Monday, November 2, 2015

பெண் எனும் பகடைக்காய்: ஆதலினால் லெகிங்ஸ் அணிவீர் பா.ஜீவசுந்தரி

Return to frontpage

சமீபத்தில் ஒரு முதியோர் இல்லத்துக்கு விசிட் செய்தபோது, அங்கிருந்த வயதான பெண்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அணிந்திருந்த உடை நைட்டிதான். இப்போது நைட்டி இல்லாத வீடுகளே கிடையாது இல்லையா! சின்னக் குழந்தைகளில் ஆரம்பித்து வயது முதிர்ந்தவர்கள்வரை அணிந்து கொள்ளும் ‘தேசிய உடை’ என்ற பெருமையை நைட்டிக்குக் கொடுத்துவிடலாம்.

பால் பாக்கெட்டோ, பச்சை மிளகாயோ ஏதோ ஒன்றை அவசரத் தேவைக்கு வாங்க சங்கோஜமில்லாமல் நைட்டி அணிந்தே கடைக்குப் போகும் பெண்கள் இன்று சர்வ சாதாரணம். சங்கோஜிகளாக இருக்கும் சிலர் ஒரு டவலை நைட்டியின் மீது குறுக்காக அணிந்துகொள்கிறார்கள். அதற்கு மேல் சங்கோஜம் கிடையாது.

இந்த நைட்டி உடை குறித்து அனைத்து வயதுப் பிரிவைச் சேர்ந்த பெண்களிடம் கருத்து கேட்டபோது அவர்கள் சொன்னது: “இரவில் மட்டுமல்ல, பகலிலும் வீட்டில் இருக்கும்போது நைட்டிதான் அணிகிறோம். உடலை இறுக்கிப் பிடிக்காமல் தளர்வாக இருக்கும் அந்த உடை எங்களுக்கு வசதியாக இருக்கிறது. வீட்டு வேலைகளைச் செய்வதற்கும் இடைஞ்சல் இல்லாமல் இருக்கிறது”.

இது அவர்களே, அவர்கள் அணிந்துகொள்ளும் உடை பற்றி, அனுபவபூர்வமாக வெளிப்படுத்திய பொதுக் கருத்து.

அடுத்து, லெகிங்ஸ் பற்றிய பேச்சு எழுந்தது. இது இளம் பெண்களை வெகுவாகக் கவர்ந்த உடை. இன்று இளம் பெண்கள் விரும்பி அணியும் உடை. புதிய விஷயங்களை சமூகத்துக்குக் கொண்டு வந்து சேர்ப்பது இளைய தலைமுறைதானே. இந்த நைட்டியையும் மூத்த தலைமுறை மற்றும் அன்றைய கலாச்சாரக் காவலர்களின் எதிர்ப்பையும் மீறி கொண்டுவந்து இன்று உலகமே அணியும் ஆடையாக மாற்றியவர்களும் அன்றைய இளம் தலைமுறையினர்தானே. இன்று லெகிங்ஸை நமக்கு அறிமுகப்படுத்தி யிருக்கிறார்கள். ஏனாம்? இதோ அவர்கள் சொல்கிறார்கள்:

“லெகிங்ஸ், நைட்டி மாதிரி தளர்வான உடை அல்ல. உடலை இறுக்கிப் பிடிக்கும் உடைதான். ஆனால், வசதியாக இருக்கிறது. பேருந்து, ரயில் பயணங்களின்போது ஓடிப்போய் வண்டியைப் பிடிப்பது எளிது. நிறைய கலர்களில் கிடைக்கிறது. எல்லா கலர்களிலும் வாங்கி வைத்துக்கொள்ளலாம். விலை மிகக் குறைவு. டாப்ஸ் மட்டும் தனியாக வாங்கினால் போதும். வித விதமான மேட்சிங்கில் அணியலாம். முக்கியமாக, மாதவிடாய்க் காலங்களில் மிக மிகப் பாதுகாப்பாக உணர வைக்கும்”

இப்போது பேன்ட் ஆண்களின் உடை மட்டுமல்ல; பெண்களும் பேன்ட், ஜீன்ஸ், முக்கால் பேன்ட், அரைக்கால் பேன்ட் எல்லாவற்றையும் விரும்பி அணிய ஆரம்பித்துவிட்டார்கள். முக்கால் பேன்ட் டீன் ஏஜ் பெண்களின் பெரு விருப்பம். காஷுவலாக வீட்டிலும் அவுட்டிங்கிலும் அணிந்துகொண்டு சுதந்திரமாகப் போய் வருகிறார்கள்.

புடவை- எவர்கிரீன் உடை. ஆயிரம் வசதிக் குறைவுகள் இருந்தாலும் அனைவரும் ஆராதிக்கும் உடை. நகரம், கிராமம், பட்டி தொட்டி, இளசு, கிழடு எந்த வேறுபாடும் பார்க்காமல் எல்லோரிடமும் போய் ஒட்டிக்கொள்ளும் பாரம்பரியம் மிக்கது. காட்டன், பட்டு எதுவானாலும் பரவாயில்லை. பெண்களைவிட, ஆண்களுக்கு மிகவும் பிடித்த, அவர்களை மிகவும் கவர்ந்த உடை என்பது மிகப் பெரிய ப்ளஸ் பாயின்ட்.

சரி, இப்போது விஷயத்துக்கு வருவோமா?

ஒரு கவிஞர், அதிலும் ‘ஆண் கவிஞர்’ நைட்டியைப் பற்றித் தன் கவிதை ஒன்றில் இப்படி வர்ணிக்கிறார்:

‘சிலிண்டருக்கு மாட்டிய உறை போன்றது’.

அது அவர் பார்வை. அதைப் பற்றி நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால், ‘இங்கு பெண்கள் எல்லோரும் சிலிண்டர்களா?’ என்பதை மட்டும் சிறு கேள்வியாகக் கேட்டு வைப்போம். அத்துடன் அழுத்தம் மிகுந்தால் சிலிண்டர் வெடித்துச் சிதறும் என்பதையும் ஒரு எச்சரிக்கையாகச் சொல்லி வைப்போம்.

மிகுந்த சர்ச்சையைக் கிளப்பிய உடை என்றால், அது இந்தப் பாழாய்ப் போன லெகிங்ஸ்தான். நான் சின்ன வயதில் பார்த்த ராஜா ராணி கதையுள்ள சினிமாக்களில் எல்லாம் எம்.ஜி.ஆர்., சிவாஜி, என்.டி.ஆர்., காந்தாராவ் போன்ற பெரிய பெரிய ஹீரோக்கள் எல்லாம் இறுக்கமான லெகிங்ஸ் அணிந்து, மேலே கவுன் போட்டுக்கொண்டு பாய்ந்து பாய்ந்து கத்திச்சண்டை போடுவார்கள். ராஜ, விஜயலலிதா, ஜெயலலிதா போன்ற ஹீரோயின்களும் ஸ்கின் கலரில் இதைப் போட்டுக்கொண்டு டான்ஸ் ஆடுவார்கள். அந்த உடை என்பது ஆண்-பெண் இரு பாலருக்கும் பொதுவான உடை என்று அப்போது நான் நினைத்துக்கொண்டிருந்தேன்.

அதன் பெயர் லெகிங்ஸ் என்பதெல்லாம் எனக்கு அப்போது தெரியாது. வளர்ந்து பெரிய பெண்ணானதும் நானும் இப்படி உடை உடுத்தி அழகு பார்ப்பேன் என்றெல்லாம் கனவு கண்டிருக்கிறேன். என்ன செய்வது? கெரகம், நம் ஆசையெல்லாம் நிறைவேறுமா? லெகிங்ஸ் சந்தைக்கு வர இவ்வளவு காலம் ஆகியிருக்கிறது. சின்ன வயது ஆசையை திருப்தியாக இப்போதுதான் நிறைவேற்றிக் கொண்டேன்.

ஆனால், பாருங்கள்... அநியாயத்துக்கு ஓரவஞ்சனையாகப் பெண்களுக்கு மட்டுமேயான உடையாக அதை இந்த நாகரிகக் கோமாளிகள் மாற்றிவிட்டார்கள். இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆண்களும் இதை அணிந்துகொள்ளச் சட்டம் இயற்ற வேண்டுமென்று மத்திய, மாநில அரசுகளுக்குக் கோரிக்கை வைக்கிறேன்.

பெண்கள் இந்த உடை தங்களுக்கு வசதியானது என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்ததைப் போல ஆண்களும் அணிந்து பார்த்தால்தான் அதன் அருமை அவர்களுக்குத் தெரியும் என்பதால் இதைப் பரிந்துரைக்கிறேன். அடுத்த வாரம் வரவிருக்கும் தீபாவளிக்கு லெகிங்ஸ் வாங்குவீர்; அணிந்து மகிழ்வீர். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். இங்கு பாரதியையும் கொஞ்சம் துணைக்கு அழைக்கிறேன்.

ஆதலினால் லெகிங்ஸ் அணிவீர் ஆடவரே.

கொசுறு

‘பிரதி தின் டைம்’ என்ற அஸ்ஸாமிய செய்தி சானல், சில மாதங்களுக்கு முன், குரங்கு ஒன்று பேன்ட் அணிந்திருந்த படத்தைக் காண்பித்து, ‘இப்போதெல்லாம் குரங்குகள் பேன்ட் அணிகின்றன. குவாஹாட்டியில் உள்ள இளம் பெண்கள் ‘ஷார்ட்ஸ்’ அணிகிறார்கள் என்ற செய்தியை ஒளிபரப்பியது. இது குறித்து பாலின உரிமை ஆய்வாளர் மீனாட்சி பரூவா, ‘தனிமனித சுதந்திரம் பாதிக்கப்படுவதோடு, போலீஸைவிட மீடியாக்களுக்குப் பெண்கள் அதிகம் பயப்பட வேண்டியுள்ளது’ என கடும் கண்டனம் தெரிவித்தார். இதற்காக சானலின் செய்தி ஆசிரியரும் பின்னர் வருத்தம் தெரிவித்துக் கொண்டார்.

கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: asixjeeko@gmail.com

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...