Monday, March 26, 2018

பிரிட்டனில் சமோசா திருவிழா

Added : மார் 26, 2018 04:42

லண்டன்: தொண்டு நிறுவனங்களுக்கு நிதி திரட்டும் நோக்கத்தில், பிரிட்டனில் உள்ள ஆறு நகரங்களில், 'சமோசா வாரம்' கொண்டாடப்படுகிறது.ஐரோப்பிய நாடான பிரிட்டனில், இந்தியர்கள் மற்றும் பாகிஸ்தானியர்கள் அதிக அளவில் வசிக்கின்றனர்; இவர்கள் நடத்தும் இந்திய உணவகங்கள், ஐரோப்பியர்கள் மத்தியில் வெகு பிரபலம்.இந்நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த, ரோமெய்ல் குல்சார் என்பவர், பிரிட்டனில், புகார் நியூஸ் என்ற பெயரில், செய்தி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர், ஏப்ரல், 9 முதல், 13 வரை, பிரிட்டனில் தேசிய சமோசா திருவிழா நடத்த ஏற்பாடு செய்துள்ளார். பிரிட்டனில் உள்ள லேசெஸ்டர், பிரிமிங்ஹாம், மான்செஸ்டர், கோவென்ட்ரி, நாட்டிங்ஹாம்ஷைர், ரேட்லட் ஆகிய நகரங்கள், இந்த விழாவில் பங்கேற்கின்றன.அன்று, பிரிட்டன் முழுவதும், ஆங்காங்கே சமோசா கடைகள் திறக்கப்பட உள்ளன. விதவிதமான சமோசாக்களை பொதுமக்கள் செய்து எடுத்து வந்து, தெருவில் விற்பனை செய்ய உள்ளனர். சுவையான சமோசாக்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன.மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான தொண்டு நிறுவனம் மற்றும் பணியில் இருக்கையில் இறந்துபோன போலீசாரின் குடும்ப நலனுக்கான தொண்டு நிறுவனங்களுக்கு, இதில் வசூல் ஆகும் தொகை வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 3.4.2025