Friday, March 30, 2018

ஏற்காடு மலைப்பாதை தடுப்பு சுவரில் விரிசல் உடனே சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை 
30.03.2018




ஏற்காடு மலைப்பாதை தடுப்பு சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதை உடனே சரிசெய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மார்ச் 30, 2018, 03:34 AM

ஏற்காடு,

சேலம் மாவட்டம் ஏற்காடு, தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் முக்கிய இடம் வகிக்கிறது. சேலத்தில் இருந்து ஏற்காட்டிற்கு கொண்டப்பநாய்க்கன்பட்டி, குப்பனூர் ஆகிய ஊர்கள் வழியாக செல்லலாம். இதில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் பாதையாகவும், சேலம் நகரத்தில் இருந்து குறைந்த பயண தூரம் (30 கிலோ மீட்டர்) கொண்ட பாதையாகவும் கொண்டப்பநாய்க்கன்பட்டி வழி மலைப்பாதை உள்ளது.


இந்த மலைப்பாதையானது கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி இரவு பெய்த பெரும் மழையால் பாதிக்கப்பட்டது. மலைப்பாதையின் பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இந்த மண்சரிவுகளை தற்காலிகமாக சரிசெய்ய ஒரு வாரம் காலம் ஆனது. அதுவரை ஏற்காடு மக்கள் மின்சாரம், உணவு, காய்கறி, பால் உள்ளிட்டவை பெற முடியாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்த மண்சரிவு ஏற்பட்டு 2 ஆண்டுக்கு மேலாக இந்த கட்டுமான பணிகள் தொடங்கப்படாமல், கடந்த 2017-ம் ஆண்டு கட்டுமான பணி தொடங்கப்பட்டு ஒரு வருட காலத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது.

தடுப்பு சுவரில் விரிசல்

மலைப்பாதையின் 3-வது கொண்டை ஊசி வளைவு அருகில் மண் சரிவு ஏற்பட்டுள்ள இடத்தில் கட்டப்பட்டுள்ள தடுப்பு சுவரில் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டு சற்று சாய்ந்த நிலையில் உள்ளது. மேலும் சாலையிலும் விரிசல் ஏற்பட்டிருப்பது தெரிகிறது.

கடந்த 2015-ம் ஆண்டு 12-வது கொண்டை ஊசி வளைவு அருகில், கார் மோதி, சாலையோர தடுப்புசுவர் இடிந்ததை சரிசெய்யாமல் விட்டிருந்தனர். அப்போது ஏற்காட்டில் பெய்த மழை அந்த தடுப்பு உடைந்த பகுதி வழியே பெரும் ஊற்று போல் ஓடியதால் மலைப்பாதையின் பெரும் பகுதிகள் பாதிப்புக்குள்ளானது முக்கிய காரணமாகும். தற்போது இந்த விரிசல் ஏற்பட்டுள்ள தடுப்பு சுவர் சரி செய்யப்படாமல் விட்டால், மீண்டும் பெரும் மழை பெய்யும்போது பெரிய அளவிலான மண் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அரசு அதிகாரிகள் ஏற்காடு மலைப்பாதையில் கட்டப்பட்டு வரும் இந்த தடுப்பு சுவர் பணிகளை நல்ல தரமான முறையில் கட்டப்படுகிறதா? என்பது குறித்து உரிய ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்,என்றும் தடுப்பு சுவரில் ஏற்பட்டுள்ள விரிசலை உடனே சரிசெய்ய வேண்டும், என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...