Saturday, May 13, 2017

கோயம்பேடு - நேரு பூங்கா சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் நாளை முதல் இயங்கும்

பதிவு செய்த நாள் 12 மே2017 23:36



சென்னை: 'கோயம்பேடு - நேரு பூங்கா இடையே, சுரங்கப்பாதையில், நாளை, மெட்ரோ ரயில் போக்குவரத்து துவக்கப்படும்' என, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, கோயம்பேடு - நேரு பூங்கா இடையே, 7.4 கி.மீ., சுரங்கப்பாதையில், மெட்ரோ ரயில் போக்குவரத்து, நாளை துவங்குகிறது. துவக்க விழா, திருமங்கலம் ரயில் நிலையத்தில், காலை, 10:00 மணிக்கு நடக்கிறது. தமிழக முதல்வர் பழனிசாமி, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

ரயில் பாதை மற்றும் ரயில் நிலையங்களின் பாதுகாப்பு குறித்து, மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறியதாவது:

 கோயம்பேட்டில் இருந்து, நேரு பூங்கா இடையே, சுரங்கப்பாதை ரயில் போக்குவரத்தில், திருமங்கலம், அண்ணாநகர் டவர், அண்ணாநகர் கிழக்கு, ஷெனாய் நகர், பச்சையப்பன் கல்லுாரி, கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா என, ஏழு நிலையங்கள் உள்ளன.

இவை, 16 மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ளன. தரை தளத்தில் வாகன நிறுத்தம்; அதன் கீழ் முதல் தளத்தில், டிக்கெட் கவுன்டர், கட்டுப்பாட்டு அறை; இரண்டாவது தளத்தில், பிளாட்பாரம் உள்ளது. ஒவ்வொரு நிலையத்திலும், நான்கு வழிகள் உள்ளன

 சுரங்கத்தில், காற்று வசதிக்காக, எட்டு வென்டிலேட்டர்களும், உள்ளே வெப்பத்தை வெளியேற்ற, நான்கு வென்டிலேட்டர் வசதிகளும் உள்ளன.
ரயில் பாதைகளில், தீ, புகை, வாயு கசிவு இருந்தால், தீ தடுப்பு கருவிகள் மூலம், எச்சரிக்கை அலாரம் ஒலிக்கும். அது, தலைமை கட்டுப்பாட்டு அறைக்கும் தெரியும்

 அசம்பாவிதம் ஏற்பட்டால், கட்டுப்பாட்டு அறையில் இருந்து, ரயில்களை நிறுத்த முடியும். எந்த பிரச்னையாக இருந்தாலும், 18 வினாடிகளில், பழுது சரி செய்யப்படும்

 ஒவ்வொரு நிலையத்திலும், ரயில், 35 வினாடிகள் நின்று செல்லும். சுரங்கப்பாதையில் திடீரென ரயில் நின்றால், ரயிலில் இருந்து பயணிகள் இறங்கி நடக்க, பாதையின் இரு ஓரங்களிலும் நடை பாலம் உள்ளது.
இதன் வழியாக, அடுத்த சுரங்கப் பாதைக்கு சென்று அங்கிருந்து ரயிலில் செல்லலாம்

 அவசர உதவிக்கு, ரயில் பாதையில், 250 மீ., இடைவெளியில், தொலைபேசி இணைப்புகள் உள்ளன

 நிலையத்திற்குள் புகை பிடிக்கக் கூடாது; சாப்பிடக்கூடாது. செல்ல பிராணிகளுக்கு அனுமதி இல்லை. புகைப்படம் எடுக்கக்கூடாது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

கட்டணம் : சென்னை விமான நிலையத்தில் இருந்து, நேரு பூங்காவிற்கு, 60 ரூபாய்; கோயம்பேட்டில் இருந்து, நேரு பூங்காவிற்கு, 40 ரூபாய், கட்டணம் நிர்ணயிக்கப்படும் என, தெரிகிறது. இதற்கான அறிவிப்பு, இன்று வெளியாகும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 18.12.2025