Saturday, May 13, 2017

மதிப்பெண் மட்டுமே மதிப்பா?...
12மே2017 12:27

சென்னை:

பள்ளி இறுதி ஆண்டுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகி விட்டன. நெடுநாளைய வழக்கத்தை மாற்றி, இந்தமுறை முதல் மூன்று மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவியரை மட்டும் தேடி வந்துசேரும் புகழ் மாலைகளுக்கு இடமில்லாமல் செய்திருக்கிறது பள்ளிகல்வித்துறை.

இந்த முன்னெடுப்பு வரவேற்புக்குரியதே. ஆம்! தோற்றவர்களுக்கு வெற்றிக் கொண்டாட்டங்கள் ஏற்படுத்தும் மன உளைச்சலை நாம் மிக எளிதாக கவனிக்க மறந்துவிடுகிறோம்.

வெற்றி என்றால் என்ன:

வெற்றி என்பது எல்லோருடைய எதிர்ப்பார்ப்பும் தான். ஆனால், அது ஒரு நிகழ்வை வரையறுக்கும் சொற்களே தவிர, மாணவ மாணவியரின் வாழ்க்கையை முடிவு செய்யும் சொற்கள் அல்ல என்பதை மனத்தில் விதைக்கவேண்டும். பறவைகளுக்கு தேடல்தான் சந்தோஷம். அதன் இலக்குகள் எல்லையற்றது. ஒருநாள் தன்னுடைய இந்த தேடல் முயற்சிகளில் தோல்வி கண்ட பறவைகள் ஒருபோதும் சோர்ந்துபோய், வாழ்வை மாய்த்துக் கொள்வதில்லை. மீண்டும் வலிமைபெற்று வானை வெல்ல முயற்சிக்கின்றன. 

மாணவ, மாணவியர்களே, நீங்கள் பறவைகளாக இருங்கள். உங்கள் இலக்குகள் வெறும் மதிப்பெண்கள் மட்டுமல்ல. நாளை என்ற நாளின் மீது நம்பிக்கை கொள்ளும் பக்குவம் உங்களிடத்தில் உள்ளது. எதிர்ப்பார்ப்புக்கு மீறி நீங்கள் பெற்ற மதிப்பெண்கள் குறைந்து போயிருக்கலாம். அந்த மனநிலை நம்மைத் துன்புறுத்தலாம். பலநாள் தூக்கம் துறந்து, கேளிக்கைகள் தவிர்த்து, புத்தகங்களே கண்ணாக, பாடங்களே கவனமாக, தேர்வே இலக்காகக் கொண்டு, நேர்த்தியான திட்டங்களை வகுத்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டிருப்பீர்கள். ஆனால் எந்தப் புள்ளியிலோ உங்களுடைய இந்த உழைப்புக்கான பலன் கை தவறிப் போயிருக்கலாம்.

ஆங்கிலத்தில் “slip between cup and lip” என்று சொல்வார்கள். விளிம்புநிலையில் தவறவிட்ட மதிப்பெண்களால் பெறப்பட்ட 'தோல்வி' என்ற அந்தச் சொல் எவ்வளவு மனவலிமை கொண்டவனையும் அசைத்துவிடும். சோர்வின் உச்சிக்கே கொண்டுசென்றுவிடும். 

பிள்ளைகளே, நம் வாழ்க்கை என்பது இந்த மதிப்பெண்களைக் காட்டிலும், நாம் வாழும் இந்த சமூகத்தைக் காட்டிலும், நம் பெற்றோர்களின் கனவுகளைக் காட்டிலும் பெரியதல்லவா! நமக்கு இன்னும் பல வாய்ப்புகள் கண்முன்னே கொட்டிக் கிடக்கிறது.

வள்ளுவன் சொல்கிறார், ஊளையும் உப்பக்கம் காண்பார் உலைவின்றி தாழாது உஞற்று பவர். என்று. அதன் பொருள், சோர்வைடையாமலும், முயற்சியில் குறைவு வைக்காதவர்களும், இடையூறாக வந்த எந்தச் சூழலையும், தோல்வியையும் கண்டு கலங்காது தன் இலக்கை நிச்சயம் எட்டுவார்கள் என்பதே!

இந்தச் சுற்றில் நீங்கள் பின் தங்கியிருக்கிறீர்கள் அவ்வளவுதான். நீங்கள் சோர்ந்துவிடவில்லை. இன்னும் பயிற்சி செய்ய காலம் இருக்கிறது. இதுவரை வென்றதே இல்லை என்ற எண்ணத்தோடு எப்போதும் பயிற்சி செய்யுங்கள். அதேபோல், இதுவரை தோற்றதே இல்லை என்ற எண்ணத்தோடு எப்போதும் செயல்படுங்கள்.

திறமையை தோண்டி எடுங்கள்:

மதிப்பெண் மட்டுமே மனிதனை நிர்ணயிப்பதில்லை. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு திறமை மறைந்து கிடக்கிறது. அது, பேச்சாற்றலாக, எழுத்தாற்றலாக, கணித ஆற்றலாக, நடன ஆற்றலாக, இசை ஆற்றலாக, நடிப்பு ஆற்றலாக, வணிக ஆற்றலாக, ஓவிய, சிற்ப, விளையாட்டு ஆற்றலாக... என்று அடுக்கிக்கொண்டே போகலாம். இதில் எது உங்களுக்குள் உறைந்து கிடக்கிறது என ஆய்வு செய்யுங்கள். அதைக் கண்டுபிடித்து, தோண்டி எடுங்கள்.

தோண்டி எடுத்த திறமையை மேலும் மெருகேற்றுங்கள். அந்த முடிச்சைப் பிடித்து, முன்னேறுங்கள். உங்கள் திறமை உள்ள துறையில் மிளிர பாருங்கள். வாழ்க்கை உங்கள் வசப்படும்.
உங்களுக்கு மீண்டும் நாங்கள் சொல்வது அதேதான். Never Ever Give Up…! தொடர்ந்து செல்; தோல்வி கிடையாது தம்பி.

No comments:

Post a Comment

NEWS TODAY 18.12.2025