Sunday, September 24, 2017

கண்ணாடி நொறுங்கியதால் சவுதி அரேபியா விமானம் ரத்து பயணிகள் வாக்குவாதம்


சென்னையில் இருந்து சவுதி அரேபியாவுக்கு செல்ல இருந்த விமானத்தின் கண்ணாடி நொறுங்கி இருந்ததால் விமானம் ரத்து செய்யப்பட்டு, பயணிகள் அனைவரும் தனியார் ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.
செப்டம்பர் 24, 2017, 04:00 AM

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சவுதி அரேபியாவில் உள்ள ஜித்தா நகருக்கு நேற்று முன்தினம் இரவு விமானம் செல்ல இருந்தது. அதில் பயணம் செய்ய இருந்த 261 பயணிகள், சோதனைகளை முடித்துக்கொண்டு விமானத்தில் ஏறி தயாராக அமர்ந்து இருந்தனர்.

விமானத்தில் ஏறிய விமானி, இறுதி கட்ட சோதனைகளை செய்தார். அப்போது விமானத்தின் பின்பக்கத்தில் உள்ள கண்ணாடி ஒன்று நொறுங்கி இருந்ததை கண்டுபிடித்தார்.

நொறுங்கிய கண்ணாடியுடன் விமானத்தை இயக்கினால் விபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதால் இதுபற்றி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.

உடனடியாக தொழில்நுட்ப வல்லுனர்கள் விரைந்து வந்து, விமானத்தில் நொறுங்கி இருந்த கண்ணாடியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர்.

தங்களுக்கு உணவு எதுவும் வழங்காமல் நீண்ட நேரம் விமானத்தில் அமர்ந்து இருப்பதாக கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானம் செய்த அதிகாரிகள், பயணிகளுக்கு தேவையான உணவு, பிஸ்கட், தண்ணீர் ஆகியவற்றை வழங்கினர்.

ஆனால் நொறுங்கிய கண்ணாடியை உடனடியாக மாற்ற முடியாததால் விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.

சவுதி அரேபியாவில் இருந்து விமானத்தின் கண்ணாடி வந்ததும், அது மாற்றப்பட்ட பிறகு விமானம் புறப்பட்டு செல்லும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2025