Wednesday, July 25, 2018

ஆன்லைன் ஷாப்பிங் டெலிவரியில் இன்னுமோர் நூதன மோசடி... உஷார்!



கார்க்கிபவா  vikatan

பெங்களூரைச் சேர்ந்த சுபாஷினியின் வீட்டுக்கு ஒரு டெலிவரி வந்திருக்கிறது. காலிங் பெல் அழுத்தி, அழைத்த அந்த நபரின் கையில் ஒரு பார்சல். அதில் சுபாஷினியின் கணவர் பெயர் எழுதப்பட்டிருந்தது.




தினம் தினம் புதுப்புது தொழில்கள் வந்துகொண்டேயிருக்கின்றன. அதே வேகத்தில் அத்தொழிலில் ஏமாற்றுபவர்களும் முளைத்துக் கொண்டேயிருக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளில் அபரிமிதமான வளர்ச்சியை அடைந்த விஷயம் ஆன்லைன் ஷாப்பிங். காலையில் பல் துலக்கும் டூத் பேஸ்ட்டில் தொடங்கி சாப்பிடும் இட்லி, அணியும் சட்டை, இரவில் தேவைப்படும் கொசுவத்திச் சுருள் வரை இணையத்தில் கிடைக்கின்றன. இதனை டெலிவரி செய்ய ஏராளமான டெலிவரி பாய்ஸ் வீட்டுக்கதவுகளைத் தட்டுவது வழக்கம். இதிலும் ஏகப்பட்ட முறை ஏமாற்றுவது தொடர்ந்து நடந்து வருகின்றன. அதில் ஒருவகை மோசடியைப் பற்றியதுதான் இந்தக் கதை.

சென்ற வாரம் ட்விட்டரில் சுபாஷினி என்பவர் இதைப் பகிர்ந்திருந்தார். பெங்களூரைச் சேர்ந்த சுபாஷினியின் வீட்டுக்கு ஒரு டெலிவரி வந்திருக்கிறது. காலிங் பெல் அழுத்தி, அழைத்த அந்த நபரின் கையில் ஒரு பார்சல். அதில் சுபாஷினியின் கணவர் பெயர் எழுதப்பட்டிருந்தது. அதைத் தவிர வேறு எந்தத் தகவலும் அந்த பார்சலில் இல்லை. பார்கோடு, சீல் என எதுவுமே இல்லாததால் சுபாஷினிக்குச் சந்தேகம் வந்தது. ``எந்த கொரியர்” என்ற கேள்விக்கு ``ப்ளூ டார்ட்” என்றிருக்கிறார் வந்தவர். கொரியருக்கான ரசீதை சுபாஷினி கேட்க, வந்தவர் பார்சலைத் திருப்பிக் கேட்டிருக்கிறார். ``ஆபீஸ்ல வந்து பார்சலை வாங்கிக்கோங்க” என அவர் சொல்ல, சுபாஷினி பார்சலைத் திருப்பித் தரவில்லை.

அந்த நேரம் சுபாஷினியின் மகன் வீட்டுக்குள் வந்திருக்கிறார். அவரிடம், அவர் தந்தை ஏதாவது ஆன்லைனில் ஆர்டர் செய்திருக்கிறாரா எனக் கேட்கச் சொன்னார். வீட்டில் ஆட்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்த அந்தப் போலி டெலிவரி பாய், ``பார்சலைக் கொடுங்க” என மீண்டும் அவசரப்பட்டிருக்கிறார். ``ஐ.டி கார்டைக் காட்டுங்க” என சுபாஷினி கேட்க, அதை எடுப்பது போல் தன் பைக்கை நோக்கிச் சென்றிருக்கிறார். சில வீடுகள் தள்ளி நிறுத்தியிருந்த பைக்கை எடுத்துக்கொண்டு சிட்டாகப் பறந்துவிட்டார் அந்த `டெலிவரி பாய்’. வண்டி எண்ணை யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதற்காகவே சிறிது தூரம் தள்ளி நிறுத்தியிருக்கிறார்.

சுபாஷினி வீட்டில் யாரும் `கேஷ் ஆன் டெலிவரி' மூலம் ஆர்டர் செய்ய மாட்டார்கள் என்பது தெரிந்ததால் சிக்கலில் மாட்டாமல் தப்பித்திருக்கிறார். ஒருவேளை பணம் கொடுத்திருந்தால், அது வீணாகியிருக்கும். சுபாஷினியின் பயம் அது கூட இல்லை. ``பணம் எடுக்க உள்ளே போயிருந்தால், அந்தச் சமயத்தில் அந்த நபர் அத்துமீறி வீட்டுக்குள் நுழையும் ஆபத்துமிருக்கிறது” என்கிறார். ட்விட்டரில் பெங்களூரு காவல்துறையிடமும் இதைப் பற்றி புகார் தெரிவித்திருக்கிறார்.
 


சுபாஷினிக்கு நடந்த விஷயத்தை எனக்குத் தெரிந்த ஒரு டெலிவரி பாயிடம் சொன்னேன். இது போல பல புகார்கள் அவர்கள் அலுவலகத்துக்கும் வருவதாகச் சொன்னவர், அதன்பின் சொன்னதுதான் அதிர்ச்சி.

``நாங்க டெலிவரிக்குப் போறதுக்கு முன்ன வேற யாரோ வந்து காலி பாக்கெட்ட கொடுத்து காசு வாங்கினதா ஒரு சிலர் சொல்லிருக்காங்க” என்றார். நடப்பது இதுதான்.

டெலிவரிக்கு வரும் காஸ்ட்லியான பொருள்களின் தகவல்களை அவர்கள் அலுவலகத்தில் இருக்கும் சிலரே வெளியே சொல்கிறார்கள். இப்போது நாம் சாம்சங் மொபைலை கேஷ் ஆன் டெலிவரியில் ஆர்டர் செய்திருக்கிறோம் என்றால், அந்தத் தகவல் மட்டும் போதும். நம் வீட்டுக்கு வந்து ``சாம்சங் மொபைல் வந்திருக்கிறது... 19,999” எனக் கேட்டால் நாம் தந்துவிடுவோம். அவர் போன பின்புதான் பாக்கெட்டில் ஒன்றுமே இல்லை என்பது நமக்குத் தெரியவரும். நாம் ஆர்டர் செய்த அந்த ஆன்லைன் நிறுவனத்திடம் புகார் தெரிவித்தாலும் பயனில்லை. ஏனெனில் நடந்ததற்கும் அவர்களுக்கும் எந்தத் தொடர்புமில்லை.

டெலிவரி பாய்ஸ் வேலை மிகவும் சிக்கலான வேலை. அதை இந்த மாதிரியான ஏமாற்றுக்காரர்கள் இன்னும் சிக்கலாக்கி விடுகிறார்கள். வீட்டில் சிசிடிவி மாட்டுவது, யார் வந்தாலும் ஐடி கார்டு கேட்பது, வீட்டில் தனியாக இருந்தால் முடிந்தவரை கேட்டுக்கு வெளியே நிற்க வைத்து வாங்குவது எனப் பாதுகாப்பு அறிவுரைகள் பல இருந்தாலும், எல்லோரும் விழிப்புடன் இருப்பதில்லை.

சுபாஷினி கதையில் பார்சல் அவரிடமே தங்கிவிட்டது. ஆனால், அதில் என்ன இருக்குமென அவர்களால் யூகிக்க முடியவில்லை. இந்த மாதிரி கொரியர் மூலம் பரவிய ஆந்த்ராக்ஸ் கிருமி வரை ஏதேதோ நினைத்தவர்கள் கடைசியில் தைரியமாக அதைத் திறந்து பார்த்திருக்கிறார்கள். உள்ளே ஒரு பழைய சட்டை இருந்திருக்கிறது.

எல்லோருக்கும் சட்டை கிடைப்பதில்லை. பெரும்பாலும் சங்கடங்களே மிஞ்சும். உஷாராக இருக்க வேண்டியது நம் கடமை.



No comments:

Post a Comment

HC: No addl certificate needed for MD anaesthesiology docs

HC: No addl certificate needed for MD anaesthesiology docs TIMES NEWS NETWORK 21.01.2026 Bengaluru : The high court has held that a medical ...