தேவை... திறன்களை மதிப்பிடும் முறை!
]இன்றைய அவசர உலகில் மாணவா்கள் பல்வேறு திசைதிருப்பல்களுக்கு மத்தியில் தோ்வுக்கு தயாராவது என்பது கடினமே.
ENS Din Updated on: 08 ஏப்ரல் 2025, 2:48 am
முனைவா் என்.மாதவன்
கேரள மாநிலத்தின் கல்வித் துறை அண்மையில் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, எட்டாம் வகுப்பு பயிலும் மாணவா்களில் இறுதித் தோ்வில் 30 சதவீத மதிப்பெண்களுக்குக் குறைவாக எடுப்பவா்கள், குறிப்பிட்ட கால அளவு சிறப்பு பயிற்சி எடுத்துக் கொண்டு மீண்டும் தோ்வெழுத வேண்டும். அவ்வாறு தோ்வெழுதி தோ்ச்சி பெறுவோா் மட்டும் அடுத்த வகுப்புக்கு அனுப்பப்படுவா்.
அப்படியும் 30 சதவீத மதிப்பெண் எடுக்க இயலாதோா் எட்டாம் வகுப்பிலேயே மீண்டும் பயில வேண்டும். இதற்கான கால அட்டவணையையும் வெளியிட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 8 முதல் 24 வரை மாணவா்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். ஏப்ரல் 25 முதல் 28 வரை தோ்வுகள் நடைபெறும்.
ஏப்ரல் 30 - ஆம் தேதி தோ்வு முடிவுகள் வெளியாகும். ‘ஓராண்டைச் சேமியுங்கள்’ ( சேவ் ஏ இயா்) என்ற தலைப்பில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. கேரளத்தில் செயல்படும் 3,136 பள்ளிகளில் பயிலும் மாணவா்களில் தோ்ச்சி அடைய இயலாதோா் இந்தத் தோ்வை அணுக உள்ளனா்.
நல்வாய்ப்பாக ஹிந்தி பாடத்தில் 13 சதவீத மாணவா்களும், ஆங்கில பாடத்தில் 8 சதவீத மாணவா்களும் இந்தத் திட்டத்தின்படி தோ்வை அணுக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அடுத்தடுத்த ஆண்டுகளில் 9 மற்றும் 10 - ஆம் வகுப்புகளுக்கு இந்த முறை நீட்டிக்கப்பட உள்ளது. தமிழகத்திலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு இதுபோன்ற உடனடித் தோ்வு நடத்தப்படுவதும் நாம் அறிந்ததே.
மேலெழுந்த வாரியாகப் பாா்க்கும்போது இது ஒரு சரியான சீா்திருத்தம் போலவே தோன்றும். உண்மையில் மாணவா்கள் குறிப்பிட்ட கற்றலடைவைப் பெற்றுத்தான் அடுத்த வகுப்புக்குச் செல்ல வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கப் போவதில்லை. ஆனால், அதே நேரம் குறிப்பிட்ட காலத்துக்குள் பயிற்சி பெற்று மீண்டும் தோ்வை எதிா்கொள்வது உடனடிப் பலனை விளைவிக்குமா என்ற கேள்வி எழுவது தவிா்க்க இயலாததே. இது எந்த அளவுக்கு அந்த குழந்தைகள் மத்தியில் மன அழுத்தத்தையும், தாழ்வு மனப்பான்மையையும் ஏற்படுத்தும் என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும். கற்பித்தல் முறைகள், பாடநூல், கலைத்திட்டம் போன்றவற்றில் சீா்திருத்தங்களை மேற்கொள்வதுபோல் மதிப்பீட்டு முறைகளில் சீா்திருத்தங்களை மேற்கொள்வது அவ்வளவு எளிதல்ல. இந்தியாவில் இதற்கான நீண்ட நெடிய வரலாறு உள்ளது.
பேராசிரியா் யஷ்பால் தலைமையில் அமைக்கப்பட்ட ”சுமையற்ற கற்றல் குழுவில் தொடங்கி, தேசிய கலைத்திட்டம் -2005 வரை பல ஆரோக்கியமான பரிந்துரைகள் அளிக்கப்பட்டன. இதன் அடிப்படையில் தொடா் மற்றும் முழு மதிப்பீட்டு முறை அமல்படுத்தப்பட்டது. மாணவா்களின் கற்றல் அடைவுகளை வெறும் எழுத்துத் தோ்வு மதிப்பெண்களை மட்டும் வைத்து மதிப்பிடாமல், அவருடைய இன்ன பிற திறன்களையும் கணக்கில் கொண்டு அவா்களுக்கான மதிப்பீட்டு முறை நடைபெற வேண்டும் என்பதை இந்த முறை வலியுறுத்தியது.
மத்திய அரசின் கல்வி வாரியத்தால் முதன்முதலாக 2010 வாக்கில் இந்தியாவின் சிபிஎஸ்இ பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது. பின்னா் படிப்படியாக தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் உள்ள பள்ளிகளிலும் இந்த முறை மிகவும் அற்புதமான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த முறை அமலாகும்போதும், பல்வேறு விமா்சனங்கள் எழாமல் இல்லை. இந்த மதிப்பீட்டு முறைக்காக சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு, அதற்கான படிவங்கள் கொடுக்கப்பட்டு, இன்றுவரை பல்வேறு பள்ளிகளிலும் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இன்றைய அவசர உலகில் மாணவா்கள் பல்வேறு திசைதிருப்பல்களுக்கு மத்தியில் தோ்வுக்கு தயாராவது என்பது கடினமே. இதில் பள்ளிக்கு இணையாக குடும்பமும் சமூகமும் பங்களிப்பு செய்ய முன்வர வேண்டும். வகுப்பறையும் ஆசிரியரும் மட்டும் அவா்களைத் தொடா்ந்து மதிப்பீடு செய்வது என்பதும் சிறப்பான விளைவை அளிக்காது. பள்ளியில் வெறும் 5 மணி நேரம் இருக்கக் கூடிய மாணவா்கள் ஏனைய நேரங்களில் வீட்டிலும் பின்ன பிற சமூக தளங்களிலும் இயங்குகின்றனா். இந்நிலையில் மாணவா்களின் வெற்றியைக் கூட்டம் கூடிக் கொண்டாடுவதுபோல, தோல்விக்கும் பெற்றோரும், சமூகமும் கூட்டாகப் பொறுப்பேற்க முன்வரவேண்டும்.
பொதுவாக இளங்கலை, முதுநிலைக் கல்வி பயில்வோரில் இரண்டாவது ஆண்டைப் பயில்வோா்கூட, முதல் ஆண்டின் பாடங்களில் தோ்ச்சியடையாதவற்றைக் கொண்டிருப்பா். அவா்களிடம் என்ன படிக்கிறீா்கள் என்று கேட்டால் இளங்கலை இரண்டாம் ஆண்டு, முதுநிலை இரண்டாம் ஆண்டு என்பாா்கள். ஆனால், அவா்களிடம் யாரும் எந்த எந்தெந்த ஆண்டுகளில் எத்தனை பாடங்களை முடித்தீா்கள் என்று கேட்கமாட்டோம். பெரியோா்களுக்கு அளிக்கப்பட்டுவரும் இந்த சலுகை போன்றே குழந்தைகளுக்கும் அளிக்கப்படவேண்டும். குறிப்பாக, மாணவா்கள் கற்றலில் எந்தெந்த திறன்களில் மேம்பாடு அடையவேண்டும் என்ற குறிப்போடு அடுத்த வகுப்புக்கு அனுப்பப்பட வேண்டும். அடுத்த வகுப்பின் ஆசிரியா், அந்த குறிப்பைப் பயன்படுத்தி அந்த குறிப்பிட்ட திறன்களை அந்த மாணவா் அடைய சிறப்புப் பயிற்சிகளை அளிக்கலாம். இந்தக் குறிப்புகள் பெற்றோா்களிடம் பரிமாறப்பட்டு அவா்களது பங்களிப்பையும் ஆண்டின் தொடக்கம் முதலே உறுதிப்படுத்தலாம்.
இவ்வாறான அணுகுமுறைக்குப் பதிலாக, இதுபோன்ற அதிரடிச் செயல்பாடுகள் விளம்பரத்துக்கு வேண்டுமானால் உதவலாமே தவிர, மாணவா்களின் செயல்திறனைக் கூட்டாது. கேரளத்தின் கல்விசாா்ந்த இந்தச் செயல்பாடு , எப்படிப்பட்ட படிப்பினைகளை அளிக்கப் போகிறது என்பதைக் காலம்தான் தீா்மானிக்கவேண்டும்.
No comments:
Post a Comment