Monday, March 26, 2018

கோடை வந்துவிட்டாலே பயமுறுத்தும் `கறுப்பு உள்ளாடை' வைரல் மெசேஜ்களும் மருத்துவரின் விளக்கமும்!

ஆ.சாந்தி கணேஷ்

vikatan 26.03.2018

கோடை வந்துவிட்டாலே போதும், பல்வேறு மருத்துவக் குறிப்புகள், பகீர் எச்சரிக்கைகள் எனச் சமூக வலைத்தளங்கள் பிஸியாகிவிடும். அதில் ஒன்று, ' கறுப்பு நிற உள்ளாடை (பிளாக் கலர் பிரா) அணிந்தால், மார்பக புற்றுநோய் வந்துவிடும். அண்டர்வயர் பிரா (underwire bra) அணிந்தால், பிரெஸ்ட் கேன்சர் உண்டாகும். இறுக்கமாக பிரா அணிந்தாலும் பிரெஸ்ட் கேன்சர் வரும் என்கிற தகவல் பரவ ஆரம்பிக்கும். இந்த வருடமும் வெயில் லேசாக எட்டிப்பார்த்ததுமே, இந்தத் தகவல் தலைகாட்ட ஆரம்பித்துவிட்டது. இது, எந்த அளவுக்கு உண்மை? அறிவியல் ஆதாரம் இல்லாத பயமுறுத்தல் போஸ்ட்டா என்பதை அறிய, புற்றுநோய் நிபுணர் எஸ்.ஜி.டி.கங்காதரன் அவர்களிடம் கேட்டோம்.




''இன்றைக்கு அறிவியல் தொடர்பான தகவல்கள் பலருக்கும் தெரிந்துள்ளது. ஆனால், அவற்றில் எது சரி, எத்தனை சதவிகிதம் சரி என்கிற துல்லியமான தகவல்களைத் தெரிந்துவைத்திருப்பதில்லை. மேம்போக்காக சொல்லிவிட்டுப் போகிறார்கள். அதனால்தான், இதுபோன்ற ஆதாரமில்லாத விஷயங்கள் பரவுகின்றன. இதைப் படிப்பவர்கள் தானும் பயந்து, மற்றவர்களுக்கும் ஃபார்வேர்ட் செய்து பயமுறுத்திவிடுகிறார்கள். இந்த வதந்திகள் உருவாகக் காரணமான விஷயங்களை ஆராய்ந்து பார்த்தால் புரியும்.


முதல் வதந்தி, கறுப்பு நிற பிரா அணிந்தால், மார்பக புற்றுநோய் வரும் என்பது. இது உருவான பின்னணியைக் கொஞ்சம் யோசியுங்கள். கறுப்பு நிறத்துக்குச் சூரிய ஒளியில் இருக்கும் யு.வி.கதிர்களை இழுக்கும் தன்மை உண்டு. இன்னொரு விஷயம், வெயிலில் அதிக நேரம் நின்றால் ஸ்கின் கேன்சர் வரலாம் என்கிறது மருத்துவம். இவை இரண்டையும் இணைத்து, மார்பக புற்றுநோய் வந்துவிடும் என்று பரப்பியிருக்கிறார்கள். கறுப்பு நிற ஆடை அணிந்தாலே மார்பக புற்றுநோய் வரும் என்றால், இத்தனை காலங்களில் எத்தனையோ பேருக்கு கேன்சர் வந்திருக்க வேண்டும். அதனால், வெயில் காலங்களில் கறுப்பு நிற உள்ளாடை அணிந்தால், பிரெஸ்ட் கேன்சர் வரும் என்பதில் மருத்துவ உண்மை முற்றிலும் கிடையாது.

அடுத்த வதந்தி, அண்டர்வயர் பிரா போட்டால் மார்பக புற்றுநோய் வரலாம் என்பது. இந்த வதந்தி உருவான பின்னணி இதுதான். நம் உடம்பின் ஒரு பகுதியில் ஏதோ ஒரு பொருள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துகொண்டே இருந்தால், அங்கிருக்கும் செல்களின் பிரிதலில் மாற்றங்கள் நிகழும். அதனால், அந்த இடத்தில் கேன்சர் வர வாய்ப்புள்ளது. இந்த அடிப்படையில்தான் அண்டர்வயர் பிராவால், மார்பக கேன்சர் வரும் என்று பரப்பி இருக்கிறார்கள். ஆனால், அண்டர்வயர் பிராவால் புற்றுநோய் வரும் அளவுக்கு ஆபத்து கிடையாது. தொடர்ந்து அணிந்தால், அது அழுத்தும் இடத்தில் ரேஷஸ் வருவதற்கு ஒரு வாய்ப்பு உண்டு. ஒருவேளை இந்த வதந்தி உங்களைப் பயமுறுத்தினால், அண்டர்வயர் பிரா அணிவதைக் குறைத்துக்கொள்ளுங்கள்.



மூன்றாவது வதந்தி, இறுக்கமான பிரா அணிந்தால், கேன்சர் வரும் என்பது. இது முற்றிலும் தவறு. இறுக்கமான பிரா அணிவதால், மார்பகங்களில் வலி வரும் என்பது மட்டுமே உண்மை. ஆண்களும் இறுக்கமான ஜட்டி அணிந்தால், உறுப்பில் வலி வரும். சில நேரங்களில் வீக்கம் ஏற்படும். இதற்குக் காரணம், தொடர்ந்து ஓர் உறுப்பை ஆடை அழுத்துவதால் ஏற்படும் எஃபெக்ட். இதனால், நிச்சயம் கேன்சர் வராது. எனவே, இதுபோன்ற தகவல்களைப் படித்து அநாவசியமாகப் பயப்படாதீர்கள். சம்பந்தபட்ட மருத்துவர் அல்லது நிபுணர்களிடம் விளக்கம் பெறுங்கள். நிம்மதியாக இருங்கள்'' என்கிறார் டாக்டர் கங்காதரன்.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...