Thursday, March 16, 2017

பெட்ரோல், டீசல் விலை உயர்வு எதிரொலி : அத்தியாவசிய பொருட்கள் விலை 'கிடுகிடு'

கோவை: பெட்ரோல், டீசல் விலை உயர்வால், அத்தியாவசியப் பொருட்களான மளிகை, காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. தானியங்கள் மட்டும் மூட்டைக்கு, 200 ரூபாய் வரை எகிறியுள்ளது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.தமிழக அரசின், 'வாட் வரி' அதிகரிப்பால், பெட்ரோல் லிட்டருக்கு, 3.78 ரூபாயும், டீசல், 1.70 ரூபாயும் உயர்ந்துள்ளது. 

எரிபொருள் செலவு அதிகரிப்பை காரணம் காட்டி, அரசு, தனியார் பஸ் கட்டணமும், 50 ரூபாய் வரை அதிகரித்து விட்டது. நேரடியான இந்த பாதிப்பு மட்டுமின்றி, மறைமுகமான பல பாதிப்புகளையும், மக்கள் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால், சரக்கு லாரிகளின் வாடகை எகிறி, பால், காய்கறி, மளிகை, அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விலையும் உயர்ந்து வருகிறது.

ரூ.200 உயர்வு : கோவை மளிகை வியாபாரிகள் சங்க தலைவர், கணேசன் கூறியதாவது:கோவை மார்க்கெட்டிற்கு தேவையான பாசிப்பருப்பு, வெள்ளை உளுந்து, விருதுநகரில் இருந்தும்; துவரம் பருப்பு, பச்சைப்பயறு உள்ளிட்ட தானியங்கள் சேலத்தில் இருந்தும்; பட்டாணி ரகங்கள், துாத்துக்குடி, சென்னையில் இருந்தும் வருகின்றன. தினமும் குறைந்தது, 100 லோடு மளிகைப் பொருட்கள் வருகின்றன. தமிழக அரசின் வாட் வரி அதிகரிப்பால், சரக்குகள் அனைத்துமே மூட்டை ஒன்றுக்கு, 200 ரூபாய் வீதம் உயர்ந்து விட்டது. 100 கிலோ மூட்டை துவரம் பருப்பு, 6,200 ரூபாயாக இருந்தது; வரி விதிப்புக்குப் பின், 6,400 ரூபாயாக உயர்ந்து விட்டது.

சில்லரை விலை : அதேபோன்று, 9,100 ரூபாயாக இருந்த வெள்ளை உளுந்து, 9,300 ரூபாயாக உயர்ந்து விட்டது. கோவை மார்க்கெட்களில் இருந்து தான், மாவட்டம் முழுவதும் உணவு தானியங்கள் சப்ளைஆகின்றன. மொத்த விலை அதிகரிப்பால், சில்லரை விலையும் அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

கோவை காய், கனி வியாபாரிகள் சங்க தலைவர், கார்த்திகேயன்: கோவை மார்க்கெட்டுக்கான பீன்ஸ், தக்காளி, முட்டைகோஸ், குடை மிளகாய், கர்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்தும்; வெங்காயம், உருளைக்கிழங்கு வட மாநிலங்களில் இருந்தும் வருகின்றன. கேரட் மற்றும் பீன்ஸ் ஊட்டியில் இருந்து வருகின்றன. எரிபொருள் விலை உயர்வால், காய்கறி விலையிலும் மாற்றமுள்ளது. இருப்பினும், சந்தைக்கு வரும் அளவைப் பொறுத்தே விலை நிர்ணயிக்கப்படுவதால், விலை ஏற்றத்துக்கு, லாரி வாடகையை மட்டும் காரணமாக கூற முடியாது.

கோவை லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர், கலியபெருமாள்: கோவை மாவட்டம் முழுவதும், 10 ஆயிரம் லாரிகள் இயங்குகின்றன. இன்சூரன்ஸ், டோல்கேட், போக்குவரத்து துறையின் கட்டணங்கள், பல மடங்கு உயர்த்தப்பட்டிருப்பதால், லாரி தொழில் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும், 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின், தொழில், வர்த்தகம் பாதிக்கப்பட்டது. அதிலிருந்து மீண்டு வருவதற்குள், தமிழக அரசு வாட் வரியை அதிகரித்து, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி விட்டது. இந்த நெருக்கடியான நிலையை எதிர்கொள்வது குறித்து, லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகிறோம்.

No comments:

Post a Comment

Diabetes: Doctor says you can manage it, just stop falling for these traps

Diabetes: Doctor says you can manage it, just stop falling for these traps  Diabetes management often feels like a battle due to common life...