Thursday, May 25, 2017

ஆதாருக்கு பிறப்பு சான்றிதழ் அவசியமில்லை'


பதிவு செய்த நாள்25மே2017 01:24




புதுடில்லி: 'ஆதார் பதிவுக்கு பிறப்பு சான்றிதழ் கட்டாயம் இல்லை' என, ஆதார் அடையாள அட்டை ஆணையம் தெரிவித்துள்ளது.

நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும், அவர்களின் கண் கருவிழி பதிவு மற்றும் கைரேகை பதிவு அடிப்படையில், ஆதார் எண் உருவாக்கப்பட்டு, அதற்கான அடையாள அட்டையும் வழங்கப்படுகிறது. இதில், பயனாளியின் பெயர், தந்தை பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி உள்ளிட்ட விபரங்கள் இடம் பெறும்.

இந்நிலையில், உத்தர பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள சில கிராமங்களில், பலருக்கு ஒரே தேதியே அவர்களின் பிறந்த நாளாக குறிப்பிடப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. தவிர, ஆதார் அட்டை பெறுவதற்காக பிறந்த தேதி குறிப்பிடும் முறையில் குழப்பம் நீடிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து, ஆதார் அட்டை ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆதார் பதிவுக்கு பிறப்புச் சான்றிதழ் கட்டாயம் அல்ல. ஆதார் பதிவின் போது, பிறந்த தேதி தெரியாதவர்களுக்கு, அவர்கள் பிறந்த ஆண்டு அல்லது அவர்கள் தெரிவிக்கும் வயதின் அடிப்படையில், ஆதார் அட்டை வழங்கப்படுகிறது.

எனினும், ஆதார் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள பிறந்த தேதியில் மாற்றம் செய்ய, அதற்கு உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். எனவே, பிறப்பு சான்றிதழ் இருந்தால் தான், ஆதார் அட்டை பெற முடியும் என பரவும் தகவல்கள் தவறானவை. மேலும், இந்த நடைமுறையில் எவ்வித குழப்பமும் நடக்கவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2025