Sunday, September 24, 2017

நாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு அரசு பஸ்சை போதையில் ஓட்டி வந்த டிரைவருக்கு பொதுமக்கள் தர்மஅடி


நாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு அரசு பஸ்சை போதையில் ஓட்டி வந்த டிரைவருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

செப்டம்பர் 24, 2017, 05:00 AM

ஆலந்தூர்,

நாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு நேற்று முன்தினம் இரவு அரசு விரைவு பஸ் வந்து கொண்டு இருந்தது. கிழக்கு கடற்கரை சாலையில் பாலவாக்கத்தில் வந்தபோது அரசு பஸ், சாலையில் அங்கும் இங்குமாக தள்ளாடியபடியே சென்றது.

சாலையோரம் நிறுத்தி இருந்த ஆட்டோ மீதும் பஸ் மோதியது. பஸ் தறிகெட்டு ஓடுவதை கண்டதும் பஸ்சில் இருந்த பயணிகள் அலறினார்கள். இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள், தொலைதூர பஸ் என்பதால் டிரைவர் தூக்க கலக்கத்தில் ஓட்டி இருக்கலாம் என்று நினைத்து கூச்சலிட்டபடி சென்று பஸ்சை மடக்கி நிறுத்தினர்.

ஆனால் பஸ்சை விட்டு கீழே இறங்கிய டிரைவர், போதையில் தள்ளாடியபடி வந்து நின்றார். அப்போதுதான் அவர், குடிபோதையில் பஸ்சை ஓட்டி வந்தது தெரிந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், பஸ் டிரைவருக்கு தர்ம அடி கொடுத்து நீலாங்கரை போலீசில் ஒப்படைத்தனர்.

போலீஸ் விசாரணையில் அவர், திருச்செந்தூரை சேர்ந்த மகாராஜன்(வயது 35) என தெரியவந்தது. நாகப்பட்டினத்தில் இருந்து புதுச்சேரி வழியாக பஸ் வந்த போது, அங்கு அவர் மது அருந்தி இருக்கலாம் என கூறப்படுகிறது.

இது குறித்து நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் மகாராஜனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் பயணிகள் அனைவரும் மாற்று பஸ்சில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2025