Wednesday, July 18, 2018


சினிமாவில் ரஜினி வருவார்... நிஜத்தில் யார் வருவார்?

எம்.புண்ணியமூர்த்தி

தி.விஜய்


தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் வசிக்கும் குடிசைப்பகுதி நிலத்தைக் கைப்பற்றுவதற்காக, அவர்களுக்கு கொடுக்கப்படும் நெருக்கடிகளும் அதன் பின்னால் உள்ள அரசியலும்தான், ‘காலா’ திரைப்படத்தின் கதை. சினிமாவில் மட்டுமல்ல, நிஜத்திலும் இப்படிப் பல இடங்களில் நடக்கிறது.

கோவையிலிருந்து தடாகம் செல்லும் வழியில் இருக்கிறது முத்தண்ணன்குளம். அந்தக் குளத்தையொட்டி, 2000-க்கும் மேற்பட்ட குடியிருப்பு கள் உள்ளன. தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் இந்தப் பகுதிகளில், சில இஸ்லாமியக் குடும்பங்களும் உள்ளன. இங்கு பல ஆண்டுகளாக வாழ்ந்துவரும் மக்களில் பலர், இப்போது இங்கிருந்து வெளியேற வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சாலை மட்டத்தைவிட உயரமாகக் கட்டப்பட்டிருக்கும் மழைநீர் வடிகால்தான் அனைத்துக்கும் காரணம்.



இஸ்மாயில் என்பவர், “நான் இங்கே குடியேறி 50 வருஷத்துக்கு மேல் ஆகுது. இந்த வீட்ல ஒன்பது பேர் குடியிருக்கோம். போன வருஷம் மழைநீர் வடிகால் அமைக்கிறோம்னு சொல்லி, வீட்டு வாசல்ல கான்க்ரீட் தடுப்புகள் போட்டாங்க. நல்லது பண்றாங்கனு நெனச்சோம். அது, எங்களை விரட்டியடிக்க வைக்கப்பட்ட வேட்டுனு பிறகுதான் தெரிஞ்சது. அந்தக் கால்வாயை ரோடு மட்டத்தைவிட மூணு அடி உயர்த்திக் கட்டிட்டாங்க. இதனால, ரொம்ப அவஸ்தைப்படுறோம். வெளில ஓடுற சாக்கடைத் தண்ணி வீட்டுக்குள்ள வருது. பல வருஷமா இந்த இடத்துக்குப் பட்டா கேட்டு போராடுறோம். எங்களை எப்படியாவது இங்கிருந்து துரத்திடணும்னு பாக்குறாங்க. இதைவிட்டா எங்களுக்கு வேற போக்கிடம் இல்லை” என்றார் இயலாமையுடன்.

மகாலெட்சுமி என்பவர், “தண்ணி பிடிச்சு வீட்டுக்குள்ள தூக்கிட்டுப் போறதுக்குள்ள தாவு தீந்துருது. எங்க நன்மைக்காக மழைநீர் வடிகால் கட்டுறோம்னு சொல்லிட்டு, எங்க வீடுகளைப் புதைச்சுட்டாங்க” என்றார் வேதனையுடன். 

முன்னாள் மாமன்ற உறுப்பினர் வேல்முருகன், “இங்கிருந்து மக்களை வெளியேத்தணும்னு அதிகார வர்க்கம் நினைக்குது. அதற்காகவே, மழைநீர் வடிகாலை இப்படி உயர்த்திக் கட்டியிருக்காங்க. பெருமழை காலத்தில் மொத்தக் குடியிருப்புகளும் வெள்ளத்தில் மூழ்கும். இங்கே என்னதான் அழுக்குல உழன்றாலும், நமக்குனு மண்ணு இருக்குனு ஒரு நம்பிக்கை இருக்கு. குடிசைமாற்று வாரியம் தர்ற வீடுகளோ, பூர்வகுடிகளை அகதிகளைப்போல அடைத்துவைப்பதற்கு கட்டப்படும் கான்க்ரீட் கூண்டுகள். இவர்களை இங்கிருந்து வெளியேற்றி நிலத்தைப் பிடுங்கிக் கொண்டு, அப்படியான கூண்டுக்குள் அடைப்பதற்குத்தான் அரசு இப்படியான இடையூறுகளைச் செய்யுது. கோவை நகரிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்காக, உக்கடம் கழிவுநீர்ப் பண்ணையிலும், அம்மன் குளத்திலும் குடிசைமாற்று வாரியத்தின் மூலம் வீடுகள் கட்டினாங்க. திறப்புவிழா காணும் முன்பே அந்த வீடுகள் தரையிறங்கிருச்சு” என்று குமுறினார்.



இந்த விவகாரம் குறித்து கோவை மாநகராட்சி ஆணையர் விஜய கார்த்திகேயன், “இந்தப் பிரச்னை சமீபத்தில்தான் என் கவனத்துக்கு வந்தது. நேரில் போய் விசாரிக்குமாறு சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்டுள்ளேன். உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

குடிசைவாழ் மக்களைக் காப்பாற்ற சினிமாவில் ரஜினி வருவார். நிஜத்தில் யார் வருவார்?


- எம்.புண்ணியமூர்த்தி
படங்கள்: தி.விஜய்

No comments:

Post a Comment

Annamalai University staff begin indefinite sit-in over pending dues

Annamalai University staff begin indefinite sit-in over pending dues The members also sought settlement of retirement benefits, including co...