Wednesday, January 11, 2017

காட்டுமிராண்டித்தனம்!

By ஆசிரியர்  |   Published on : 11th January 2017 01:30 AM  

ஊடக வெளிச்சமும், நாடு தழுவிய அளவில் விவாதமும் கிடைக்க வேண்டுமென்றால் தலைநகர் தில்லியில் நிர்பயாவுக்கு நிகழ்ந்தது போல ஒரு சம்பவம் நடந்தால் மட்டுமே சாத்தியம் என்பதை நிரூபித்திருக்கிறது, புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது பெங்களூருவில் நடந்தேறிய அராஜகம். புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்காக பெங்களூரு மகாத்மா காந்தி சாலையிலும், பிரிகேட் சாலையிலும் நள்ளிரவில் கூடியிருந்த பல பெண்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாகி இருக்கிறார்கள். இது ஏன் நாடு தழுவிய அளவில் விவாதப் பொருளாகவும், கண்டனத்துக்குரியதாகவும் மாறவில்லை என்பது வியப்பை ஏற்படுத்துகிறது.

ஆண்டுதோறும் பெங்களூருவில் முக்கியமான பகுதிகளான எம்.ஜி. ரோடு, பிரிகேட் சாலை பகுதிகளில் புத்தாண்டு இரவு கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். தகவல் தொழில்நுட்பத் தலைநகராக பெங்களூரு மாறியது முதல், இந்தியாவின் பல பகுதிகளிலிருக்கும் பெண்களும் நூற்றுக்கணக்கில் இதில் கலந்து கொள்ளத் தொடங்கி இருக்கிறார்கள்.

இந்த ஆண்டும் வழக்கம்போல அங்கே உற்சாகமாகக் கூடிய பெண்களுக்கு புத்தாண்டு இரவு, அவர்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத இரவாகி விட்டிருக்கிறது. அந்த இரவில் மது வெறியில் இருந்த ஆண்களின் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் என்கிறது சில பார்வையாளர்களின் பதிவு. இத்தனைக்கும் அந்தப் பகுதியில் மட்டும் ஏறத்தாழ 1,500க்கும் அதிகமான காவல்துறையினர் அப்போது பணியில் இருந்திருக்கிறார்கள்.

அந்தப் பகுதியில் நிறுவப்பட்டிருப்பதாகக் கூறப்படும் கண்காணிப்பு காமிராக்களின் மூலம், குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்படுவதும், அவர்கள் மீது முறையாக வழக்குப் பதிவு செய்வதும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆறுதலளிப்பதும் தானே காவல்துறையினர் செய்ய வேண்டிய கடமை. இதுபோன்ற நிகழ்வுகளில் இப்படி பெண்கள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாவது புதிதல்ல என்று காவல்துறை வியாக்கியானம் சொல்கிறது என்றால், அது என்ன நியாயம்?
காவல்துறைதான் இப்படி என்றால், காவல்துறைக்குப் பொறுப்பான கர்நாடக மாநிலத்தின் உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரின் கூற்று அதைவிட அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. காவல்துறையினரை உடனடியாக நடவடிக்கை எடுக்கச் சொல்வதை விட்டுவிட்டு அவர் மேலைநாட்டுக் கலாசாரம் பற்றியும், பெண்களின் நாகரிக உடையணிதல் பற்றியும் உபந்நியாசம் நிகழ்த்துகிறார்.

"இதுபோல ஆண்களும் பெண்களும் புத்தாண்டு இரவைக் கொண்டாடுவது என்பது மேலைநாட்டு வழக்கம். அந்த மேலைநாட்டுக் கலாசாரம் இங்கேயும் பரவியிருப்பதால் ஏற்படும் பிரச்னைகள் இவை. பெண்கள் இதுபோன்ற நிகழ்வுகளில் கலந்துகொள்ளும்போது சற்று நாகரிகமாக உடையணிந்து வரவேண்டும். இளம் ஆண்களும் பெண்களும் கலந்து கொள்ளும் கொண்டாட்டங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும்' என்று உள்துறை அமைச்சர் கூறுவாரேயானால், அதற்குப் பிறகு காவல்துறையினர் எப்படி செயல்படுவார்கள் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரின் கூற்று, மகளிர் அமைப்புகளின் பரவலான கண்டனத்திற்கு ஆளாகி இருக்கிறது. அமைச்சர் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் சுஷ்மா சாஹு கண்டனம் தெரிவித்திருக்கிறார். ஆனாலும்கூட, இந்த அநாகரிகம் தேசிய அளவில் பெரிய விவாதப் பொருளாக மாறவில்லை என்பதுதான் ஏன் என்று புரியவில்லை.

அமைச்சர் ஜி. பரமேஸ்வரின் கூற்று, அன்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட கயவர்களுக்கு அவர் தம் செயலை நியாயப்படுத்தும் காரணமாக மாறிவிடும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இதன்மூலம் தரப்படும் செய்தி என்ன? "நீங்கள் கேளிக்கை இரவில் கலந்து கொள்வதும், உடையணிந்ததும்தான் இதற்குக் காரணமே தவிர, உங்களைப் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியவர்களிடம் தவறு காண முடியாது என்பதுதான் அவர்களுக்குத் தரப்படும் பதிலா?

அமைச்சரின் விளக்கத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் வாயடைத்துப் போயிருக்கிறார்கள். அமைச்சரே இப்படிக் கூறிவிட்ட பிறகு காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்காது என்கிற அவநம்பிக்கை அவர்களுக்கு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. அதனால்தான், இத்தனை பெரிய அராஜகம் அன்றைய இரவு நடந்தும் பல பெண்கள் புகார் தராமல், வெளியிலும் சொல்ல முடியாமல் மெளனமாக அழுது கொண்டிருக்கிறார்கள்.
பாலியல் பாதிப்புக்கு ஆளான ஒரு பெண் காவல்துறையிடம் புகார் தரும்போது, தொண்ணூற்று ஒன்பது பேர் புகார் தர முன்வருவதில்லை. அதற்குக் காரணம் பெரும்பாலான காவல் நிலையங்கள் அமைச்சர் பரமேஸ்வரின் மனநிலையில் இருப்பதுதான். பாலியல் வன்கொடுமை என்று எந்தப் பெண் புகார் கொடுக்க நேர்ந்தாலும், முதல் எதிர்வினை அவர்களது உடை அல்லது அவர்களது செயல்பாடு என்று காவல்துறையே தீர்மானிக்குமேயானால், பெண்களுக்கு நியாயம் கிடைப்பது எப்படி?
மாறி விட்டிருக்கும் சமூக சூழலில், பெண்கள் அதிகமாக வேலைக்குப் போக வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. பெற்றோரைப் பிரிந்து, ஊர் விட்டு ஊர் போய் தனிமையில் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில், பெண்கள் குறித்த புரிதல் மாற வேண்டும் என்பதும், அவர்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட்டு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதும் மிகவும் அவசியம். பெங்களூருவில் நடந்தது, வேறெங்கும் நடந்து விடக் கூடாது!

No comments:

Post a Comment

TAPS takes effect from Jan 1, 2026

TAPS takes effect from Jan 1, 2026  As per the G.O., TAPS will become operational after the notification of rules and completion of statutor...