Sunday, September 24, 2017

பேரறிவாளன் ‘பரோல்’ மேலும் 30 நாட்களுக்கு நீட்டிப்பு தமிழக அரசு உத்தரவு


பேரறிவாளனுக்கு அளிக் கப்பட்ட பரோலை, அவரது தாயாரின் வேண்டுகோளை ஏற்று மேலும் 30 நாட்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

செப்டம்பர் 24, 2017, 05:30 AM
சென்னை,

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் சிறையில் கடந்த 26 ஆண்டுகளாக பேரறிவாளன் அடைக்கப்பட்டிருந்தார். தமிழக அரசுக்கு அவரது தாயார் அற்புதம் அம்மாள், ஒரு கடிதம் எழுதினார். அதில், தனது கணவரும் பேரறிவாளனின் தந்தையுமான ஞானசேகரனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதால், மகனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

அதைப்பரிசீலித்து, கடந்த ஆகஸ்ட் 24-ந் தேதியில் இருந்து 30 நாட்களுக்கு பேரறிவாளனுக்கு பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து பேரறிவாளன் தனது பெற்றோர் வசிக்கும் ஜோலார்பேட்டை வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார். அவரும் தனது உடல் நிலை தொடர்பாக சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்

செப்டம்பர் 24-ந் தேதியுடன் (இன்று) பேரறிவாளனுக்கு அளிக்கப்பட்ட பரோல் முடிகிறது

இந்த நிலையில், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, தாயார் அற்புதம் அம்மாள் மீண்டும் கடிதம் எழுதினார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

எனது மகன் பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சாதாரண விடுப்பு (பரோல்) வழங்கினீர்கள். 26 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் வீட்டுக்கு வந்துள்ளார். இது அவருக்கு இடைக் கால நிவாரணம் என்றாலும் அவர் நிரந்தர விடுதலை பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்த விடுப்பு 24-ந் தேதியோடு முடிகிறது. தொடர்ச்சியாக சிறையில் இருந்ததால் அவருக்கு உயர் ரத்த அழுத்த நோய் உள்பட பல வியாதிகள் உள்ளன. எங்களது ஒரே மகனின் இந்த நிலை குறித்த கவலையால் பெற்றோராகிய நாங்களும் உடல் நலன் பாதிக்கப்பட்டுள்ளோம்.

கடந்த 2, 4, 8-ந் தேதிகளில் பேரறிவாளனுக்கு வீட்டிலேயே ரத்த பரிசோதனை நடந்தது. வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என்பதால் டாக்டரை நேரில் போய் சந்திக்க அவரால் இயலவில்லை. நோயால் வாடும் கணவர், மகள், மகன் ஆகிய 3 பேரையும் நோயாளியான என்னால் கவனிக்க முடியவில்லை.

பேரறிவாளன் என்னுடனே இருந்தால் எனக்கு மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பலம் கிடைக்கும். அவரது வருகைக்குப் பின்பு உடல் நிலையில் முன்னேற்றம் கண்டுள்ள எங்கள் குடும்பத்தினர் மேலும் நலம் பெறுவார்கள். எனவே அவருக்கு அளிக்கப்பட்ட சாதாரண விடுமுறையை மேலும் 30 நாட்கள் நீட்டித்துத் தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இது தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி, சிறை அதிகாரிகள் ஆகியோரை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைத்து ஆலோசனை நடத்தினார். பின்னர் பேரறிவாளனுக்கு மேலும் 30 நாட்கள் பரோல் வழங்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது.

அந்த முடிவை அரசாணையாக நிரஞ்சன் மார்டி பிறப்பித்தார். அதன்படி பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதத்துக்கு அதாவது அக்டோபர் 24-ந் தேதிவரை பரோல் காலம் நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, அவர் தனது வீட்டில் போலீஸ் பாதுகாப்புடன் மேலும் ஒரு மாதம் வசிப்பார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2025