ரயில்வே அமைச்சர் ராஜினாமா?
சுரேஷ் பிரபு முடிவை ஏற்க பிரதமர் தயக்கம்புதுடில்லி:ஐந்து நாட்களில், உ.பி.,யில், இரண்டு ரயில் விபத்துகள் நடந்து உள்ள நிலையில், அதற்கு தார்மீக பொறுப்பேற்று, பதவியை ராஜினாமா செய்வதாக, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியுள்ளார். காத்திருக்கும்படி, பிரதமர் மோடி கூறியுள்ளதாக, அவர் தெரிவித்தார்.

உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. முசாபர் நகரில், சமீபத்தில், உத்கல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில், 22 பேர் உயிரிழந்தனர்; 156 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், அவ்ரியா மாவட்டத்தில், கைபி யாத் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று தடம் புரண்ட தில், 100 பேர் காயமடைந்தனர்.
உ.பி.,யின் அஜம்கரில் இருந்து, டில்லிக்கு செல்லும் கைபியாத் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று
அதிகாலை, 2:50 மணிக்கு, ஆளில்லா லெவல் கிராசிங்கை கடக்க முயன்றது. அப்போது, ரயில் பாதையில் குறுக்கே வந்த, மணல் ஏற்றி சென்ற டிப்பர் லாரி மீது மோதியது. இந்த விபத்தில், ரயிலின் ஒன்பது பெட்டிகள் தடம்புரண்டன; இதில், 74 பேர் காயமடைந்தனர்.
ஐந்து நாட்களில், இரு விபத்துகள் நடந்ததற்கு பொறுப்பேற்று, பதவியை ராஜினாமா செய்ய முன்வந்துள்ளதாக, மத்திய ரயில்வே அமைச்ச ரும், பா.ஜ., மூத்த தலைவருமான, சுரேஷ் பிரபு தெரிவித்தார்.இது தொடர்பாக, 'டுவிட்டர்' சமூகதளத்தில், அவர் வெளியிட்டுள்ள பதிவு:
எதிர்பாராத விபத்துகளால், பலர் உயிரிழக்க நேர்ந்தது, காயமடைந்தது, மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினேன். இந்த விபத்துகளுக்கு, முழு பொறுப்பையும் ஏற்று, ராஜினாமா செய்வதாக கூறினேன். பொறுமை யுடன் காத்திருக்கும்படி, பிரதமர் மோடி கூறினார்.
ரயில்வே அமைச்சராக, 3ஆண்டுகளில், ரயில்வே யின் வளர்ச்சிக்கு,என் ரத்தத்தையும், வியர்வையை யும் சிந்திஉள்ளேன்.இத்தனை ஆண்டுகளாக புறக் கணிக்கப்பட்ட,கவனிப்பாரில்லாமல் இருந்த ரயில்வே நிர்வாகத்தை சீரமைக்கும் பணியில், பிரதமர்மோடியின் தலைமையின் கீழ் ஈடுபட்டிருந் தேன். இதுவரை இல்லாத அளவுக்கு, முதலீடுகள் செய்யப் பட்டன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விபத்துகளுக்கு பொறுப்பேற்று, ரயில்வே அமைச்சர் பதவி விலக முன்வந்துள்ளது, அரசியல் வட்டாரத் தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சுரேஷ் பிரபு, அமைச்சராக தொடருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இரண்டு முன்னுதாரணம்
சுரேஷ் பிரபுவையும் சேர்த்து, இதுவரை, 43 பேர், ரயில்வே அமைச்சர்களாக இருந்துள்ளனர். விபத்து களுக்கு பொறுப்பேற்று,இதுவரை, இருவர் மட்டுமே, தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். தமிழ கத்தின் அரியலுாரில், 956ல் நடந்த ரயில் விபத்தில், 142 பேர் உயிரிழந்தனர். அந்த கோர விபத்துக்கு பொறுப்பேற்று, லால் பகதுார் சாஸ்திரி, ரயில்வே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
அதையடுத்து, 43 ஆண்டுகளுக்கு பின், விபத்து களுக்கு தார்மீக பொறுப்பேற்று, தற்போது, பீஹார் முதல்வராக உள்ள நிதிஷ் குமார், ரயில்வே அமைச் சர் பதவியில் இருந்து விலகினார். 1999ல், அசாம் மாநிலம், கெய்சாலில் நடந்த விபத்தில், 290 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, நிதிஷ் குமார் பதவி விலகினார்.
கடந்த, 2000ல் நடந்த இருவிபத்துகளுக்கு பொறுப் பேற்று, தற்போது, மேற்கு வங்க முதல்வராக உள்ள, மம்தா பானர்ஜி, ரயில்வே அமைச்சர் பதவியில் இருந்து விலக முன்வந்தார். ஆனால், அப்போதைய பிரதமர் வாஜ்பாய், அதை ஏற்கவில்லை.
வாரியத்துக்கு புதிய தலைவர்
ரயில்வே வாரியத்தின் புதிய தலைவராக, 'ஏர் - இந்தியா' தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அஸ்வினி லோகானி நியமிக்கப்பட்டு உள்ளார்.
ரயில் விபத்துகளுக்கு பொறுப்பேற்று, ரயில்வே வாரிய தலைவராக இருந்த, ஏ.கே.மிட்டல், நேற்று முன்தினம், தன் பதவியை ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் அளித்திருந்தார்; அது, நேற்று ஏற்கப்பட்டது.
அதை தொடர்ந்து, அஸ்வினி லோகானியின் நியமனத்துக்கு, மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு, நேற்று அனுமதி அளித்தது. ரயில்வே பொறியியல் சேவை பிரிவு அதிகாரியான, லோகானி, டில்லி மண்டல மேலாளர் மற்றும் ரயில்வே மியூசியம் இயக்குனராக பணியாற்றி உள்ளார்.
விபத்துகளுக்கு காரணம் என்ன?
மத்திய ரயில்வே அமைச்சராக, 2015ல், சுரேஷ் பிரபு பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை, 346 ரயில் விபத்துகள் நடந்துள்ளன. இதற்கு முக்கிய காரணம், ரயில்வேயில், பாதுகாப்பு ஊழியர்கள் பற்றாக்குறை என, கூறப்படுகிறது. ரயில்வே புள்ளி விபரங்களின்படி, 1.42 லட்சம் பாதுகாப்பு பிரிவு பணியிடங்கள் காலியாக உள்ளன.
ரயில்வேயை மேம்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய, அனில் கோகட்கர் குழு, 2012ல் அமைக்கப்பட்டது. இந்த குழு அளித்துள்ள பல்வேறு பரிந்துரைகளில் முக்கியமானது, பாதுகாப்பு பணியிடங்களை, உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது தான். ஆனால், இதுவரை, இந்த குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப் படவில்லை