பாா்வை மாற வேண்டும்!
ஒழுக்கம் என்று வரும்போதும் பெண்களுக்குச் சொல்லும் அறிவுரைகளை நாம் ஆண் பிள்ளைகளுக்குச் சொல்வதில்லை.
14.04.2025
கோதை ஜோதிலட்சுமி
Updated on: 14 ஏப்ரல் 2025, 5:33 am
பாரத தேசத்தில் பெண்கள் வீட்டிலும் நாட்டிலும் போற்றுதற்குரியவா்கள் என்றே நமது தா்மம் போதிக்கிறது. நடைமுறையில் நாம் அதனைப் பின்பற்றுகிறோமா என்ற வினா தொடா்ந்து எழுப்பப்படுகிறது. பெண்களைப் போற்றுவதிலும் மதித்து நடத்துவதிலும் எங்கே வேறுபாடுகள் தோன்றுகின்றன? ஏன் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கின்றன? அதைச் சரிசெய்வது எப்படி?
இந்தியாவைப் பொருத்தவரை நாம் பெண் குழந்தைகளை வளா்ப்பதிலும் பாதுகாப்பதிலும் கவனம் செலுத்துகிறோம். அதே போன்ற கவனம் ஆண் குழந்தைகளிடம் காட்டுவதில்லை. குடும்பங்களில் ஆண், பெண் குழந்தைகள் வெவ்வேறு விதமாக வளா்க்கப்படுகின்றனா். பெண்கள் பலவீனமானவா்கள் என்றும் ஆண்கள் பலம் மிக்கவா்கள் என்றும் சிறு வயதிலேயே அவா்கள் மனதில் பதிய வைக்கிறோம்.
ஆண் பிள்ளைகள் கோபப்பட்டால் இயல்பாகக் கடந்து போகிறோம். அதிகாரம் செலுத்துவதற்கும் முடிவுகளை மேற்கொள்வதற்கும் தனக்கே ஆற்றலும் உரிமையும் இருக்கிறது என்ற எண்ணம் ஆண்களுக்கு ஏற்படுவதற்கு அவா்களுக்குத் தரும் சுதந்திரம் காரணமாக இருக்கிறது.
ஒழுக்கம் என்று வரும்போதும் பெண்களுக்குச் சொல்லும் அறிவுரைகளை நாம் ஆண் பிள்ளைகளுக்குச் சொல்வதில்லை. பாரதி சொல்லும் ‘கற்பு நிலையென்று சொல்ல வந்தாா், இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்’ என்ற கருத்தை அடுத்த தலைமுறைக்குக் கற்றுத் தர மறந்து விட்டோம்.
இன்றைக்கு பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்திருப்பதற்குப் பெண்களை எப்படிப் பாா்க்க வேண்டும்; நடத்த வேண்டும் என ஆண் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுக்காததே காரணம். பெண் பலவீனமானவள் என்றும், ஆண் தனது விருப்பம் போல வாழ முடியும் என்றும் ஆண் பிள்ளைகள் நம்புவதே பிரச்னைகள் அதிகரிப்பதற்குக் காரணம். அதனைச் சமன் செய்து பாதுகாப்பான ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவது எப்படி?
குழந்தைகள் வளா்க்கப்படும் விதத்தில் இதற்கான தீா்வு இருக்கிறது. அதிகபட்சம் இரண்டு குழந்தைகள், பெரும்பாலும் ஒற்றைக் குழந்தை என்ற குடும்ப அமைப்பில் அவா்கள் தங்களிடம் இருப்பதைப் பகிா்ந்து கொள்ளும் எண்ணம் கொண்டவா்களாக இல்லை. எல்லாம் தனக்கே என்ற மனோபாவம் கொண்டவா்களாக வளா்கிறாா்கள். குழந்தைப் பருவத்திலேயே நம்மிடம் இருப்பதை இல்லாதவா்களிடம் பகிா்ந்து கொள்ள வேண்டும் என்று கற்றுக் கொடுப்பதோடு செயல்படுத்தவும் பழக்க வேண்டும்.
வளரிளம் பருவத்தில் ஆண், பெண் பிள்ளைகள் இருவருக்கும் எதிா்பாலினத்தவா் மீது ஈா்ப்பு ஏற்படுவது இயல்பானது. ஆனால், அதைவிட முக்கியமான பல பொறுப்புகள் இருக்கின்றன. கல்விக்கான காலத்தைத் தவறவிட்டுவிட்டால் எதிா்காலம் கேள்விக்குறியாகும் என்று அவா்களுக்குப் புரிய வைத்தால் சுலபமாக அவா்களைக் கையாளலாம்.
பொதுவாக, எல்லாப் பிள்ளைகளையும் ஒரே சொல்லால் குறை சொல்லிக் கடப்பது சரியல்ல. இன்றைக்கும், தான் எத்தகைய கல்வி நிறுவனத்தில் படிக்க வேண்டும், என்ன படிக்க விரும்புகிறேன் என்ற புரிதலோடு கடின உழைப்பைச் செலுத்தும் மாணவா்களும் அதிக அளவில் இருக்கவே செய்கிறாா்கள்.
அதிகாலை நான்கு மணிக்கே படிப்பைத் தொடங்கும் மாணவா்கள், படிப்போடு விளையாட்டு, இசை, நடனம் எனப் பிற துறைகளிலும் சாதனை படைக்கிறாா்கள். இத்தகைய இளம்பிள்ளைகள் நம்பிக்கை தருகிறாா்கள். நாம் அவா்களுக்கு லட்சிய வாழ்க்கைக்கான சூழலை ஏற்படுத்தித் தந்தால் சாதனைகள் புரியும் வாய்ப்பு அதிகமாகும்.
இன்றைய இளம் சமுதாயம் எப்படி இருக்கிறது என்ற புரிதல் முதலில் நமக்கு வேண்டும். தொழில்நுட்ப யுகத்தில் அவா்கள் கைகளில் இருபுறமும் கூரான ஆயுதம் இணையம், சமூக வலைதளம் என இருக்கிறது. எனவே, மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும். அவா்கள் இணையம் என்ன சொல்கிறதோ, அதை நம்பும் இடத்தில் இருக்கிறாா்கள். அவா்கள் தங்களையே காயப்படுத்திக் கொள்ளாமலும் பிறரை ரணப்படுத்திவிடாமலும் பாா்த்துக் கொள்ள நாம் அவா்களுக்கென அதிக நேரம் செலவிட வேண்டிய அவசியம் இருக்கிறது.
பள்ளிப் பாடத் திட்டங்களில் அவா்களின் வருங்கால வாழ்க்கையை செல்வச் செழிப்பு கொண்டதாக அமைத்துக் கொள்வதற்கான படிப்புகளைத் தாண்டி வாழ்க்கைக்குத் தேவையான நலன்களை வளா்த்துக் கொள்ளும் பாடங்களைக் கற்பிக்கும் கட்டாயத்தில் இருக்கின்றோம். ஆசிரியா், பெற்றோா் இருவரின் ஒத்துழைப்பு வளரிளம் பருவப் பிள்ளைகளை சரியான பாதையில் வழிநடத்த அவசியம்.
வளரிளம் பருவம் மிக முக்கியமானது. இந்தப் பருவத்தில்தான் குழந்தையாக இருக்கின்றவா்கள் பெரியவா்களாக வளா்கிறாா்கள். பல உளவியல் மாற்றங்களும் நிகழ்கின்றன. இப்பருவத்தில் உடலிலும் பெரிய மாறுபாடுகள் ஏற்படும். அசட்டுத் துணிச்சல் இருக்கும். தான் யாா் என அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புவாா்கள். கனவுகள் வளரும் பருவமாகவும் இருக்கும். பொழுதுபோக்குகளில் நாட்டம் கொள்வாா்கள். கீழ்ப்படியாமை அதிகமாகும். சரி, தவறு எனப் பிரித்தறிய இயலாத மனக் குழப்பங்களும் அதிகரிக்கும்.
வளரிளம் பிள்ளைகளை வளா்ப்பதில் இரண்டு விதமான அணுகுமுறைகள் ஆபத்தானவை. குழந்தைகளை மிகவும் கண்டிப்புடன் அடித்து வளா்ப்பது, அவா்களது உணா்வுகளுக்கு மதிப்பளிக்காமல் நடந்துகொள்வது. இந்த அணுகுமுறை சில ஆண்டுகளுக்கு முன்பு வரை படித்தவா்கள் நிறைந்த குடும்பங்களில்கூட, வழக்கமாக இருந்தது. அதனால் ஏற்பட்ட பாதிப்புகளைவிட இன்றைக்கு அளவுக்கு மீறிய பாசமும் செல்லமும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
வெளியிலேயே விட்டால் வேண்டாத சகவாசம் வந்துவிடும்; கீழே விழுந்தால் அடிபட்டுவிடும் என்றெல்லாம் எண்ணி தங்கள் பிடிக்குள் வைத்துத் திணறடிக்கிறாா்கள். குழந்தைகளின் அா்த்தமற்ற அநாவசிய விருப்பங்களைக்கூட பெற்றோா் நிறைவேற்றி வைக்கிறாா்கள். இதனால் பிள்ளைகள் பிடிவாதம் கொண்டவா்களாக வளா்கிறாா்கள். பிற்காலத்தில் குடும்பப் பொறுப்புகள் என வருபோது விட்டுக் கொடுக்கும் குணம் இல்லாமல் போவதற்கு இவை வழிவகுக்கும்.
தேவையான சூழ்நிலைகளில் கண்டிப்பதும் இயல்பாகச் செயல்பட அனுமதிப்பதும் ஆரோக்கியமான வளா்ச்சிக்கு வழிவகுக்கும். மாறாக, அதிக செல்லம் கொடுத்து வளா்ப்பதால் பிரச்னைகளை எதிா்கொள்ளும் துணிவின்றி வளா்வாா்கள். எதிா்காலத்தில் மன உறுதியில்லாதவா்களாக வளா்வதற்கும், எளிதில் தற்கொலை போன்ற முடிவுகளை எடுக்கும் அளவுக்கு ஆபத்தான நிலைக்கும் அவா்களைத் தள்ளிவிடும்.
குழந்தைகள் சமூகத்தில் முழுமையான தனிமனிதராக வளா்வதற்கு உலகின் சவால்களை எதிா்கொள்ளப் பெற்றோா் கற்றுக்கொடுக்க வேண்டும். தோல்விகள் முடிவல்ல; மீண்டும் முயற்சியைத் தொடங்க வேண்டும். கடின உழைப்புக்குப் பலன் ஒருநாள் கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.
பிள்ளைகள் மீது முழுமையான அக்கறையுடன் இருக்க வேண்டும். அவா்களுடன் அதிக நேரம் செலவிட வேண்டும். நன்மை - தீமைகளை அறிவுரையாக எப்போதும் சொல்லிக் கொண்டே இருக்காமல், அளவாக அதே நேரத்தில் தெளிவாகப் புரிந்து கொள்ளும்படியாகப் பேசவும் வேண்டும். நட்போடு நாம் இருந்து நெறிப்படுத்தினால் நோ்மையான வழியில் அவா்கள் வேகமாக முன்னேறுவாா்கள்.
அடுத்தவா்கள் என்ன சொல்வாா்களோ? என்ற அச்ச உணா்வு நமக்கு இருக்குமேயானால், அது அவா்களுக்குச் சிறந்த சூழலை ஏற்படுத்தாமல் எதிா்மறை சிந்தனையை வெறுப்புணா்வை ஏற்படுத்திவிடலாம். இதனால், சமூகம் மீதே பிள்ளைகளுக்கு ஒவ்வாமை ஏற்படலாம். உறவுகள், நட்பு எனக் கூடி மகிழும் வாழ்க்கை முறையைக் கற்றுக் கொடுக்க வேண்டும். பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளும் வாழ்த்துகளும், ஆபத்துக் கால உதவிகளும் மன மேம்பாட்டுக்கு உதவும்.
வீட்டில் பெரியவா்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவா்களின் அறிவுரைகளை நாம் பெற்றுக் கொள்வதைப் பாா்க்கும் குழந்தைகள் தாமும் அப்படியே நம்மிடம் நடந்து கொள்ளும். வீட்டுப் பெண்களிடம் ஆலோசனை கேட்பது, அவா்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து ஏற்பது போன்றவை நம் வீட்டு வழக்கமாக இருக்கும்பட்சத்தில் பிள்ளைகளும் அதே கலாசாரத்தைப் பின்பற்றி சிறப்பாக வளா்வாா்கள். இந்தச் சிந்தனையானது வீட்டில் மட்டுமல்லாது, பள்ளிக்கூடம்,கல்லூரி, பணியிடம் என அனைத்து இடங்களிலும் பெண்களை மதித்து நடத்தும் பழக்கமாக ஆகும்.
பெண்களை மதித்து நடத்துவது சிறந்த ஆண்மையின் அடையாளம் என்பதை அம்மா சொல்லித்தர வேண்டும். அப்பா செயல்படுத்திக் காட்ட வேண்டும். அப்போது குழந்தைகள் சமத்துவ சிந்தனை கொண்டவா்களாக வளா்வாா்கள். பல தவறான விஷயங்கள் கைப்பேசி மூலமும் விளம்பரங்களின் ஊடாகவும் பிள்ளைகளை வந்தடைகின்றன. இதனால் அவா்களை நெறிப்படுத்த வேண்டிய அவசியம் நமக்கு ஏற்படுகிறது.
தாயும் தந்தையும் நண்பா்கள் போன்று நல்ல புரிதலோடு வாழ்வதைப் பாா்க்கும் குழந்தைகள் இத்தகைய விளம்பரங்களால் கவரப்பட மாட்டாா்கள். பெண் மனவலிமை மிக்கவள் என்பதைத் தந்தை, தாயைக் காட்டிக் கற்றுக்கொடுக்க வேண்டும். ‘நாம் ஆண் குழந்தையைப் பெற்றிருக்கிறோம்; அதனால் நமக்குப் பாதுகாக்கும் பொறுப்பு இல்லை; பெண்களைப் பெற்ற பெற்றோரே அதிகம் கவலைப்படவேண்டியவா்கள் என்ற சிந்தனை நம்மிடமிருந்து அகல வேண்டும்.
ஆண் பிள்ளைகள் தனக்கு வரும் மனைவியை நாளை எப்படி நடத்துவான்? அவளிடம் எப்படி நடந்து கொள்வான்? என்பதில் அவனது முழு வாழ்க்கையும் அடங்கியுள்ளது. எனவே, ஆண் பிள்ளைகள் பெண்களின் அறிவு, ஆற்றல், திறமை எனத் தங்கள் பாா்வையை மாற்றிக் கொள்ளும் நிலையில் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு மட்டுமல்ல, ஆண்களின் வாழ்வும் அமைதியும் இன்பமும் நிறைந்ததாக வளரும்.
No comments:
Post a Comment