Friday, March 10, 2017

வங்கிகள் யாருக்காக?

By ஆர். வேல்முருகன்  |   Published on : 10th March 2017 02:00 AM 
நாட்டின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களை மிரட்டும் வகையில் புதிய சேவைக் கட்டணங்கள் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலாகும் என அறிவித்துள்ளது.
பொதுவாக வங்கி என்பது தங்கள் பணத்தைச் சேமித்து தேவைப்படும்போது எடுத்துக்கொள்ளும் இடமாகவும்தான் கருதப்பட்டது. ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்பதற்காகத்தான் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. இதன் மூலம் பணக்காரர்களுக்காக மட்டுமே என்றிருந்த வங்கிகளின் சேவை ஏழைகளுக்கு எட்டும் நிலை உருவாகியது.
நாட்டில் தனியார் வங்கிகள் தொடங்கியபோது கண்டிப்பாக அவர்கள் லாப நோக்கோடுதான் செயல்படுவார்கள் என்பது தெரியும். ஆனாலும் அவர்களை அனுமதித்ததால்தான் ஆரோக்கியமான போட்டி நிலவும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
ஒரு காலத்தில் வங்கியில் கணக்குத் தொடங்க வேண்டுமென்றால் சம்பந்தப்பட்ட கிளையின் மேலாளரின் தயவு இருந்தால் மட்டும்தான் தொடங்க முடியும். ஆனால் தனியார் வங்கிகளின் வருகைக்குப் பிறகு ஆன்லைனில் விண்ணப்பித்தால் போதும்.
இந்த நிலைக்குக் காரணம் தனியார் வங்கிகள்தான். இப்போது தேசியமாக்கப்பட்ட வங்கிகளிலும் இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.
ஆனால் அதே சமயம் தனியார் வங்கிகளில் கணக்குத் தொடங்கினால் பல்வேறு சேவைகளும் உடனடியாகக் கிடைக்கின்றன. கணக்குத் தொடங்கினாலே காசோலை, ஏ.டி.எம். கார்டு, நெட் பேங்கிங் ஆகிய அனைத்து சேவைகளும் தரப்படுகின்றன.
ஆனால் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் ஒவ்வொரு சேவைக்கும் சம்பந்தப்பட்ட வங்கிக் கிளையைத் தொடர்பு கொள்ள வேண்டும்.
வங்கிக் கணக்கில் பணமில்லாமல் காசோலைகள் திரும்பினால் தனியார் வங்கிகள் அதிக அபராதம் விதிக்கின்றன. ஆனால் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இதற்கான கட்டணங்கள் குறைவு.
ஏ.டி.எம். மையங்கள் அதிகஅளவில் திறக்கப்பட்டபோது மக்கள் வங்கிக்கு வருவதைக் குறைப்பதற்கான முயற்சி இது எனக் கருதப்பட்டது. அதன்பின் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் பணம் எடுத்தால் சேவை வரி விதிக்கப்படும் என்றன வங்கிகள்.
இப்போது ஒரு மாதத்துக்கு நான்கு முறைக்கு மேல் வங்கிக் கணக்கில் பணம் கட்டினால் இவ்வளவு அபராதம் விதிக்கப்படும் என தனியார் வங்கிகள் முதலில் அறிவித்தன. அதையடுத்து நாட்டின் மிகப்பெரிய அரசுடைமையாக்கப்பட்ட வங்கியான பாரத ஸ்டேட் வங்கியும் இதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டது.
இது மிகப்பெரிய அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. அனைத்துத் தரப்பினரும் இதற்குக் கடும் கண்டனமும் தெரிவித்துள்ளனர். மத்திய அரசே இந்த அறிவிப்பை வாபஸ் வாங்கும்படி கோரிக்கை விடுத்துள்ளது.
குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாவிட்டால் இவ்வளவு அபராதம் என்று இப்போது அறிவித்துள்ள பாரத ஸ்டேட் வங்கிதான், குறைந்தபட்ச இருப்பே தேவையில்û என்று முதலில் அறிவித்தது.
ஒரு சில தனியார் வங்கிகள் கணக்குத் தொடங்கும்போது குறிப்பிட்ட தொகை இருந்தால் போதும் அதன்பின் குறைந்தபட்ச இருப்புத் தொகையைப் பற்றிக் கவலையில்லை என்று வாடிக்கையாளர்களுக்கு தூண்டில் போடுகின்றன.
நாட்டின் மிகப் பெரிய வங்கி பாரத ஸ்டேட் வங்கி தனியார் வங்கிகள் தடம் பதிக்க முடியாத இடங்களிலும் உள்ள ஒரே வங்கி.
இப்போதும் கிராமப்புறங்களில் உள்ள எழுதப்படிக்கத் தெரியாத விவசாயிகள் வைத்திருக்கும் கோடிக்கணக்கான ரூபாய்களை சம்பந்தப்பட்ட வங்கி மேலாளர்கள்தான் டெபாசிட் செய்வது குறித்து முடிவு செய்கிறார்கள்.
அந்த விவசாயிகளுக்கு எத்தனை முறை தங்கள் கணக்கில் பணம் போடுகிறோம் அல்லது எடுக்கிறோம் என்பது குறித்து எதுவும் தெரியாது. ஆனால் தங்கள் கணக்கில் பணம் குறைந்தால் கேள்வி கேட்
பார்கள்.
பாரதப் பிரதமரின் யோசனைப்படி ஜன் தன் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டன. செலாவணி செல்லாததாக்கப்பட்ட பின் அந்தக் கணக்குகளில் பல கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டது.
இந்தக் கணக்குகள் குறைந்தபட்ச இருப்பைக் கொண்டவை அல்ல. இந்தக் கணக்குகளை பாரத ஸ்டேட் வங்கி என்ன செய்யப்போகிறது?
வங்கிகளின் வாராக் கடன்கள் உயர்ந்ததால்தான் கட்டணங்களைக் கூட்டு
கிறோம் என்றால் சாதாரண மக்களுக்
காக இந்த வங்கிகள் என்ன சேவை செய்துள்ளன?
தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்பார்கள். வங்கி ஊழியர்களின் சங்கம் மிகவும் பலமானது என்பதால் அவர்களின் ஒவ்வொரு கோரிக்கைக்கும் தலைசாய்த்தால் அரசால் எதுவும் செய்ய முடியாமல் போகும்.
இந்த உலகில் மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பார்கள். அந்த வகையில் மக்களுக்குச் சேவை செய்ய அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள் அந்தக் கொள்கையில் இருந்து மாறாமல் சேவை செய்தால் மக்களால் வரவேற்கப்படும்.
இல்லாவிட்டால் மக்கள் அதைப் புறக்கணிப்பார்கள். காலம் என்ற சுழலில் சிக்கி அவை காணாமல் போகும். இதைப் புரிந்துகொண்டு செயல்பட்டால் வங்கிகள் அரசுடைமையாக்கப்பட்டதன் உண்மையான நோக்கம் நிறைவேறும்.
இதேநிலை நீடித்தால் வங்கிகள் பணக்காரர்களுக்கு மட்டுமே என்ற நிலை உருவாகும்.

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...