Thursday, September 21, 2017

மருத்துவ கல்வி இயக்குனர் நியமனம் ரத்து: ஐகோர்ட்
பதிவு செய்த நாள்20செப்
2017
22:58


மதுரை: மருத்துவக் கல்வி இயக்குனராக, எட்வின் ஜோவை நியமித்த, தமிழக அரசின் அரசாணையை, உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது.

மதுரை, ரேவதி தாக்கல் செய்த மனு: எம்.பி.பி.எஸ்., முடித்து, தமிழ்நாடு மருத்துவ சேவை துறையில், 1987ல், பணியில் சேர்ந்தேன். மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி டீனாக பணிபுரிந்தேன். தற்போது, கரூர் மருத்துவக் கல்லுாரி டீனாக உள்ளேன். 2018 பிப்., 28ல், ஓய்வு பெறுவேன். பணி மூப்பு அடிப்படையில், என்னை மருத்துவக் கல்வி இயக்குனராக நியமிக்க, அனைத்து தகுதிகளும் உள்ளன. கோவை மருத்துவக் கல்லுாரி டீனாக இருந்த, எட்வின் ஜோவை, மருத்துவக் கல்வி இயக்குனராக நியமித்து, 2017 ஏப்., 25ல், தமிழக சுகாதாரத் துறை அரசாணை வெளியிட்டது. அவருக்கு போதிய தகுதிகள் இல்லை. நியமனத்தில் விதிமீறல் உள்ளது. அரசாணையை ரத்து செய்ய வேண்டும். எனக்கு பதவி உயர்வு அளித்து, மருத்துவக் கல்வி இயக்குனராக நியமிக்க உத்தர விட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நீதிபதி, ஆர்.மகாதேவன் விசாரித்தார். அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், 'தகுதியானவர்கள் பட்டியலை பரிசீலித்து, வெளிப்படை தன்மைஉடன், எட்வின் ஜோ நியமனம் நடந்தது. மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' என்றார்.

நீதிபதி: மருத்துவக் கல்வி இயக்குனர் நியமனத்தில் பணி மூப்பு, தகுதி, திறமையை சமமாக கருத்தில் வைத்து, பரிசீலிக்க வேண்டும். மனுதாரர், எட்வின் ஜோவை விட பணியில் மூத்தவர். மனுதாரருக்குகூடுதல் தகுதிகள் உள்ளன.

எட்வின் ஜோ நியமனத்திற்கு, அரசு தரப்பில் கூறப்படும் காரணங்கள்போதுமானதாக இல்லை. எட்வின் ஜோவை, மருத்துவக் கல்வி இயக்குனராக நியமித்த, அரசாணையை ரத்து செய்கிறேன். ரேவதிக்கு பதவி உயர்வு அளித்து, மருத்துவக் கல்வி இயக்குனராக நியமிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2025