Friday, April 25, 2025

’ சொந்த உறவுகள் மேம்பட..’

இன்றைய சிந்தனை..( 25.04.2025..)

’ சொந்த உறவுகள் மேம்பட..’’

உறவுகள் குடும்பம் என்கிற மாளிகையைத் தாங்கிப் பிடிக்கிற தூண்கள். ஒவ்வொருவரையும் இணைக்கின்ற சங்கிலிப் பிணைப்புகள்.

சங்கிலியில் ஒரு கண்ணி அறுந்து போனாலும் அணிய முடியாது. அதுபோல குடும்ப வாழ்க்கையில் ஒரு உறவு பிரிந்தாலும் அது உன்னதமாக இருக்காது.

உறவு முறைகள் என்போர் அன்பின் அடையாளங்கள். பாசத்தின் பிணைப்புகள். எல்லைகளைக் கடந்து எங்கோ இருக்கும் தன் மகனுக்கு உடல் நலம் இல்லாவிட்டால் தாய்க்கும் தந்தைக்கும் தடுமாற்றம் ஏற்படுகிறது.

தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பதன் வெளிப்பாடு. வீட்டில் ஒருவர் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் கிடக்கிறார்.

சுற்றிலும் சுற்றங்கள் சூழ்ந்து இருக்க விழிகளைத் திறந்து பார்க்கும் அவருக்கு முகம் மலர்ச்சி,மகிழ்ச்சி, காரணம் இரத்த உறவுகள் சுற்றி இருக்கையில் இயல்பாகவே மனதில் ஏற்படும் பாதுகாப்பு உணர்வு தான்.

தாத்தா-பாட்டி, சித்தி- சித்தப்பா, அத்தை-மாமா, அண்ணன்-தம்பி, அக்காள்- தங்கை என்று இவர்களுக்கு மத்தியில் வளரும் குழந்தைகளுக்கு அன்பும் அரவணைப்பும் அதிகமாகக் கிடைக்கின்றது. அம்மா அடித்தால் பாட்டியிடம் ஓடுகிறது. அப்பா அடித்தால் தாத்தாவிடம் தஞ்சமடைகிறது.

அரவணைக்கச் சுற்றிலும் உறவுகள் இருக்கும் போது குழந்தையின் மனதில் தன்னம்பிக்கை உணர்வுகள் தானாகவே துளிர் விடுகின்றன.

சுற்றிலும் உறவுகள் கூடி இருக்கும் போது மன வலிமையும் கூடுகிறது. இதுதான் கூட்டுக் குடும்பத்தின் உன்னதம். உறவுகளின் உன்னதம்.

இன்றைய சூழலில் பரபரப்பாகும் பந்தய வாழ்க்கைச் சுழற்சியில் நாட்கள் நகர்கின்றன. வாரங்கள் விரைகின்றன. பழைய நண்பனின் முகம் பார்க்க முடியவில்லை. நேரம் இல்லை என்ற ஓர் ஒற்றை வார்த்தையில் சொல்லி விடுகிறோம்.

அர்த்தமில்லா விளையாட்டில் நேரத்தை விரயமாக்கி அயர்ந்து போகிறோம். என்ன காரணம்?வசதிகளும் வாய்ப்புகளும் பெருகப் பெருக தேடல்கள் எல்லையற்று நீண்டு கொண்டே போகின்றன.

அதனால் சிந்தனைகளும் மாறுபடுகின்றன. வாழ்க்கைக்கான தேவைகள் என்ற நிலைமாறி தேவைகளுக்கான வாழ்க்கை என்ற நிலை உருவாகி வருகிறது.

பிறரைப் பற்றிய சிந்தனையற்ற ஓட்டம் மனிதனைத் தொலைத்துக் கொண்டு இருக்கின்றது. சுயநலத் தேடல்களும் இயந்திர வாழ்க்கையின் வேகமும், ‘மனிதம்’ காணாமல் போய் விடும் அபாயத்தை உணர்த்துகின்றன.

உறவுகள் இல்லாத ஒருவன் எத்தனை கோடிகள் வைத்து இருந்தாலும் அனாதை தான் என்பதை மறந்து விடாதீர்கள்.

வயதான காலத்தில் நாதியற்றுப் போகவா பாடுபட்டு ஓடியோடி உழைக்கிறீர்கள். உறவுகளின் உன்னதத்தை உணருங்கள்,

உறவுமுறைகளை உங்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.

விடுமுறை நாளில் உறவினரோடு அவர்கள் வீடுகளுக்குச் சென்று உணவருந்தி, விளையாடி, ஓய்வெடுத்து கதைபேசி, களிப்பு அடையச் சொல்லுங்கள்.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...