Friday, January 13, 2017

தோண்டத் தோண்ட சோகம்!

By ஆசிரியர்  |   Published on : 12th January 2017 01:33 AM  

ஜார்க்கண்ட் மாநிலம் கோடா மாவட்டம் லால்மாடியா என்கிற இடத்திலுள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் குறைந்தது 50 பேர் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியிருக்கிறார்கள். இதுவரை இவர்களில் 18 பேருடைய சடலங்கள் தேடி எடுக்கப்பட்டிருக்கின்றன. மீட்புப் பணி கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாகத் தொடர்ந்தவண்ணம் இருக்கிறது.
முந்நூறு அடி ஆழத்தில் நிலக்கரியைத் தோண்டி எடுத்துக் கொண்டிருந்தபோது, சுரங்கத்தின் ஒரு பகுதியில் சுவர் இடிந்து விழத் தொடங்கியது. இப்படி இடிந்து விழப்போவதற்கான அறிகுறி தோன்றியபோதே, சுரங்கப் பணியை நிறுத்தி இருந்தால் விபத்தைத் தவிர்த்திருக்கலாம் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் இந்த விபத்து மனித அசிரத்தையால்தான் ஏற்பட்டது என்று தெரிவிக்கிறார்கள்.

உலகளாவிய அளவில் சுரங்கப் பணி என்பது இடர்ப்பாடு கொண்டதுதான். ஆபத்தில்லாத சுரங்கப் பணி என்பது எங்குமே கிடையாது. தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்பட்டிருந்தாலும், சுற்றுச்சுவர் சரிதல், நிலத்தடி வெடிப்பு என்பவை தவிர்க்க முடியாதவை. இந்த ஆபத்துகளைக் குறைக்க முடியுமே தவிர முற்றிலுமாக இல்லாததாக்க முடியாது.

இதுபோன்ற விபத்துகளில் பெரும்பாலானவை, பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பின்பற்றாமல் இருப்பதாலும், பாதுகாப்பு அம்சங்களே இல்லாமல் இருப்பதாலும்தான் ஏற்படுகின்றன. சுரங்கப் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் தேவையில்லாமல் இடர்ப்பாடுகளை எதிர்கொள்ளக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இந்தப் பிரச்னை, அனுமதி பெறாத சட்டவிரோத சுரங்கங்களிலும், வெளி நிறுவனத்திற்கு ஒப்பந்தப் பணியில் தரப்பட்டிருக்கும் சுரங்கங்களிலும்தான் மிக அதிகமாகக் காணப்படுகிறது.
லால்மாடியா விபத்து அப்படிப்பட்டதுதான். ஈஸ்டர்ன் கோல்பீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ராஜ்மஹல் திறந்தவெளிச் சுரங்கப் பணி மகாலட்சுமி நிறுவனத்திடம், ஒப்பந்தப் பணியாகத் தரப்பட்டிருக்கிறது. இப்படி ஒப்பந்தப் பணியாகச் சுரங்கங்களில் நிலக்கரி எடுக்கும் வேலையில் ஈடுபடுபவர்கள், பாதுகாப்பு அம்சங்களைக் கடைப்பிடிப்பதில் அக்கறை காட்டுவதில்லை. அவர்களுக்குத் தொழிலாளர்களின் நலனையோ பாதுகாப்பையோ உறுதி செய்வதைவிட, எங்கெல்லாம் மிச்சம் பிடித்துத் தங்கள் லாபத்தை அதிகரிக்க முடியும் என்பதில்தான் அக்கறை அதிகமாக இருக்கும்.

லால்மாடியா விபத்தில்கூட, முதலில் சிறிய அளவில் சுவர்களிலிருந்து மண் சரிவு ஏற்படத் தொடங்கியது. அதை அபாய அறிவிப்பாக எடுத்துக் கொண்டு, வேலையை நிறுத்தத் தயாரானார்கள். ஆனால், ஒப்பந்தக்காரர் எப்படியும் குறிப்பிட்ட நேரம் வரை வேலை நடந்தாக வேண்டும் என்று உத்தரவிட்டதாகப் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்தியாவிலேயே மிகவும் ஆபத்தான பணி சுரங்கப் பணிதான். பத்து நாள்களுக்கு ஒரு மரணம் என்கிற அளவில் கடந்த ஆண்டு விபத்துகள் நடந்தன. நிலக்கரி வெட்டி எடுப்புத் துறையில் மட்டும் 2015-இல் 100 மில்லியன் டன் நிலக்கரி வெட்டி எடுப்பதற்கு 7 உயிர்கள் என்கிற அளவில் சுரங்கங்கள் பலி வாங்கியிருக்கின்றன. 2014-ஆம் ஆண்டு தேசிய மனித உரிமை ஆணையத்தின் அறிக்கைப்படி, சுரங்க விபத்துகளால் ஏற்படும் மரணங்கள், சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. பயிற்சி, பாதுகாப்பு, விபத்து குறித்த விசாரணை ஆகியவற்றில் சர்வதேச அளவிலான வழிமுறைகளை சுரங்கத் துறையில் நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

சுரங்கத் துறையில் பாதுகாப்பு அம்சங்கள் காணப்படவில்லை, சுரங்கத் தொழிலாளர்களுக்குத் தகுந்த பாதுகாப்பில்லை என்பதை முதலில் உணர்ந்து செயல்பட்டது அன்றைய பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான அரசுதான். 1973-இல் நிலக்கரிச் சுரங்கங்களை தேசியமயமாக்கிச் சட்டம் இயற்றியதற்குக் காரணமே, தனியார் துறையினர் சுரங்கங்களில் போதிய பாதுகாப்பை உறுதி செய்யாமல் இருந்ததும், சுரங்கத் தொழிலாளர்களின் நலனைப் பேணாமல் இருந்ததும்தான். அன்றைய நிலைமையிலிருந்து இப்போது சுரங்கத் தொழிலாளர்களின் பணி நேரப் பாதுகாப்பு மிகவும் அதிகரித்து விட்டிருக்கிறது.
தாராளமயமாக்கல் கொள்கை நடைமுறைக்கு வந்த பிறகு, தேசியமயமாக்கப்பட்ட நிலக்கரிச் சுரங்கங்களில், தனியார் ஒப்பந்ததாரர்களின் மூலம் நிலக்கரி வெட்டி எடுக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. அரசுத் துறை சுரங்கத் தொழிலாளர்களின் மெத்தனப் போக்கு நிர்வாகங்களைத் தனியாரிடம் ஒப்பந்த முறையில் அந்தப் பணியை ஒப்படைக்கத் தூண்டியது. அவர்கள் முறையான பாதுகாப்பு அம்சங்களைக் கடைப்பிடிக்காமல் இருப்பது மீண்டும் பிரச்னையை எழுப்புகிறது.

2015-இல் மட்டும் இந்தியாவிலுள்ள 570 சுரங்கங்களில் 38 தொழிலாளர்கள் மரணமடைந்திருக்கிறார்கள். 2016-இல் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாதங்களில் மட்டும் 65 மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இது வெளியே தெரியவந்த எண்ணிக்கைதானே தவிர சரியான எண்ணிக்கை அல்ல. பல மரணங்கள் வெளியில் தெரிவதில்லை அல்லது சுரங்க ஒப்பந்ததாரர்கள் அவற்றை மரணமாக ஏற்றுக் கொள்வதில்லை.


பாதுகாப்பு அம்சங்கள் ஒருபுறம் இருக்க, அதைவிட அதிர்ச்சி அளிப்பது, சுரங்கப் பணியில் மரணமடையும் தொழிலாளர்களின் குடும்பத்திற்குத் தரப்பட வேண்டிய இழப்பீடு. மிகவும் ஏழைகளான அந்தச் சுரங்கத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு அறிவிக்கப்படும் இழப்பீடுகள் போய்ச் சேர்வதில்லை என்கிற உண்மை சுடுகிறது. லால்மாடியா நமது விழிகளைத் திறந்து சுரங்கங்களின் பாதுகாப்பை அதிகரித்தால் மகிழ்ச்சி!

No comments:

Post a Comment

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question CBI to question actor-TVK chief on crowd control la...