Tuesday, March 21, 2017

மார்ச் 19, 01:58 PM

பெண்களை பாதிக்கும் ‘வாட்ஸ் அப்’ வாழ்க்கை

குடும்பத்தலைவிகள் கூட இப்போது ‘வாட்ஸ் அப்’புடன் வாழ்க்கை நடத்தத் தொடங்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் தனக்கு கிடைக்கும் நேரத்தின் பெரும்பகுதியை செல்போனிலே அவர்கள் செலவிடுவது, அவர்களது குடும்ப வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பெண்கள் வாழ்க்கையில் தங்களை மேம்படுத்திக்கொள்ள பத்து அடிப்படையான விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

எப்போதும் விழிப்புடன் இருங்கள்:

பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான பகுதி எது? என்ற கேள்வியை கேட்டால், “அப்படி எந்த பகுதியும் இந்த உலகில் கிடையாது” என்பதுதான் உண்மையான பதில்.

வீட்டில் பெண்களுக்கு எதிரான அசம்பாவிதம் ஏற்படலாம். நடந்து செல்லும் போது ரோட்டில் அசம்பாவிதம் ஏற்படலாம். பயணிக்கும்போதும் பிரச்சினை ஏற்படலாம். வேலைபார்க்கும் இடத்திலும், ஓட்டல் போன்று தங்கும் இடத்திலும் பாதுகாப்புமின்மை ஏற்படலாம்.

அதனால் எங்கு, எப்போது, எப்படி பாதுகாப்பில்லாத சூழல் உருவாகும் என்று சொல்ல முடியாது. எப்போதும், எதுவும் நடக்கலாம். ஆனால் இதை நினைத்து யாரும் பயப்படவேண்டியதில்லை. எப்போதும் விழிப்புடன் இருக்க உடலையும், மனதையும் விழிப்பாக வைத்திருக்கவேண்டும்.

உடலை விழிப்பாக வைத்திருப்பது என்பது, முறையான உடற் பயிற்சிகளை செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்து ஆரோக்கியத்தை பாதுகாப்பது. ஆரோக்கியமான கட்டுக்கோப்பான உடல், பலமானதாக இருக்கும். அதற்காக நீங்கள் தினமும் உடற்பயிற்சி செய்யவேண்டும்.

மனம் விழிப்பாக இருக்க தியானம், யோகாசனம் போன்றவை தேவை. தியானம் செய்யும் பெண்களின் உள்ளூணர்வு மிக சிறப்பாக வேலை செய்யும். அதன் மூலம் அவர்கள் அதிக விழிப்புணர்வை பெறலாம். மனதும், உடலும் விழிப்பாக இருந்தால் எல்லா நெருக்கடியான சூழ்நிலைகளையும் பெண்களால் சமாளிக்க முடியும்.

எங்கேயும், எப்போதும் பதற்றம் வேண்டாம்:

தன் கண் முன்னே என்ன நடந்தாலும், தனக்கோ- தன் உறவினர்களுக்கோ என்ன நேர்ந்தாலும் பதற்றம் அடைந்துவிடாதீர்கள். பதற்றமடைந்து விட்டால் பயம் வந்து விடும். பயம் வந்துவிட்டால் தெளிவான முடிவினை எடுக்க முடியாது. நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எப்போதாவது தெளிவற்ற முடிவினை எடுத்திருந்தால், அதற்கு உங்கள் பதற்றம்தான் காரணமாக இருக்கும். பதற்றமின்றி யோசித்தால் தெளிவான, சரியான முடிவுகளை எடுக்கமுடியும்.

தன்னம்பிக்கையை இழந்துவிடக்கூடாது:

வாழ்க்கையில் பெண்கள் பணத்தை இழக்கலாம். பதவியை இழக்கலாம். உறவுகளை கூட இழக்கலாம். ஆனால் ஒருபோதும் தன்னம்பிக்கையை இழக்கக் கூடாது. சரித்திர காலத்தில் இருந்து இந்த காலம் வரை, வாழ்க்கையில் தோற்றுப் போனதாக கருதப்பட்ட பல பெண்கள் மீண்டும் எழுந்து வந்து சாதனை படைத்திருக்கிறார்கள். அதற்கு ஒரே காரணம் அவர்கள் தன்னம்பிக்கையை இழக்காமல் இருந்ததுதான். ஒரு சாதாரண சுண்டெலிகூட உயிர் போகும் நேரத்திலும் தன்னம்பிக்கையை இழக்காமல் உயிர்தப்ப போராடும். ஆனால் பல பெண்கள் சாதாரண பிரச்சினைகளுக்கே தன்னம்பிக்கையை இழந்து நடைபிணம்போல் ஆகிவிடுகிறார்கள். அந்த நிலையை மாற்ற வேண்டும். பெண்கள் ஒவ்வொருவரும் அடுத்தவர்களுக்கு உதாரணமாக தன்னம்பிக்கையோடு வாழ்ந்து காட்டவேண்டும்.

உறவுகளை மேம்படுத்துங்கள்:

இப்போது பெரும்பாலான உறவுகள் செல்போன் உறவுகளாகத்தான் இருக்கின்றன. செல்போனில் பேசுவதும், மெசேஜ் அனுப்புவதும், வாட்ஸ்அப்பில் பகிர்ந்து கொள்வதுமே வாழ்க்கையாகிக் கொண்டிருக்கிறது. இப்படியே போனால் திருமணங்கள்கூட செல்போன் வழியாக நடந்து விடும் நிலை உருவாகிவிடும். அதனால் செல்போனில் உறவாடுவதை குறைத்து நேரடியாக உறவினர்களை சந்திப்பதையும், பேசுவதையும், உணர்வுகளை பகிர்ந்து கொள்வதையும் அதிகரியுங்கள். நீங்கள் ஒரு மணி நேரம் செல்போனில் செலவிட்டால் உங்கள் குழந்தைகள் நான்கு மணி நேரத்தை செலவிடும். உங்கள் கணவர் மூன்று மணி நேரத்தை செலவிடுவார். அப்படிப்பட்ட நிலை உருவாகும்போது உங்கள் வீட்டிற்குள்ளே மூன்று பேர் இருந்தால், மூன்று பேரும் மூன்று தீவுகள் போல் ஆகிவிடுவீர்கள்.


பிடிவாதம் பிடியுங்கள்:

பொதுவாக குழந்தைகளிடம் பிடிவாதம் பிடிக்கக் கூடாது என்று கூறுவோம். ஆனால் பெண்கள் பிடிவாதம் பிடிக்க வேண்டும். நல்லவைகளை செய்ய, தேவையற்றவைகளை கைவிட, நல்ல கொள்கைகளுக்காக அவர்கள் பிடிவாதம் பிடிக்க வேண்டும். அந்த நல்ல செயலை செய்துமுடிக்கும் வரை பிடிவாதத்தை கைவிடாதீர்கள். பிடிவாதம் பிடித்து, உங்களிடம் இருக்கும் தேவையற்ற பழக்கத்தைகூட கைவிடலாம்.

பிரச்சினைகளை எதிர்கொள்ளுங்கள்:

வழக்கம்போல் எல்லாம் இயல்பாக நடந்துகொண்டிருந்தால் வாழ்க்கையில் சுவாரஸ்யம் இருக்காது. பிரச்சினைகள் வரவேண்டும். மோதல்கள் வரவேண்டும். தொல்லைகள் வரவேண்டும். பிரச்சினைகளை நீங்களாக உருவாக்காமல், அதுவாக வந்தால் மனம் தளர்ந்து போகாதீர்கள். கற்ற கல்வியும், பெற்ற வாழ்க்கையும், கிடைத்த அனுபவங்களும் பிரச்சினைகளை எதிர்கொள்ளத் தேவையான சக்தியை பெண்களுக்குள் உருவாக்கி வைத்திருக்கிறது. அதனால் பிரச்சினைகளை கண்டு பயந்து ஓடி ஒளியாதீர்கள். பிரச்சினைகளை எதிர்கொள்ளுங்கள். அதை நேரடியாக சமாளியுங்கள். உங்களால் முடியும். நீங்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ள தயாராக இருந்தால் பிரச்சினைகளே உங்களை கண்டு விலகிப்போய்விடும். பிரச்சினைகளை கண்டு பயந்தால், தெரு நாய் போன்று அது உங்களை துரத்தத்தான் செய்யும்.

செயலால் பதிலடி கொடுங்கள்:

உங்களை யாராவது குறைவாக மதிப்பிட்டால், அவர்களுக்கு பேச்சால் பதிலடி கொடுக்க வேண்டாம். செயலால் பதிலடி கொடுங்கள். மல்யுத்த விளையாட்டில் ஈடுபட சாக்‌ஷி மாலிக் விருப்பம் தெரிவித்தபோது குடும்பத்தினரும், அக்கம்பக்கத்து வீட்டினரும் ‘பெண்ணான நீ அடி வாங்கி விட்டு வந்து எங்கள் முன்னால் அழுது கொண்டு நிற்பாய்’ என்று கூறி, மல்யுத்தத்தில் அவர் பங்குபெறக் கூடாது என்றார்கள். அவர் பேச்சால் பதிலடிகொடுக்கவில்லை. மல்யுத்த போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களால் பதிலடிகொடுத்தார். ரியோ ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வாங்கி, இந்தியாவிற்கு பெருமையும் சேர்த்தார். அதுபோல் உங்களை யாராவது குறை சொன்னால் அவர்களுக்கு செயலால் பதிலடிகொடுத்து, உங்களை பாராட்டும்படி செய்யுங்கள்.


பெண்ணாக பிறந்ததற்கு பெருமை கொள்ளுங்கள்:

பெண்மை என்பது மிகப்பெரிய அற்புதம். தாய்மை என்பது மிகப்பெரிய வரப்பிரசாதம். உங்களால்தான் இந்த உலகம் இயங்குகிறது. உங்களால்தான் ஒவ்வொரு வீடும் இயங்கு கிறது. உங்களால்தான் ஒவ்வொரு அலுவலகங்களும் இயங்குகிறது. தாயாக, மனைவியாக, சகோதரியாக உங்களால்தான் உறவுகள் காப்பாற்றப்படுகின்றன. அப்படிப்பட்ட பெண்மை என்னும் பெருமையை பெற்றிருக்கும் உங்கள் வாயில் இருந்து ‘நான் பெண்ணாக பிறந்ததால்தானே இப்படி எல்லாம் நடக்கிறது’ என்ற எதிர்மறையான வார்த்தை வந்துவிடக்கூடாது. ‘நான் பெண்’ என்று தலைநிமிர்ந்து நில்லுங்கள். நான் பெண் என்று தலை நிமிர்ந்து செல்லுங்கள்.

சமயோசிதமாக செயல்படுங்கள்:

நீங்கள் எவ்வளவு தைரியமிக்கவராக இருந்தாலும், சமயோசிதமாக செயல்பட கற்றுக்கொள்ளுங்கள். ஆபத்தான நேரங்களில் சமயோசிதம் உங்களை காப்பாற்றும். அதுபோல் உங்களை சுற்றி எங்கே, எப்போது பிரச்சினை ஏற்பட்டாலும் சூழ்நிலைக்கு தக்கபடி சமயோசிதமாக செயல்படுங்கள். சமயோசிதமாக செயல்பட பக்குவம் தேவை. அது உங்களிடம் எப்போதும் இருக்கவேண்டும்.

உங்களுக்காக வாழுங்கள்:

கடந்த காலங்களில் பெண்கள் திருமணத்திற்கு முன்பு அவர் களது பெற்றோருக்காக வாழ்ந்தார்கள். திருமணத்திற்கு பிறகு கணவருக்காகவும், குழந்தைகளுக்காகவும் வாழ்ந்தார்கள். பின்பு பேரக் குழந்தைகளுக்காக வாழ்ந்தார்கள். மரணத்தின் கடைசி நிமிடம் வரை அவர்களுக்காக அவர்கள் வாழ்ந்ததில்லை. அது ஒரு வாழ்க்கை இல்லை. ஆன்மிக உணர்வுடன் சொன்னால் இது ஒரு அற்புதமான பிறவி. இந்த ஜென்மத்தை நீங்கள் முழுமைப்படுத்தவேண்டும் என்றால் உங்களுக்காக நீங்கள் வாழவேண்டும்.

No comments:

Post a Comment

HC: No addl certificate needed for MD anaesthesiology docs

HC: No addl certificate needed for MD anaesthesiology docs TIMES NEWS NETWORK 21.01.2026 Bengaluru : The high court has held that a medical ...