Monday, July 9, 2018

தலையங்கம்

'வாட்ஸ்-அப்'-க்கு கட்டுப்பாடு






தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் செல்போன் கண்டுபிடிப்பு ஒரு மறுமலர்ச்சியாகும்.

ஜூலை 09 2018, 03:00

செல்போன் பயன்பாட்டில் உலகமே உங்கள் கையில் என்ற வகையில் பெரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. பேசுவதற்கும், கேட்பதற்கும், குறுஞ்செய்தி அனுப்பவும் மட்டுமல்லாமல், எல்லா பயன்பாட்டுக்கும் செல்போன் இருந்தால்போதும். ரெயில்–விமான டிக்கெட்களையே செல்போனில் பதிவுசெய்து, அதையே பயணத்தின்போது காட்டிவிடலாம். இப்போது அடையாள அட்டையைக்கூட டிஜிட்டல் அடையாள அட்டையாக காட்டினால்போதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், சமூக வலைதளங்களின் பயன்பாடு அதிகமாக செல்போன் மூலம்தான் இருக்கிறது. குறிப்பாக ‘வாட்ஸ்–அப்’ செய்தி மூலம் உலகம் முழுவதிலும் தகவல் பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்படுகிறது.

‘வாட்ஸ்–அப்’ பயன்பாடு என்பது ஒரு கத்தி போன்றது. மருத்துவர் கையில் இருக்கும் கத்தி உயிரை காப்பாற்றவும், கொலைகாரன் கையில் இருக்கும் கத்தி உயிரை பறிப்பதுபோலவும் பயன்படுத்தப்படுவதுபோல, ‘வாட்ஸ்–அப்’பில் அறிவாற்றலைப் பெருக்க தகவல்கள் பரிமாறும் நல்ல பயன்பாடும் இருக்கிறது. அதே நேரத்தில் பொய்யும், புரட்டும் பரப்பவும், தவறான தகவல்களை பரப்பவும் பயன்படுத்தப்படுகிறது. சில நேரங்களில் தவறாக அனுப்பப்படும் ‘வாட்ஸ்–அப்’ செய்திகளால் வன்முறையும் வெடிக்கிறது. ஒருவரை இழிவுபடுத்துவதற்காக வேண்டுமென்றே பழிசொற்களை அள்ளிவீசவும் ‘வாட்ஸ்–அப்’ பயன்படுகிறது. சிலநாட்களுக்கு முன்பு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மீது கூட அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் ‘வாட்ஸ்–அப்’பில் பரப்பப்பட்டன. இந்த நிலையில், இவ்வாறு பரப்பப்படும் பொய் செய்திகளை தடைசெய்ய ‘வாட்ஸ்–அப்’ நிறுவனம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மத்திய அரசாங்கம் கடும் கண்டன குரலை தெரிவித்தது. இதற்கு பதில் அளிக்கும் வகையில், இப்போது சில நடவடிக்கைகளை ‘வாட்ஸ்–அப்’ நிறுவனம் எடுத்துள்ளது. இந்தியாவிலும் இந்த மாதிரி புகார்கள் வந்திருப்பதால் சில சோதனைகளை மேற்கொண்டிருக்கிறோம். எடுத்துக்காட்டாக, ஒரு குரூப்பில் உள்ளவர்களுக்கு ஏதாவது தகவல் பரிமாற்றம் செய்யப்பட்டால், அதில் உள்ளவர்களே அதை டைப் செய்து பதிவு செய்கிறார்களா? அல்லது இன்னொருவரிடம் இருந்து வரும் ‘பார்வர்டு’ செய்தியா? என்பதை கண்டுபிடிப்பதற்கு ஒரு ‘லேபிள்’ அதில் அடையாள குறியாக வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பலநேரங்களில் இது ‘பார்வர்டு’ செய்தி என்று தெரியாமல், அதை அனுப்பியவர்கள் செய்தி என்று அனுமானித்துக்கொண்டு நம்பத் தொடங்கிவிடுகிறார்கள். அதை தடுப்பதற்கே இந்த நடவடிக்கை மேற்கொள்ள சோதனை நடந்துவருகிறது.

அடுத்து ஏதாவது குரூப்பில் உள்ளவர்கள் வெளியே வந்தபிறகு, மீண்டும் அந்த குரூப்பில் சேரமுடியாத அளவு இப்போது சில நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் எனக்கும், அந்த குரூப்புக்கும் சம்பந்தமே இல்லை என்றும் புகார் தெரிவிக்கலாம். தேவைப்படாத செய்திகள் பலநேரங்களில் வருகிறது. நாம் அதை விரும்புவதும் இல்லை. இதுபோன்ற செய்திகளை தடுக்கவும் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக யார் அந்த செய்தியை அனுப்பினார்கள்? என்பதை கண்டுபிடிக்கவும் சில சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு ‘வாட்ஸ்–அப்’ நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. ஆனால் இது எல்லாமே சோதனை அடிப்படையில்தான் இருக்கிறது. விரைவில் சோதனைகளை முடித்துக்கொண்டு ‘வாட்ஸ்–அப்’ செய்தி என்றால் உண்மையான செய்தியாகத்தான் இருக்கும். பொய் செய்திகளை பரப்பவே முடியாது என்ற நிலையை உருவாக்க, ‘வாட்ஸ்–அப்’ நிறுவனம் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். மத்திய அரசாங்கமும் அதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டும்.

No comments:

Post a Comment

Patta transfer: officials asked to digitally process applications

Patta transfer: officials asked to digitally process applications Dennis S. Jesudasan CHENNAI. 27.01.2026 The Director of Survey and Settlem...