Sunday, May 7, 2017

முதுகலை மருத்துவ மாணவர்கள் சேர்க்கை: கவுன்சில் விதிமுறையை பின்பற்ற உத்தரவு

பதிவு செய்த நாள் 07 மே 2017  01:08

சென்னை, முதுகலை மருத்துவப் படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கையில், இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறையை பின்பற்றும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகளின் படி, முதுகலை மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்கும் அரசு டாக்டர்கள், தொலைதுார பகுதி மற்றும் கடினமான பகுதிகளில் பணியாற்றினால், 10 சதவீதம் முதல் அதிகபட்சம், 30 சதவீதம் வரை, ஊக்க மதிப்பெண் வழங்கப்பட வேண்டும். 'நீட்' மதிப்பெண்ணுடன், இந்த ஊக்க மதிப்பெண்ணும் சேர்த்து கணக்கிடப்பட்டு, அதன் அடிப்படையில் சேர்க்கை நடக்கும்.

மருத்துவ கவுன்சில் விதிமுறையை பின்பற்ற கோரி, டாக்டர் ராஜேஷ் வில்சன் என்பவர், மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த, நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, 'முதுகலை மருத்துவப் படிப்பில், மருத்துவ கவுன்சில் விதிமுறையை பின்பற்றி, மாணவர்கள் சேர்க்கையை நடத்த வேண்டும்; மாநில அரசு சொந்தமாக மதிப்பெண் கணக்கிடும் முறையை, பின்பற்ற முடியாது' என, உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து, மருத்துவ மாணவர்கள் சார்பில், தமிழக அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனுவை, நீதிபதிகள் சசிதரன், எஸ்.எம்.சுப்ரமணியம் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது.
மனுக்களை விசாரித்த நீதிபதிகள் இருவரும், மாறுபட்ட உத்தரவுகளை பிறப்பித்தனர். 'மாநில அரசு வெளியிட்ட விளக்க குறிப்பின் அடிப்படையில், ஊக்க மதிப்பெண் வழங்க வேண்டும்' என, நீதிபதி சசிதரனும், 'மருத்துவ கவுன்சில் விதிமுறைகளின்படியே, ஊக்க மதிப்பெண் வழங்க வேண்டும்' என, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியனும் உத்தரவிட்டனர்.

மாறுபட்ட உத்தரவால், இந்த வழக்கு, மூன்றாவது நீதிபதியின் விசாரணைக்கு சென்றது. மாணவர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர் வில்சன், வழக்கறிஞர்கள் ஆர்.என்.அமர்நாத், ஜி.சங்கரன் உள்ளிட்டோரும், மருத்துவ கவுன்சில் சார்பில், மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன், வழக்கறிஞர் வி.பி.ராமன் ஆஜராகினர்.
மனுக்களை விசாரித்த, நீதிபதி சத்தியநாராயணன், உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மேற்கோள் காட்டிபிறப்பித்த உத்தரவு:

இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்தின் கீழ் வகுக்கப்பட்ட விதிமுறைகள், குறிப்பாக முதுகலை மருத்துவ கல்விக்கான விதிமுறைகள் முதன்மையானவை. எனவே, அந்த விதிமுறைகளை, மேல்முறையீட்டு மனுதாரர்கள் பின்பற்ற வேண்டும்.

மருத்துவ கல்வியைப் பொறுத்தவரை, இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு தான் அதிகாரம் உள்ளது என்பதை, உச்ச நீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளில் தெரிவித்துள்ளது. அதை புறக்கணித்து விட்டு, மாநில அரசுகள் சொந்தமாக வழிமுறைகளை வகுப்பதாக, மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன் சரியாக சுட்டிக்காட்டினார்.

உச்ச நீதிமன்ற உத்தரவுகளுக்கு, மாநில அரசு கட்டுப்பட்டது. சட்ட விதிகளையும், விதிமுறைகளையும், அவர்கள் பின்பற்ற வேண்டும். ஆனால், உணர்வுபூர்வமாக, கருணை அடிப்படையில், தாங்கள் மேற்கொண்ட நிலையை நியாயப்படுத்துகின்றனர். தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு, அவர்களை மட்டுமே குறை கூற வேண்டும். தொலைதுார மற்றும் கடினமான பகுதிகள் எவை என்பதை அடையாளம் காண, வரையறை செய்ய, மாநில அரசுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது.

எனவே, இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகளை கண்டிப்புடன், பின்பற்ற வேண்டும். மலை, தொலைதுார, கடினமான பகுதிகளை அடையாளம் காண்பது தொடர்பாக, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவை தவிர, மற்றபடி, அவரது உத்தரவில் உடன்படுகிறேன். மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் உத்தரவிட்டிருந்ததை, நீதிபதி சத்தியநாராயணனும் உறுதி செய்துள்ளார். எனவே, மருத்துவ கவுன்சில்விதிமுறையை தான் பின்பற்ற வேண்டும்.

மருத்துவ கவுன்சில் விதி சொல்வது என்ன?

தமிழகத்தில், முதுநிலை மருத்துவப் படிப்புக்கு, 1,225 இடங்கள் உள்ளன. இதில், 50 சதவீத இடங்கள், அதாவது சராசரியாக, 612 முதுநிலை மருத்துவ இடங்கள், தேசிய அளவிலான கவுன்சிலிங்கிற்கு செல்கின்றன. மீதமுள்ள, 613 இடங்கள், மாநில மருத்துவ கவுன்சிலிங்கில் இடம்பெறுகின்றன.
இந்த, 613ல், 306 இடங்கள், கிராம மற்றும் மலைப் பிரதேசங்களில், இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் பணியாற்றும், அரசு டாக்டர்களுக்கு, 'சர்வீஸ்' கோட்டா அடிப்படையில் வழங்கப்பட்டன. 'எம்.டி., - எம்.எஸ்., மற்றும் டிப்ளமோ' போன்ற முதுநிலை மருத்துவம் படிக்க, ஒப்பந்த அடிப்படையில், இந்த இடங்களை தமிழக அரசு வழங்கி வந்தது.

இந்நிலையில், 'சர்வீஸ்' கோட்டா உட்பட அனைத்து விதமான இட ஒதுக்கீட்டையும், இந்திய மருத்துவ கவுன்சில் ரத்து செய்தது. ஆனால், மலைப் பிரதேசங்கள், சிரமமான மற்றும் தொலைதுார பகுதியில் உள்ள, மருத்துவமனையில் பணியாற்றும் அரசு டாக்டர்களுக்கு, ஓராண்டு பணியில் இருப்பின், 10 சதவீதம்; இரண்டாண்டுக்கு, 20; மூன்றாண்டுக்கு, 30 சதவீதம் என, கூடுதல் மதிப்பெண் வழங்கலாம் என கூறியுள்ளது.

ஒரு வழக்கில், உச்ச நீதிமன்றமும், இந்திய மருத்துவ கவுன்சில் விதியை பின்பற்ற உத்தரவிட்டது. அதையடுத்தே, சென்னை உயர் நீதிமன்றமும், இந்திய மருத்துவ கவுன்சிலிங் விதியை பின்பற்ற உத்தரவிட்டுள்ளது. இந்த விதியால், தமிழகத்தில், 100க்கும் குறைவான டாக்டர்கள் மட்டுமே பயன் பெறுவர் என, அரசு டாக்டர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.
அதேபோல், இந்திய மருத்துவ கவுன்சில் விதியை பயன்படுத்தினால், தமிழகத்தில், அரசு மருத்துவமனைகளில், நிபுணர்கள் இல்லாத சூழல் ஏற்படும் என அரசு கருதுகிறது.

மேல்முறையீடு குறித்து ஆலோசனை

உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து, சென்னை, தலைமை செயலகத்தில், சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர், டாக்டர்கள் மற்றும் மருத்துவ மாணவர்களுடன் ஆலோசனை நடத்தினர். அதில், தீர்ப்பை எதிர்த்து, மேல்முறையீடு செய்வது அல்லதுஅவசர சட்டம் இயற்றுவது குறித்து ஆலோசிக்கப் பட்டது.
இந்நிலையில், தமிழக அரசு டாக்டர்கள் சங்கம், போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளது. ஆனால், இதர சங்கங்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள், கோரிக்கைகள் நிறைவேறும் வரை, போராட்டம் தொடரும் என, அறிவித்து உள்ளனர்.- நமது நிருபர் -

No comments:

Post a Comment

BHOPAL NEWS