Wednesday, August 23, 2017

பட்டுப்போன 10 ஆயிரம் தென்னைக்கு இழப்பீடு கேட்டு கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்!



விருதுநகர் மாவட்டத்தில், வறட்சியால் பட்டுப்போன 10 ஆயிரம் தென்னை மரங்களுக்கு இழப்பீடு வேண்டும்; மாநிலம் முழுவதும் தென்னைக்கும் காப்பீடு திட்டம் கொண்டு வரவேண்டுமென தென்னை விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் விருதுநகர் மாவட்டத் தலைவர் ராமச்சந்திர ராஜாவிடம் பேசினோம், '' விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 22 ஆயிரம் ஏக்கர் பரப்பில் தென்னை விவசாயம் நடந்து கொண்டிருக்கிறது. கடந்த நான்கு வருடங்களாக மழையில்லாமலும் நிலத்தடி நீர் ஆழத்திற்குப் போனதுனாலயும் 10 ஆயிரம் தென்னைமரங்கள் பட்டுப் போய்விட்டன. கடந்த வருடத்துக்கு முன்னாலயே மரம் வாடும்நிலையில் இருக்கும்போது, விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுத்தோம், போராட்டமும் நடத்தினோம். வேளாண்துறை அதிகாரிகள் குழு வந்து ஆய்வுசெய்துவிட்டு, 'மரம் பட்டுப்போகலை; உயிரோடதான் இருக்கு'னு சொல்லிட்டுப் போயிட்டாங்க. ஆனா, அதுதான் ஆரம்பநிலை. அப்பவே மாற்று ஏற்பாடு செய்திருந்தா, பாதி தென்னைகளைக் காப்பாத்தியிருக்கலாம். இப்போ, பட்டுப்போன மரம் எல்லாமே 30 வருடங்களுக்கு மேல உள்ள காய்ப்புக்கு உகந்த மரங்கள்தான். கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள்ல தேசிய வேளாண் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தென்னைக்கு பயிர்க் காப்பீடு இருக்கு. ஆனா, நம்ம தமிழகத்துல நெல், வாழை, மானாவாரிப் பயிர்களுக்கு பயிர்க் காப்பீடு இருப்பது போல தமிழகம் முழுவதும் தென்னைக்கான பயிர்க் காப்பீடு திட்டத்தை அரசு விரிவுபடுத்தணும்.

மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியம், கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் செயல்பட்டுவருது. காசர்கோட்டிலிருந்து நமது மாநிலத்துக்குரிய மானியத்திட்டம், மானியத் தொகையை நமது அமைச்சர்கள் தமிழகத்துக்குக் கொண்டு வரலை. இதனால், தென்னைக்கான வளர்ச்சித் திட்டம், குறைந்த நீரிலும் வறட்சியைத் தாங்கியும் வளரும். புதிய தென்னை ரக வளர்ப்பில், புதிய தொழில்நுட்பத்தைப் பற்றி தெரிந்து செயல்படுத்த முடியலை. ஒரு ஏக்கருக்கு 70 தென்னை மரங்கள்.



10 ஆயிரம் ஏக்கரில் 7 லட்சம் மரம் பட்டுப்போயிருக்கு. பட்டுப்போன மரம் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் அரசு இழப்பீடு தர வேண்டும். மாநில அரசு மத்திய அரசிடம் தென்னை விவசாயிகளின் கண்ணீர்க் கதையை எடுத்துச்சொல்லி, உரிய நிவாரணத்தைப் பெற்றுத்தர வேண்டும்'' என்றார்.
Dailyhunt

No comments:

Post a Comment

NEWS TODAY 10.07.2026