Friday, January 13, 2017

சகிப்புத்தன்மை கற்போம்

By எம். அருண்குமார்  |   Published on : 13th January 2017 01:10 AM

தனிமனித வாழ்வில் துவங்கி, பொது வாழ்க்கை, குடும்பம், கொடுக்கல் வாங்கல், அரசியல் என மனித சமூகத்தின் அனைத்திலும் ஆளுமை செலுத்துகிற ஆற்றல் கொண்ட ஓர் அற்புதப் பண்புதான் சகிப்பு தன்மையாகும்.
சகிப்புத்தன்மையை இழந்து விட்டால் நம் நிலை தவறிவிடும். வாழ்க்கைப் போகும் வழியும் மாறிவிடும். எப்போது நாம் சகிப்புத்தன்மையை மேற்கொள்கின்றோமோ அப்போது வியக்கத்தக்க வகையிலான வாழ்க்கையை நோக்கி நாம் பயணிக்க துவங்கி விடுவோம்.

மனித வாழ்க்கையில் சோதனைகள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும். சோதனைகள் பல்வேறு வடிவங்களில் மனித வாழ்க்கையில் இடம் பெறுகின்றது. அதில் ஒன்று பசி, பட்டினி. அப்படி ஒருவர் பசி, பட்டினியில் வாடும் போது சகிப்புத்தன்மையைக் கையாள வேண்டும்.
நோயால் முடங்கும் போது சகிப்புத் தன்மை வேண்டும். மற்றவர்கள் அந்நேரத்தில் நம்மை கவனிக்க தவறும்பட்சத்தில் கோபப்படாமல் சகிப்புத் தன்மையை வெளிப்படுத்த வேண்டும்.

நமக்குள்ளே பதிலுக்கு பதில் என்ற உணர்வு இயல்பாக இருக்கும். அவன் பேசிவிட்டால் நாமும் பேசவேண்டும் ,அவன் அடித்து விட்டால் நாமும் அடிக்க வேண்டும்.

ஒருவர் நம்மிடம் மரியாதைக்குறைவாக நடந்து கொண்டால் நாமும் அவரிடம் அப்படியே நடந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பது தான் பழி வாங்கும் தன்மை. இந்த பழி வாங்கும் தன்மையை விட்டு விட்டால் அதுதான் சகிப்புத்தன்மை.

அதே போல மற்றவர்கள் எல்லா விதத்திலும் நமது விருப்பத்திற்கு ஏற்பவே நடந்து கொள்ள வேண்டும் என்று நினைக்காமல் அவர்களுக்குரிய முறையில் அவர்கள் இருப்பார்கள் என்று ஏற்றுக் கொண்டால் அது சகிப்புத்தன்மை.
உலகில் நிலவும் பல்வேறு கலாசாரங்களையும் ஏற்றுக் கொள்வதையே சகிப்புத்தன்மை என்று அழைக்கிறோம். மனிதகுலம் வாழ்வதற்குத் தேவையான அன்பு, பரிவு, ஒற்றுமை ஆகிய பல உயர்ந்த உணர்வுகளுக்கு அடிப்படையாக, சகிப்புத் தன்மை நம்மிடையே இருக்க வேண்டும்.
சகிப்பு தன்மை இல்லை, இல்லை என்ற குரல் இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் இன, மொழி, மத பேதமின்றி ஒலித்துக்கொண்டு இருக்கிறது.

ஒரு மனிதன் சக மனிதனை மதித்தல், அவனின் உரிமைகள், சுதந்திரத்தை மதித்தல், ஒரு சமூகம் மற்றொரு சமூகத்தின் மொழி, பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றுக்கு மதிப்பளித்து அவர்களின் உரிமைகளில் தலையிடாமல் இருப்பது சகிப்புத்தன்மையாகும்.

சகிப்புத்தன்மை என்பது ஜாதி, மத, இன, மொழி உணர்வுகளால் வரும் பற்று அல்ல, மாறாக அது ஒவ்வொருவரின் மனதிலிருந்து எழும் வாழ்வியல் நெறி. அந்த உணர்வை எந்த ஒரு சமூக நம்பிக்கைகளாலும், நிறுவனங்களாலும், அரசாலும் உருவாக்க முடியாது.

இந்திய அரசியலமைப்பின் ஆன்மாவான முகவுரை இந்தியா ஒரு சமயச்சார்பற்ற சகிப்புத்தன்மை கொண்ட நாடு என விளக்குகிறது.
கருத்து வேறுபாடுகள் எழுதல் என்பது பகுத்தறிவு உலகில் சகஜமான ஒன்று. ஆனால் வேறுபாடுகளை களைவதற்கான வழி அறவழியாக இருக்க வேண்டும். சகிப்புத் தன்மையற்றவர்களின் தேர்வே வன்முறை.
எவரிடம் விமர்சனங்களை தாங்கிக் கொள்ளும் சக்தி இருக்கிறதோ, அவரே சகிப்புத்தன்மையுடையவர். தன் தவறுகளை பிறர் சுட்டிக் காட்டும் போது, பொறுமையுடனும் பகுத்தறிவுடனும் அதை சரிசெய்ய முயல்பவரே சகிப்புத்தன்மையுள்ளவர் எனக்கருதலாம்.

புத்தர், மகாவீரர் போன்ற சகிப்புத்தன்மை கொண்ட ஞானிகளைத் தந்த நம் நாட்டுக்கு, சகிப்புத்தன்மை என்ற மேலான நெறியை உலக அளவில் எடுத்துச் செல்லும் தகுதி அதிகமாகவே உள்ளது.
வருங்கால தலைமுறையின் வாழ்வு இனிதாக அமைய, சகிப்புத்தன்மை என்னும் வேர்களை நம் குழந்தைகள் மனதில் ஆழமாக ஊன்ற வேண்டியது நமது கடமை.

ஒரு கருத்துக்கு எதிர்க்கருத்தை வழங்கும்போது தனி மனிதனின் மானத்துக்கு மதிப்புக்கொடுக்க வேண்டும். ஒரு மனிதனின் சொந்த வாழ்க்கையை தெருவுக்கு கொண்டுவரும் இழிசெயல்களில் இறங்கக்கூடாது. அச்சுறுத்தலில் ஈடுபடக்கூடாது. அவனுடைய குடும்பத்தைப் பற்றி பேசக்கூடாது.

அப்படிச் செய்கிறவர்கள் தங்களுடைய தடுமாற்றத்தையும், பலவீனத்தையுமே வெளிப்படுத்துகிறார்கள். ஒரு கருத்துக்கு எதிர் விமர்சனமளிக்கும்போது சகிப்புத்தன்மை இருக்க வேண்டும். இது இன்றைக்கு சமுதாயத்தில் அருகி வருகிறது.

இன்னா செய்யாமை என்ற திருவள்ளுவரின் அதிகாரத்துக்கு விளக்கங்கொடுத்துக்கொண்டே ஒருவரையொருவர் வாயாரத்திட்டிவரும் மனிதர்களை நம் சமுதாயம் கொண்டிருக்கிறது.

படித்தவர்களுக்கு கூட சகிப்புத் தன்மை இருப்பதில்லை. அண்மையில் ஒரு தமிழாசிரியர், சுய சேவை உணவகத்திற்கு சென்றார். நமக்கு தேவையான உணவை நாமே கேட்டுப் பெற்று இருக்கைக்கு எடுத்துச் சென்று உண்ணலாம்.
அது சுய சேவை உணவகம் என்பது தெரியாத அந்த ஆசிரியர், தனக்கு தேவையான உணவை ஆர்டர் செய்துவிட்டு நாற்காலியில் அமர்ந்துவிட்டார். நீண்ட நேரமாகியும் தாம் ஆர்டர் செய்த உணவு மேஜைக்கு வராதததால் உணவு பரிமாறும் நபரை அழைத்து கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர் இது சுய சேவை உணகம், உங்களுக்குத் தேவையானதை நீங்களேதான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியள்ளார். அது தெரியாததால் ஆசிரியர் ஆத்திரத்தில் அந்த தொழிலாளியை அடித்துவிட்டர்.

அனைவருக்கும் சகிப்புத் தன்மையை கற்றுத் தர வேண்டிய ஆசிரியர் சகிப்புத் தன்மை இல்லாமல் இருப்பது வருத்ததத்திற்குரியதாகும்.

சகிப்புத் தன்மை அனைவரிடத்திலும் இருக்கும்பட்சத்தில் உலகம் முழுவதும் அமைதிப் பூங்காவாகத் திகழும்.

No comments:

Post a Comment

New SOP for oncologists in TN to treat ovarian, cervical, uterine cancer

New SOP for oncologists in TN to treat ovarian, cervical, uterine cancer  The new SOP requires official government mandates, structured trai...