Wednesday, March 15, 2017

அரசியலும் தார்மிகமும்!

By ஆசிரியர்  |   Published on : 15th March 2017 01:48 AM 
உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கும், பஞ்சாபில் காங்கிரஸýக்கும் தனிப்பெரும்பான்மை வெற்றியைத் தந்த வாக்காளர்கள், சிறிய மாநிலங்களான கோவாவிலும், மணிப்பூரிலும் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லாத தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள். பா.ஜ.க. ஆட்சியில் இருந்த கோவாவும், காங்கிரஸ் ஆட்சியில் இருந்த மணிப்பூரும், ஆளும் கட்சிக்கு மீண்டும் பெரும்பான்மை பலத்தை அளிக்கவில்லை. இன்னொரு வகையில் சொல்வதாக இருந்தால், ஆட்சியிலிருந்து அகற்ற வாக்களித்திருக்கிறார்கள்.
நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளைக் கூர்ந்து கவனித்தால் ஒரு உண்மை புலப்படுகிறது. மேற்கே கோவா, பஞ்சாபிலும், வடக்கே உத்தரப் பிரதேசம், உத்தரகண்டிலும், வடகிழக்கில் மணிப்பூரிலும் வாக்காளர்களின் மனநிலை ஏறத்தாழ ஒன்றுபோல ஆளும் கட்சிக்கு எதிரானதாகத்தான் இருந்திருக்கிறது. கோவாவில் பா.ஜ.க., பஞ்சாபில் அகாலிதளம் - பா.ஜ.க. கூட்டணி, உத்தரகண்டில் காங்கிரஸ், உத்தரப் பிரதேசத்தில் சமாஜவாதி கட்சி, மணிப்பூரில் காங்கிரஸ் என்று ஆட்சியில் இருந்த கட்சிகள் அனைத்தும் பின்னடைவைச் சந்தித்திருக்கின்றன.
உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் வாக்காளர்கள் அளித்த தெளிவான முடிவுகள் நிலையான ஆட்சிக்கு வழிகோலி இருக்கின்றன. ஆனால் கோவாவிலும், மணிப்பூரிலும் ஆளும் கட்சிக்கு எதிராக வாக்களித்த மக்கள், அதற்கு மாற்றாக எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை பலத்தை அளிக்காமல் இருந்துவிட்டதுதான் இப்போது தார்மிக கேள்விகளுக்கும், அரசியல் சமரசங்களுக்கும் (பேரங்களுக்கும்) வழிகோலி இருக்கிறது.
நாற்பது உறுப்பினர்களைக் கொண்ட கோவா மாநில சட்டப்பேரவைக்கான தேர்தலில், தனிப்பெரும்பான்மை பெற 21 இடங்களை பெற்றாக வேண்டும். கடந்த முறை 21 இடங்களைப் பெற்று ஆட்சியில் இருந்த பா.ஜ.க., இந்தத் தேர்தலில் 13 இடங்களில் தான் வெற்றிபெற முடிந்திருக்கிறது. சென்ற தடவை 7 இடங்கள் மட்டுமே பெற்றிருந்த காங்கிரஸ் இப்போது 17 இடங்களை பெற்றிருந்தாலும், தனிப்பெரும்பான்மை பெற முடியவில்லை. சட்டப்பேரவையில் அதிக இடங்களை பெற்ற கட்சியாக காங்கிரஸ் உயர்ந்
திருக்கிறது, அவ்வளவே.
தார்மிக அடிப்படையிலும், பொதுவான நடைமுறைப்படியும் ஆட்சியில் இருக்கும் கட்சி தேர்தலில் பெரும்பான்மை பலம் பெறாமல் போனால், அதை ஆட்சிக்கு எதிரான தீர்ப்பு என்று கருதுவது வழக்கம். அதனால் அந்தக் கட்சி அதிக எண்ணிக்கையுள்ள கட்சி
யாகவே இருந்தாலும் தனிப்பெரும்பான்மை இல்லாவிட்டால் ஆட்சி அமைக்கக் கோருவதில்லை. அந்த வகையில் ஆளுநர் மிருதுளா சின்ஹா சட்டப்பேரவையில் அதிக எண்ணிக்கை பெற்றிருக்கும் காங்கிரûஸத்தான் முதலில் அழைத்துத் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பளித்திருக்க வேண்டும்.
தேர்தல் முடிவுகள் வெளியாகும்போதே, தங்களுக்குப் பெரும்பான்மை கிடைக்கப்போவதில்லை என்பதை ஆளும் பா.ஜ.க. உணர்ந்துவிட்டது. தலா மூன்று இடங்களை வென்றிருந்த கோவா முன்னேற்றக் கட்சியையும், மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியையும், சில சுயேச்சை உறுப்பினர்களையும் பா.ஜ.க.வினர் தொடர்பு கொண்டனர். அவர்களது ஆதரவைப் பெற்ற பா.ஜ.க. ஆட்சியமைக்க அழைக்கும்படி ஆளுநரைக் கோரியது.
அதிக இடங்களை வென்றிருக்கும் காங்கிரஸூக்கு ஆட்சி அமைக்க முதல் வாய்ப்பை அளிக்காமல், வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்ட ஆளும் கட்சிக்கு ஆதரவு பலம் இருக்கிறது என்கிற காரணத்தால் ஆளுநர் ஆட்சி அமைக்க அழைத்தது தார்மிகப்படி சரியா என்கிற கேள்வி எழுகிறது. இந்த முடிவை எதிர்த்து காங்கிரஸ் கட்சி உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்கைத் தொடுத்தது. அதற்கு உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு, தார்மிக ரீதியாகவும் இல்லாமல், அரசியல் ரீதியாகவும் இல்லாமல், நடைமுறை நியாயப்படி அமைந்திருக்கிறது.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் தலைமையிலான அமர்வு, காங்கிரஸிடம் கேட்ட கேள்வி இதுதான் - "உங்களிடம் எண்ணிக்கை பலம் இல்லை. அப்படி இருந்திருந்தால் நீங்கள் உங்கள் ஆதரவு உறுப்பினர்களுடன் ஆளுநரை சந்தித்து, ஆட்சி அமைக்கக்கோரி இருப்பீர்கள். இங்கே வந்திருக்க மாட்டீர்கள். ஆளுநர் உடனடியாக சட்டப்பேரவையைக் கூட்டி முதல்வர் மனோகர் பாரிக்கரைத் தனது பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும்'.
கோவாவைப் பொருத்தவரை, அது தனி மாநிலமாக 1984-இல் உருவான பிறகு தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் முழுமையாக முதல்வராக இருந்தவர் 2007 முதல் 2012 வரை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் முதல்வர் திகம்பர் காமத் மட்டுமே. ஏனைய 10 முதலமைச்சர்களும் ஒரு சில ஆண்டுகள் மட்டுமே முதல்வராக இருப்பதும், ஆட்சி கவிழ்வதும் சகஜமாகவே தொடர்ந்து வருகிறது.
இப்போது மீண்டும் கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்திருக்கிறது கோவா. மனோகர் பாரிக்கர் தலைமையில் கூட்டணி அமைச்சரவை பதவி ஏற்கிறது. தார்மிக ரீதியாக இது சரியா தவறா என்கிற கேள்விக்கு பதில் இல்லை. அரசியலில் மத்திய ஆளும் கட்சி எதிர்க்கட்சிக்கு மாநில ஆட்சியை விட்டுக் கொடுப்பது என்பது சரியான ராஜதந்திரமாக இருக்க முடியாது. உச்சநீதிமன்றம் கூறியதுபோல, காங்கிரஸ் தனது எண்ணிக்கை பலத்தை நிரூபிக்க முடியாததன் பலவீனத்தை பா.ஜ.க. பயன்படுத்திக் கொண்டுவிட்டது. அரசியலில் தார்மிகத்தை எதிர்பார்ப்பது கொல்லாமை குறித்து கசாப்புக் கடையில் பேசுவதற்கு ஒப்பானது என்பதுதான் கோவாவில் நடந்தேறியிருக்கும் நாடகத்திற்கு விளக்கம்.

    No comments:

    Post a Comment

    HC: No addl certificate needed for MD anaesthesiology docs

    HC: No addl certificate needed for MD anaesthesiology docs TIMES NEWS NETWORK 21.01.2026 Bengaluru : The high court has held that a medical ...