Tuesday, March 27, 2018

கெஞ்சிய பெண், இரக்கம் காட்டாத வழிப்பறிக் கொள்ளையர்கள்! 

பாலஜோதி.ரா

vikatan  

வாகனத்தில் வேலைக்குச் சென்றுகொண்டிருந்த பள்ளித் தலைமையாசிரியையிடம் ஏழு சவரன் நகையை வழிப்பறிக் கொள்ளையர்கள் பறித்துச்சென்ற சம்பவம் நேற்று (26.03.2018.) நடந்தது. இந்தச் சம்பவம், அன்னவாசல் பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.



புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் கோல்டன் நகரில் வசிப்பவர், வள்ளிக்கண்ணு. இவர், குடுமியான்மலையில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியையாக உள்ளார். தினமும் அன்னவாசலிலிருந்து இருசக்கர வாகனத்தில் பள்ளிக்குச் சென்று வருவது வழக்கம். நேற்றும் அதேபோல பள்ளிக்குச் செல்லும்போது என்ன நடந்தது என்பதை அவரே மிகுந்த வேதனைக்குரலில் விவரித்தார்.

“நேற்று காலை 9.15 மணிக்கு என்னுடைய டூ வீலரில் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தேன். புதூர் ஆலமரத்துக்கு அருகே நான் சென்றபோது, திடீரென டூ வீலரில் வந்த இரண்டு பேர், என் மேல் மோதுவதுபோல வந்தார்கள். நான் நிலைகுலைந்து எனது வண்டியை ஓரமாக நிறுத்தினேன். அப்போது, அந்த வண்டியில் பின்னால் இருந்தவர், என் கழுத்தில் இருந்த செயினை அறுத்துக்கொண்டு வண்டியோடு சேர்ந்து என்னைத் தள்ளிவிட்டார். வண்டியை ஓட்டியவர் முகத்தில் துணியையும்,செயினை அறுத்தவர் முகத்தில் ஹெல்மெட்டும் அணிந்திருந்தார்கள்.

''தம்பி, நான் ஒரு கேன்சர் நோயாளிடா, ஹீமோ கொடுக்க ஆஸ்பத்திரி போகணும்டா. என்னோட செயினை கொடுத்துட்டுப் போங்கடா'னு கெஞ்சிக் கதறினேன். அவர்கள் அதைக் கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டார்கள். அப்போது அந்த வழியாக போர்வெல் வண்டி ஒன்று வந்தது. அந்த வண்டியை நிறுத்தச் சொன்னேன். எதிரே இரண்டு பேரை பார்த்தீர்களா? என்னோட செயினை அறுத்துட்டு போயிட்டாங்கனு அந்த டிரைவரிடம் சொன்னேன். அப்போது அவர், 'வேகமாக போயிட்டாங்க 'னு சொல்லிவிட்டு, என்னிடமிருந்து போன் நம்பர் வாங்கி, எனது பள்ளி ஆசிரியர்களுக்கும் எனது கணவருக்கும், பேசுனாங்க.

எனது கணவர், அமைச்சர் விஜயபாஸ்கருக்கு போன் பண்ணி தகவல் சொன்னார். நான் கேன்சர் நோயாளி என்பதால், அமைச்சர் எனக்கு மருத்துவ சிகிச்சைக்கு உதவி செய்த வகையில் அவரை நன்றாகத் தெரியும். அவரும், நடவடிக்கை எடுக்கச் சொல்கிறேன் என்று என் கணவரிடம் கூறினார். போலீஸும் உடனே வந்தாங்க நான் அன்னவாசலில் இருந்து செல்லும்போது, மகாலட்சுமி சுவீட் கடை அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் என்னை இருவர் வாகனத்தில் தொடர்ந்து வருவது போல பதிவு உள்ளதாகக் கூறினார்கள். அன்னவாசலில் அந்நேரம் ஒரு கல்யாண கோஷ்டி வீடியோ எடுத்தார்கள். அந்த வீடியோ பதிவிலும் அவர்களது படம் உள்ளதா என்பதைப் பார்த்து கண்டுபிடித்துவிடுகிறோம் என்று போலீஸார் என்னிடம் கூறினார்கள். நான் இதற்கு முன் கவரிங் செயின்தான் அணிந்து செல்வேன். அந்தச் செயின் அணிந்ததால் எனது கழுத்துப் பகுதி கறுப்பாக மாறிவிட்டதால், தங்க செயின் 7 பவுனை இரண்டு லட்சம் லோன் போட்டு தான் வாங்கினேன். இன்னும் கடனைக்கூட அடைக்கவில்லை" எனக் கண்ணீருடன் கூறினார்.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...