Monday, March 26, 2018

சவுதி அரேபியா வான்வழியாக இஸ்ரேலை சென்றடைந்தது முதல் ஏர் இந்தியா விமானம் : 2 மணி நேர பயணம் குறைவு


2018-03-24@ 00:49:05



டெல்அவிவ் : டெல்லியிலிருந்து சவுதி அரேபியா வழியாக முதல்முறையாக இஸ்ரேலுக்கு ஏர் இந்தியா விமானம் சென்றது. வரலாற்று சிறப்புமிக்க இந்த நேரடி விமான சேவையின் மூலம், 2 மணி நேர பயணம் குறைகிறது. பிரதமர் நரேந்திர மோடியும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் கடந்தாண்டு ஜூலை மற்றும் இந்தாண்டு ஜனவரியில் 2 முறை சந்தித்து பேசினர். அப்போது, தலைநகர் டெல்லியிலிருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவுக்கு நேரடி விமான போக்குவரத்து தொடங்க முடிவு செய்யப்பட்டது. டெல்லியில் இருந்து இஸ்ரேலுக்கு அரபு நாடான சவுதி அரேபியாவை கடந்து செல்ல வேண்டும். ஆனால், இஸ்ரேலை அரபு நாடுகள் அங்கீகரிக்காததால் அந்நாட்டுக்கு செல்லும் விமானங்கள் சவுதி வான் எல்லை வழியாக பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள இந்த தடையை தளர்த்த இந்தியா, இஸ்ரேல் சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன் பயனாக, இந்தியாவின் ஏர் இந்தியா விமானம் தனது நாட்டு வான்வழியாக இஸ்ரேல் செல்ல சவுதி அரேபியா சிறப்பு அனுமதி வழங்கியது. இதையடுத்து, ஏர் இந்தியா 139 விமானம் நேற்று முன்தினம் தனது முதல் பயணத்தை தொடங்கியது. மாலை 6 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட்ட இந்த விமானம், சவுதி வான் எல்லை வழியாக டெல் அவிவ் நகரின் பென் குரியன் விமான நிலையத்தை அந்நாட்டு நேரப்படி இரவு 10.15 மணிக்கு சென்றடைந்தது. வரலாற்று சிறப்புமிக்க இப்பயணத்தை ஏர் இந்திய விமான நிறுவன தலைவரும் நிர்வாக இயக்குநருமான பிரதீப் கரோலா மற்றும் இஸ்ரேல் சுற்றுலா துறை இயக்குநர் ஹசன் மதா இருவரும் கேக் வெட்டி தொடங்கி வைத்தனர். பொதுவாக, சவுதி அரேபியாவை தவிர்த்து டெல்லியிலிருந்து இஸ்ரேல் செல்ல பயண நேரம் 7.25 மணி நேரமாகும். சவுதி வழியாக செல்வதால் 2 மணி 10 நிமிட பயண நேரம் குறைகிறது.

வாரத்தில் செவ்வாய், வியாழன், ஞாயிறுக்கிழமை ஆகிய 3 நாட்கள் டெல்லியிலிருந்து இஸ்ரேலுக்கு நேரடி விமானம் இயக்கப்பட உள்ளது. இது ஓமன், சவுதி அரேபியா, ஜோர்டான் ஆகிய நாடுகளை கடந்து இஸ்ரேலுக்கு சென்றடைகிறது. இதேபோல, டெல் அவிவ் நகரிலிருந்து டெல்லிக்கு இஸ்ரேல் அரசு விமான நிறுவனமான எல் அல்லும் இயக்கப்படுகிறது. இந்த விமானம் சவுதி, ஐக்கிய அரபு எமிரேட், ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய வான் எல்லையில் பறக்க முடியாது என்பதால் செங்கடல், ஏடன் வளைகுடாவை தாண்டி டெல்லியை வந்தடையும். இதில் பயண நேரம் சுமார் 8 மணி நேரமாகும். டெல் அவிவ்விலிருந்து ஏர் இந்தியா விமானம் இன்று மாலை 4.50 மணிக்கு டெல்லி நோக்கி புறப்படுகிறது.

பாலமாக செயல்படும் இந்தியா

சுற்றுலா துறை அமைச்சர் யாரிவ் லெவின் கூறுகையில், ‘‘இது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு. புதிய சகாப்தம். இதன் மூலம் இஸ்ரேல் வரும் இந்திய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இரு தரப்பு உறவு பலப்படும். சவுதி வான் எல்லையை பயன்படுத்திக் கொள்ளும் விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளோம். இந்த பிராந்தியத்தில் அண்டை நாடுகளுடனான உறவை வலுப்படுத்திக் கொள்வதற்கான முதல் படி இது. இதில் இந்தியாவின் பங்கு முக்கியமானது. இஸ்ரேலையும் மற்ற நாடுகளையும் இணைக்கும் பாலமாக இந்தியா இருந்து வருகிறது’’ என்றார்.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...