Thursday, September 21, 2017

தூக்கில் தொங்க விடுவதை நிறுத்த கோரி மனு தாக்கல்
பதிவு செய்த நாள்20செப்
2017
23:02

புதுடில்லி: துாக்கில் தொங்கவிட்டு, மரண தண்டனை நிறைவேற்றுவதை நிறுத்தக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில், ரிஷி மல்ஹோத்ரா என்பவர், நேற்று தாக்கல் செய்த மனு: 'துாக்கில் தொங்க விடுவது, ஒருவர் கவுரவமாக இறக்கும் உரிமையை பறிக்கும் செயல்; அதிகபட்ச தண்டனை, குறைந்த பட்ச பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும்' என, ஐ.நா., சமூக, பொருளாதார கவுன்சில் தீர்மானத்தில் கூறப்பட்டு உள்ளது. இதை மீறும் வகையில், துாக்கில் போடும்போது, கடுமையான வலியும், காயங்களும் ஏற்படுகின்றன. மரண தண்டனையை நிறைவேற்றும் முறை, எளிமையாகவும், விரைவானதாகவும் இருக்க வேண்டும்; குற்றவாளிகளின் பயத்தை அதிகரிப்பதாக இருக்க கூடாது. உடனடியாக, தன்னிலை மறந்து, மரணத்தை விரைவாக அடைய வேண்டும்; உடலை சிதைக்கக் கூடாது.

'வளர்ந்த, வளரும் நாடுகளில், துாக்கில் தொங்க விடுவதற்கு பதிலாக, விஷ ஊசி போடுவது அல்லது துப்பாக்கியால் சுடுவது ஆகியவற்றின் மூலம், மரண தண்டனையை நிறைவேற்றுவதை பின்பற்றுகின்றனர்' என, இந்திய சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது.

எனவே, குற்றவாளிகள் அமைதியாகவும், விரைவாகவும் மரணம் அடைவதை உறுதி செய்யும் வகையில், துாக்கில் தொங்க விடுவதற்கு பதிலாக, வேறு முறையில், மரண தண்டனையை நிறைவேற்றும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2025