Tuesday, May 9, 2017

ஊழல் வழக்குகளில் லாலு பிரசாத் யாதவுக்கு...
விடுதலை உத்தரவை ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட்
புதுடில்லி: கால்நடை தீவன ஊழல் தொடர்பான வழக்குகளில் இருந்து, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவை விடுவித்து, ஜார்க்கண்ட் ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை, சுப்ரீம் கோர்ட், நேற்று ரத்து செய்தது. 'அனைத்து வழக்குகளிலும், லாலு பிரசாத் யாதவ், சட்டப்படி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்' என்றும், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனால், லாலுவின் அரசியல் வாழ்வு கேள்விக்குறியாகி உள்ளது.
பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி அரசு அமைந்துள்ளது.

பீஹாரில், 1990 - 97ல், முதல்வராக இருந்தவர் லாலு பிரசாத் யாதவ், 68. அப்போது, கால்நடை தீவனம் வாங்குவது தொடர்பாக நடந்த, 900 கோடி ரூபாய் ஊழல் தொடர்பான வழக்குகளில், லாலு பிரசாத், முன்னாள் முதல்வரான ஜகன்னாத் மிஸ்ரா, முன்னாள் தலைமைச் செயலர் சஜால் சக்ரவர்த்தி உட்பட பலர் மீது வழக்குகள் தொடரப்பட்டன.

பாட்னா ஐகோர்ட்டில் நடந்து வந்த இந்த வழக்குகளை, ஜார்க்கண்ட மாநிலம் ராஞ்சியில் உள்ள ஜார்க்கண்ட் ஐகோர்ட்டுக்கு மாற்றி, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, இந்த வழக்குகளை, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் விசாரித்து வந்தது. கருவூலத்தில் இருந்து, பணம் எடுத்து மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், லாலுவுக்கு, ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட், 2013ல் தீர்ப்பு அளித்தது.

அதைத் தொடர்ந்து சிறிது காலம் சிறையில் இருந்த அவர், தற்போது ஜாமினில் உள்ளார். இந்தத் தீர்ப்பை அடுத்து, தேர்தலில் போட்டியிடுவதற்கு லாலுவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கால்நடை தீவன ஊழல் தொடர்பான மேலும், நான்கு
வழக்குகளிலும் லாலு குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். ஒரு வழக்கில், தனக்கு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதால், மற்ற நான்கு வழக்குகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என, ஜார்க்கண்ட் ஐகோர்ட்டில், லாலு பிரசாத் வழக்கு தொடர்ந்திருந்தார்.

தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தது

அதை விசாரித்த, ஐகோர்ட், நான்கு வழக்குகளில் இருந்து லாலுவை விடுவித்து, 2014ல் தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை, நீதிபதிகள் அருண் மிஸ்ரா, அமிதவ ராய் தலைமையிலான சுப்ரீம் கோர்ட் அமர்வு விசாரித்து, இந்த ஆண்டு, ஏப்., 20ல் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தது.
பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கில், நேற்று அளித்த தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளதாவது: இந்த வழக்குகளில், ஒரே மாதிரியான முடிவை ஐகோர்ட் எடுத்திருக்க வேண்டும். ஒவ்வொரு குற்றவாளிக்கும் வேறு வேறு முடிவை ஐகோர்ட் எடுத்துள்ளது. லாலு பிரசாத் உள்ளிட்டோரை, இந்த வழக்குகளில் இருந்து விடுவிக்கும், ஜார்க்கண்ட் ஐகோர்ட் தீர்ப்பை ரத்து செய்கிறோம்.

ஒவ்வொரு வழக்கிலும் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த வழக்குகளின் விசாரணையை, ஒன்பது மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். இந்த முக்கியமான வழக்கில், உடனடியாக மேல்முறையீடு செய்யாமல், சி.பி.ஐ., தாமதம் செய்து உள்ளது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பைத் தொடர்ந்து, லாலு பிரசாத் மீதான தீவன ஊழல் வழக்குகளில் விசாரணை விரைவில் துவங்க உள்ளது. இது, பீஹார் அரசியலில் மிகப் பெரிய புயலை வீசும் என, எதிர்பார்க்கப்படுகிறது.சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு, லாலுவின் அரசியல் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி உள்ளது.

கொட்டம் அடங்குமா?

பீஹார் சட்டசபையில் மொத்தமுள்ள, 243 உறுப்பினர்களில், ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சிக்கு, 71 உறுப்பினர்களே உள்ளனர். கூட்டணி கட்சியான லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கு, 80 உறுப்பினர்களும்,
Advertisement
காங்கிரஸ் கட்சிக்கு, 27 உறுப்பினர்களும் உள்ளனர்.தேர்தலில் போட்டியிட லாலுவுக்கு தடை உள்ளதால், தன் மகன்களை அமைச்சராக்கியுள்ளார்.
லாலுவின் இரண்டாவது மகன் தேஜஸ்வி யாதவ், துணை முதல்வராக உள்ளார். மூத்த மகன் தேஜ்பிரதாப், சுகாதாரத் துறை அமைச்சராக உள்ளார். கடந்த, 2015ல் ஆட்சி அமைந்தது முதல், பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என, லாலு பிரசாத், எங்கும் தன்னை முன்னிலை படுத்திக் கொண்டார்.
இதனிடையில், அவரது மகன்கள் மீது, பல்வேறு ஊழல் புகார்கள் வெளிவரத் துவங்கியுள்ளன. எதிர்க்கட்சித் தலைவரான பா.ஜ.,வின் சுஷில் குமார் மோடி, சமீபத்தில், பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை வெளியிட்டு வருகிறார். லாலுவுக்கு எதிரான இந்த தீர்ப்பு, ஆட்சியில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது; அதே நேரத்தில், லாலு குடும்பத்தின் கொட்டம் சற்று அடங்கும் என, எதிர்பார்க்கலாம்.

அரசியல் வாழ்க்கை முடிந்தது

சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு, லாலுவின் அரசியல் வாழ்க்கைக்கு வைக்கப்பட்டுள்ள முற்றுப்புள்ளி. அனைத்து வழக்குகளிலும் அவருக்கு தண்டனை உறுதி என்பதால், இனி, அவரால் தேர்தலில் போட்டியிடவே முடியாத சூழ்நிலை ஏற்படும். அதே நேரத்தில், இந்த தீர்ப்பு, முதல்வர் நிதிஷ் குமாருக்கு சாதகமாகவேஉள்ளது. வலுவில்லாத லாலு, இனி கோர்ட்வாசற்படியிலேயே இருக்கப் போவதால், நிதிஷுக்கு இனி எந்தப் பிரச்னையும் இருக்காது.
-சுஷில் குமார் மோடி, பீஹார் எதிர்க்கட்சித் தலைவர், பா.ஜ.,

No comments:

Post a Comment

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question CBI to question actor-TVK chief on crowd control la...