Tuesday, February 3, 2015

உங்கள் பிரியாணியில் சிக்கனா...பூனைக்கறியா?




அசைவ உணவுகளை விரும்பிச் சாப்பிடுவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை செய்தி. சென்னையில் புற்றீசல் போல சாலையோர கடைகள் செயல்படுகின்றன. இங்கு சுகாதாரம் என்பதை எழுதி வைத்து பாக்கெட்டில் வைத்துக் கொள்ளலாம். பெயரளவுக்கு கூட சுகாதாரத்தை இத்தகைய கடைகள் கடைப்பிடிப்பதில்லை.

அதோடு இங்கு சமைக்கப்படும் உணவுப் பொருட்களின் தரமும் படுமோசம். உணவு பொருட்களின் விலை குறைவு என்பதால் இந்தக் கடைகளில் கூட்டம் அலைமோதுகின்றன. ருசிக்கு சாப்பிடாமல் ஏதாவது பசிக்கு சாப்பிட வேண்டும் என்று நினைப்பர்களின் கூட்டம் இங்கு அதிகம். சாப்பிட்டு விட்டு பிறகு அவர்களுக்கு ஏற்படும் உபாதைகள் பல.


சமீபத்தில் இத்தகைய சாலையோர தள்ளு வண்டிக்கடைகளில் சிக்கன் என்ற பெயரில் பூனைக்கறி பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. இதற்காக வீடுகளில் வளர்க்கப்படும் பூனைகளைப் பிடிக்க ஒரு கும்பல் சென்னையில் செயல்படுகிறது. இந்த கும்பல் பூனைகளைப் பிடித்து அதன் கறிகளை குறைந்த விலைக்கு சாலையோர தள்ளுவண்டி கடைகளுக்கு விநியோகம் செய்து விடுகிறது. இந்த கறிகளுடன் மசாலா சேர்த்து அதை சிக்கன் என்று சில கடைக்காரர்களும் விற்றுவிடுகின்றனர்.

குறைந்த விலைக்கு சிக்கன் 65 கிடைக்கிறது என்று மக்களுக்கும் அதை விரும்பி சாப்பிடுகின்றனர். இதை சாப்பிடுபவர்களுக்கு எந்த வித்தியாசமும் தெரிவதில்லை. இதனால் சென்னை சாலையோர தள்ளுவண்டிக் கடைகளில் சிக்கன் என்ற பூனைக்கறி விற்பனை படுஜோராக விற்பனை நடந்து வருகிறது. இதை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளும், மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளும் கண்டுக்கொள்வதில்லை.
பூனைக்களுக்கு ஏற்பட்ட இந்த திடீர் மவுசு காரணமாக இப்போது சென்னையில் பல வீடுகளில் வளர்க்கப்படும் பூனைகள் மாயாகும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பூனைகள் மாயமாகிய சில நாட்கள் மட்டும் அவற்றை தேடும் உரிமையாளர்கள் அதன்பிறகு அதை மறந்து விடுகின்றனர். இது பூனைகளை திருடும் கும்பலுக்கு வசதியாக உள்ளது.

கடந்த மூன்று மாதங்களில் செங்குன்றத்தில் 20 பூனைகளும், பல்லாவரத்தில் 13, ஐ.சி.எப். அயனாவரத்தில் 6, ஆவடியில் 1 என மொத்தம் சென்னையில் 40 பூனைகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக 'பீப்பிள் பார் கேட்டில் இன் இந்தியா' என்ற அமைப்பினர் தெரிவிக்கின்றனர். கோட்டூர்புரம் பகுதியில் பூனை வெட்டப்பட்ட பிறகு அதன் தோலை இந்த அமைப்பினர் கண்டுப்பிடித்துள்ளனர். இதுபோன்று சென்னையில் பல இடங்களில் பூனைகள் திருடப்படுவது குறித்த விவரங்கள் வெளியில் தெரிவதில்லை என்று அந்த அமைப்பினர் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து 'பீப்பிள் பார் கேட்டில் இன் இந்தியா' என்ற அமைப்பின் உறுப்பினர் அஸ்வத் கூறுகையில், "கால்நடைகளை துன்புறுத்துவது பாவம். அவற்றை நேசிக்க வேண்டும். குறிப்பாக வீடுகளில் வளர்க்கப்படும் பூனை, நாய், பசு ஆகியவற்றின் மீது பரிவு, பாசம் நமக்கு கட்டாயம் தேவை. பூனைகளை கறிக்காக வெட்டிக் கொலை செய்வது குற்றம். இதுகுறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக பூனைகளை கொன்றவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்து வழக்கும் பதிவு செய்து இருக்கிறோம். கடந்த 30.12.2014ல் ஐ.சி.எப். காவல்நிலையத்தில் வைத்தியலிங்கம் என்பவர் மீது 6 பூனைகளை இறைச்சிக்காக கொண்டு சென்றாக புகார் கொடுக்கப்பட்டு பூனைகள் மீட்கப்பட்டுள்ளன" என்றார்.

'புட் ஸ்டாண்டர்ஸ் சேப்டி அத்தாரிட்டி' வழிகாட்டுதலில் ஆடு, மாடு, கோழி, பன்றி, மீன் ஆகியவற்றை சாப்பிடலாம். முயல், புறா, பூனை போன்றவற்றை சாப்பிட்டால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதையொல்லாம் அசைவ உணவுப்பிரியர்கள் கண்டுக்கொள்வதில்லை. கண்டதை சாப்பிட்டு உடல் நலத்தையும், ஆயுள் நாட்களையும் குறைத்து வருவது வேதனைக்குரியது.




சென்னையில் விற்கப்படும் பிரியாணியிலும் இப்போது தில்லுமுல்லு நடப்பதாக பெயர் வெளியிட விரும்பாத சுகாதார அதிகாரி ஒருவர் கூறினார். சென்னை பெரியமேடு பகுதியில் சில கடைகளில் விற்கப்படும் பிரியாணி அனைத்தும் சாப்பிட தகுதியற்றவைகள். ஏனெனில் இங்கு சப்ளை செய்யப்படும் கறிகள் அனைத்தும் வடமாநிலங்களிலிருந்து சென்னைக்கு ரயில், பஸ் ஆகியவை மூலம் கொண்டு வரப்படுகின்றன. இதற்காக பல நாட்களுக்கு முன்பே கறிகளை வெட்டி எந்தவித பதப்படுத்தல் இல்லாமல் அப்படியே அனுப்பி வைக்கின்றனர். இதனால் அந்தக்கறிகளைக் சாப்பிடும் போது பல்வேறு பாதிப்புகள் நிச்சயம் ஏற்படும்.

ஒரு சில நட்சத்திர ஓட்டல்களில் சிக்கன் 65 தயாரித்து நாட்கள் கடந்தாலும் அது மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. இவற்றை சாப்பிடும் போது கட்டாயம் பாதிப்பு ஏற்படும். இதனால் நீண்ட நாட்களாக ஓட்டல்களில் சாப்பிடுபவர்கள் வாங்கும் சம்பளத்தில் பாதியாவது மருத்துவர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.

சில டாஸ்மாக் பார்களில் விற்கப்படும் அசைவ உணவுகளின் தரம் படுமோசம். குடிபோதையில் இருப்பவர்கள் அதையெல்லாம் கண்டுக்கொள்வதில்லை. சைடு டிஸ் கிடைத்தால் போதும் என்ற மனநிலையில் இருக்கின்றனர். முன்பெல்லாம் காடை என்று காகத்தின் கறி சில ஓட்டல்களில் பயன்படுத்தப்பட்டது. இப்போது சிக்கன் என்ற பெயரில் பூனைக்கறி விற்பனை சென்னையில் மட்டுமல்ல தமிழகத்தில் பட்டைய கிளப்புகிறது.

எனவே அசைவ உணவுகளை வெளி இடங்களில் சாப்பிடுபவர்கள் இதையெல்லாம் உணர வேண்டும். அதற்காக அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டிய அவசியமில்லை. தரமான அசைவ உணவுகள் கிடைக்கும் இடங்களை தேர்வு செய்வது புத்திச்சாலித்தனம்.

உணவே மருந்து என்ற காலம் மாறி அது விஷம் என்ற நிலைமை ஆகிவிட்டது.

-எஸ்.மகேஷ்

No comments:

Post a Comment

US doctor warns against using DOLO-650, says it is not a 'candy':

US doctor warns against using DOLO-650, says it is not a 'candy':  Liver, kidney-related side effects to know etimes.in | Apr 16, 20...