Friday, March 17, 2017

பாதுகாப்பு இல்லை என்று கூறி சென்னை அரசு ஆஸ்பத்திரி முன்பு பயிற்சி டாக்டர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

மார்ச் 17, 04:45 AM

சென்னை,

தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி சென்னை அரசு ஆஸ்பத்திரி முன்பு பயிற்சி டாக்டர்கள் போராட்டம் நடத்தினார்கள். இதனால் 2½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கல்லூரி மாணவர் விஜய்

மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் 4–ம் ஆண்டு கெமிக்கல் என்ஜினீயரிங் படிக்கும் மாணவரான விஜய் என்பவர் கல்லூரி நிர்வாகத்தை பற்றி ‘பேஸ்–புக்’கில் கருத்து பதிவிட்டதாகவும், அதனைத் தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்தினரால் தாக்கப்பட்டதாகவும் கடந்த 14–ந் தேதி அன்று கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

பயிற்சி டாக்டர்கள்
வாக்குவாதம்

இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் விஜயை பார்ப்பதற்காக அவரது உறவினர்கள் நேற்று மதியம் வந்தனர். அப்போது அவர்களை கூட்டமாக உள்ளே விட அங்குள்ள டாக்டர்களும், பாதுகாவலர்களும் அனுமதிக்கவில்லை.

இதையடுத்து அங்குள்ள பயிற்சி டாக்டர்களுக்கும், விஜயின் உறவினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் பெண்கள் சிலரை பயிற்சி டாக்டர்கள் தள்ளிவிட்டு விரட்டியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அந்த வார்டு முன்பு உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இந்த தகவல் அறிந்து பத்திரிகையாளர்களும், போட்டோகிராபர்களும் சம்பந்தப்பட்ட வார்டுக்கு விரைந்தனர்.

அப்போது அந்த உறவினர்களையும், பத்திரிகையாளர்களையும் பயிற்சி டாக்டர்கள் அங்கிருக்கும் பாதுகாவலர்களுடன் விரட்ட முயற்சித்தனர். இதில் தனியார் தொலைக்காட்சி நிருபர் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர். வீடியோ கேமராக்களும் சேதம் அடைந்தன.

சாலைமறியல் –
போக்குவரத்து பாதிப்பு

பரபரப்பான சூழ்நிலையில் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறியும், தாங்கள் தாக்கப்பட்டதாகவும் கூறி மருத்துவ கல்லூரி மாணவர்கள், பயிற்சி டாக்டர்கள் 200–க்கும் மேற்பட்டோர் மாலை 5.20 மணி அளவில் ஆஸ்பத்திரி முன்பு சாலை மறியலில் ஈடுபட தொடங்கினர்.

அவர்களுடன் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த வித உடன்பாடும் ஏற்படவில்லை. இதையடுத்து ஆஸ்பத்திரி மெயின் ரோட்டில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பிராட்வேயில் இருந்து வரும் பஸ்கள், கார்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சாலையில் நின்றன.

இதையடுத்து ஆஸ்பத்திரி மெயின் ரோட்டில் போக்குவரத்து தற்காலிகமாக தடை செய்யப்பட்டது. பிராட்வே மற்றும் வடக்கு கடற்கரை சாலை வழியாக வரும் அனைத்து வாகனங்களும் முத்துசாமி சாலை வழியாக அண்ணாசாலைக்கு சென்று, அங்கிருந்து பல்லவன் சாலை வழியாக சென்டிரல் வந்தடையும் வகையில் போக்குவரத்து மாற்றப்பட்டது.

4 நோயாளிகள் உயிரிழப்பு

பயிற்சி டாக்டர்கள் சாலை மறியல் நடத்திய அதே வேளையில் நோயாளிகள் பாதிக்கப்படுவதாக கூறி ஆஸ்பத்திரிக்கு வரும் உறவினர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் ஆஸ்பத்திரி வளாகத்தில் எதிர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் யாரை சமாதானப்படுத்துவது? என்று போலீசார் தவித்தனர். இருபுறமும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபடியே இருந்தனர்.

பயிற்சி டாக்டர்கள் சாலை மறியல் நடத்திய சமயத்தில் ஆஸ்பத்திரியில் விபத்து, 

நெஞ்சுவலி, தலைக்காயம் உள்ளிட்ட காரணங்களுக்காக சிகிச்சை பெற்று வந்த காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த கோவிந்தம்மாள் (வயது 75), மாதவரத்தை சேர்ந்த ஜெனி (67), திருமுல்லைவாயலை சேர்ந்த ஜோசப், ஆந்திரா மாநிலம் சித்தூரை சேர்ந்த சுதாகரன் ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். டாக்டர்களின் சிகிச்சை கிடைக்காத காரணத்தினால் தான் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் பரவியது.

பத்திரிகையாளர்கள்
போராட்டம்

இந்த நிலையில் பொதுமக்களுக்கு தொந்தரவு தரக்கூடாது என்ற அடிப்படையிலும், உள்ளிருப்பு போராட்டம் நடத்தலாம் என்று முடிவெடுத்து பயிற்சி டாக்டர்கள் இரவு 7.50 மணிக்கு ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் நுழைய தொடங்கினர். அப்போது பயிற்சி டாக்டர்களில் சிலர் பத்திரிகையாளர்களை நோக்கி ஆத்திரத்தில் சில வார்த்தைகள் பேசினர்.

இதில் ஆத்திரமடைந்த பத்திரிகையாளர்களும், போட்டோகிராபர்களும் பயிற்சி டாக்டர்கள் போராட்டம் நடத்திய அதே ஆஸ்பத்திரி மெயின் ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட தொடங்கினர். ‘பத்திரிகையாளர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. பத்திரிகையாளர்கள் மீது தாக்குதலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு தைரியம் இல்லை’ என்று கோ‌ஷத்துடன் போராட்டத்தில் ஈடுபட தொடங்கி விட்டனர். இதையடுத்து போலீசார் பத்திரிகையாளர்களை சமாதானப்படுத்தி போராட்டத்தை கலைத்தனர்.

அடுத்தடுத்து புகார்கள்

தொடர் சாலை மறியல் காரணமாக முத்துசாமி சாலை சந்திப்பில் இருந்து அரசு ஆஸ்பத்திரி வரையிலான சாலையில் 2½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தாங்கள் தாக்கப்பட்டதாக பத்திரிகையாளர்கள் தரப்பிலும், நாங்கள் தான் தாக்கப்பட்டோம் என்று பயிற்சி டாக்டர்கள் தரப்பிலும் போலீசாரிடம் புகார்கள் கொடுக்கப்பட்டன.

அதே வேளையில் பயிற்சி டாக்டர்கள் ஆஸ்பத்திரி வளாகத்திலேயே தங்கள் போராட்டத்தை தொடர தொடங்கினர்.

No comments:

Post a Comment

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...