Monday, September 11, 2017

கோவில் விழாக்களை முன்பே அறிய இணையதளத்தில், 'திருவிழா' பிரிவு
பதிவு செய்த நாள்10செப்
2017
23:59

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களின் முக்கிய திருவிழாக்களை முன்கூட்டியே அறிந்து கொள்ள, அறநிலையத்துறை இணைய தளத்தில், 'திருவிழா' என்ற பிரிவு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.அறநிலையத்துறை இணைய தளத்தில், தமிழக கோவில்களின் வரலாறு, துறையின் செயல்பாடுகள், திட்டங்கள், ஒப்பந்தம் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. 

சில மாதங்களுக்கு முன், 'விர்சுவல் டூர்' எனும் தலைப்பிலான புதிய பிரிவு அறிமுகம் செய்யப்பட்டது.இதன்படி, தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கோவில்களை, 360 டிகிரி கோணத்தில் பார்க்கும் வசதி, கோவில் வரலாறு, திருவிழா உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் பக்தர்கள் அறிய முடியும். இந்நிலையில், 'திருவிழா' எனும் பிரிவு, அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இது குறித்து அறிநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது:இதற்கு முன், கோவில் திருவிழா அழைப்பிதழ்களை பதிவேற்றம் செய்து வந்தோம். அது பக்தர்களுக்கு வசதியாக இல்லை என்பதால், 'திருவிழா' என்ற பிரிவு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 

இதில், கோவில்களின் திருவிழாக்கள் நடக்கும் மாதம், தேதி, அழைப்பிதழ் உள்ளிட்ட விபரங்கள், இடம் பெற்று உள்ளன.தற்போது, 110 கோவில்களின் விபரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விரைவில், அனைத்து பிரதான கோவில்களின் விபரங்களும் இணைக்கப் படும். இதன்படி, பக்தர்கள் பயணத்திற்கு திட்டமிடுவது வசதியாகும். அடுத்ததாக, பக்தர்கள் வசதிக்காக, கோவில் திருவிழாக்களின் ஒலி, ஒளி தொகுப்பு, 'யூ டியூப்'பில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 15.07.2026