேட்டாலும், இனத்தின் பெயரால் வாக்குக் கேட்டாலும்கூடப் பொருந்தும் என்பதை நாம் கவனிக்க வேண்டும். குறிப்பிட்ட நபர், தான் தேர்ந்தெடுக்கப்பட்டால், தாய்மொழிக்காகப் போராடுவேன் என்பதைத் தேர்தல் பிரச்னையாக்க முடியாது. முல்லைப் பெரியாறு பிரச்னையிலோ, காவிரி நீர்ப் பிரச்னையிலோ தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது என்று தமிழினத்தின் பெயரால் வாக்குகள் கோர முடியாது.

நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படையே அடையாள அரசியல்தான். ஜாதி ரீதியாக, மத ரீதியாக, இன ரீதியாக, மொழிவாரியாகப் பிரிந்து கிடக்கும் நாடு இந்தியா. ஆனாலும் நாம் கடந்த 70 ஆண்டுகளாக ஒரே தேசமாகத் தொடர்கிறோம் என்றால் அதற்குக் காரணம், எல்லா பிரிவினரும் தங்களது அடையாளத்தை இழந்துவிடாமல் பாதுகாத்துக்கொள்ள முடிகிறது என்பதுதான்; நாடாளுமன்ற ஜனநாயகத்தில் எல்லா பிரிவினரும் பங்கு பெற முடிவதால்தான். அதற்கு அடையாள அரசியல் உதவுகிறது.

தெலுங்குதேசம் கட்சி, அஸ்ஸாம் கண பரிஷத் போன்று அந்தந்த மாநிலம் சார்ந்த அடையாளத்தை முன்னிலைப்படுத்தி அரசியல் நடத்துவதும், அகாலி தளம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்று மதத்தின் அடையாளத்தை முன்னிலைப்படுத்தி அரசியல் நடத்துவதும் தவறு என்று ஒதுக்கிவிட முடியாது. அனைத்துத் தரப்பினருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கிறார்கள் என்றாலும் பகுஜன் சமாஜ் கட்சி என்பது சமார் பிரிவு பட்டியல் ஜாதியினரின் கட்சி என்றும், சமாஜவாதி கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகியவை யாதவர்களின் கட்சி என்றும், ராஷ்ட்ரிய லோக தளம் ஜாட்களின் கட்சி என்றும்தான் அடையாளம் காணப்படுகின்றன.

தமிழகத்தில் தங்களை திராவிடக் கட்சிகள் என்று அழைத்துக் கொள்ளும் கட்சிகள், தமிழினத்தின் அடையாளத்தைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டிருப்பதாகத்தான் சொல்லிக் கொள்கிறார்கள். ஏனைய பல ஜாதிக் கட்சிகள் தங்களுக்கு ஜாதி முலாம் பூசப்படுவதை ஏற்றுக் கொள்ள மறுத்தாலும்கூட அவர்களை மக்கள் குறிப்பிட்ட ஜாதி அடையாளத்துடன்தான் பார்க்கிறார்கள். ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கென்று பொதுவான கொள்கைகளைக் கொண்டிருந்தாலும் அவர்களது நோக்கம் என்னவோ குறிப்பிட்ட ஒரு பிரிவினரின் அடையாளமாகத் திகழ்வதுதான். அந்தப் பிரிவினரின் வாக்கு பலத்தில்தான் அதன் தலைவர்கள் வலம் வருகிறார்கள்.
இதெல்லாம் தவறு என்று அறிவுஜீவிகள் வாதம் செய்யலாம். மதத்தின் பெயரால் வாக்கு கோருவது தவறு என்று முழங்கும் பலர், ஜாதியின் பெயராலும், இனத்தின் பெயராலும், மொழியின் பெயராலும் வாக்குக் கோருவதை ஏற்றுக் கொள்ளும் போலித்தனம் காணப்படுகிறது. இவர்களைவிட வாக்காளர்கள் புத்திசாலிகள். அவர்கள் அடையாளத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு எந்தத் தேர்தலிலும் இந்தியாவில் வாக்களித்ததில்லை.

இந்தத் தீர்ப்புக்கு எதிராகக் கருத்துக் கூறிய மூன்று நீதிபதிகளின் வாதத்தில்தான் யதார்த்தம் இருக்கிறது. "மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை நீதிமன்ற உத்தரவுகள் மூலம் களைந்துவிட முடியாது. கடந்த ஐம்பது ஆண்டுகளாக வெற்றிகரமாகத் தேர்தல் நடத்தப்பட்டு ஆட்சி மாற்றங்களும் ஏற்பட்ட வண்ணம்தான் இருந்து வருகிறது. மக்களாட்சியில் மக்களே இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்ப்பளித்துக் கொள்வார்கள்' என்கிற அவர்களது கருத்துதான் நடைமுறை சாத்தியம்.
அடையாள அரசியல் இருந்தால்தான் இந்தியா போன்ற தேசத்தில் இருக்கும் எல்லா பிரிவினரின் உணர்வுகளையும் தேர்தல் மூலம் பிரதிபலிக்க முடியும். அடையாள அரசியலில் தவறில்லை, துவேஷ அரசியல்தான் தவறு!

No comments:

Post a Comment

New SOP for oncologists in TN to treat ovarian, cervical, uterine cancer

New SOP for oncologists in TN to treat ovarian, cervical, uterine cancer  The new SOP requires official government mandates, structured trai...