Saturday, May 13, 2017

எம்.குணா
மாலை, சால்வை வேண்டாம்... காலில் விழவே கூடாது - ரசிகர்களுக்கு ரஜினி அட்வைஸ்
வழக்கமாக, வெளியூரில் வசிக்கும் ரஜினி ரசிகர்கள் சென்னைக்குப் புறப்படும்போதெல்லாம், முகமெல்லாம் மகிழ்ச்சிப் பூக்கள் மலர ‘ போயஸ் கார்டன் போய் தலைவரைப் பார்க்கப்போறேன்...’ என்று நம்பிக்கை ஒளிரச் சொல்லும்போதெல்லாம் குடும்பத்தாரும் சரி, சக நண்பர்களும் சரி, செயற்கைச் சிரிப்போடு வழியனுப்பிவைப்பார்கள் என்பது  வழக்கமாக நடக்கும் நிகழ்வு. இப்போது, 'மே 15-ம் தேதி என் ரசிகர்களோடு போட்டோ எடுத்துக்கொள்ளப்போகிறேன்...’  என்று அதிகாரபூர்வமாக ரஜினி அறிவித்திருப்பது கண்டு நெகிழ்ச்சியில் கண்ணீர் மல்க, மகிழ்ச்சியில் புன்னகை மின்ன குதூகலத்தில் மிதந்துவருகிறார்கள், ரஜினி ரசிகர்கள்.

இப்போது,  ‘ நான் தலைவரைப் பார்க்கப் போறேன். அவரே என் போட்டோ போட்ட ஐடி கார்டு கொடுத்து, சென்னைக்குக் கூப்பிட்டிருக்கார். அவர்கூட போட்டோ எடுத்துக்கப் போறேன்‘ என்று ஆனந்தமாகச் சொல்லித் திரியும் வெளியூரில் வாழும் ரசிகனின் முகம் பார்த்து, குடும்பத்தாரும் சரி, சக நண்பர்களும் சரி, இயற்கையான சிரிப்போடு அரவணைத்து அக மகிழ்ந்து, அவர்களை வழியனுப்பத் தயாராகி விட்டனர். முன்பு, ரசிகர்களோடு போட்டோ எடுக்கும் நிகழ்ச்சிக்குத் திட்டமிட்டபோது, தமிழகம் முழுக்க இருக்கும் 32 மாவட்டங்களில் இருக்கும் ரசிகர்களையும் மொத்தமாகப் பார்த்து போட்டோ எடுத்து, விருந்தோம்பல் செய்து வழியனுப்ப எண்ணியிருந்தனர்.

இப்போது, தமிழ்நாட்டில் உள்ள திருச்சி, நெல்லை, ராமநாதபுரம், சிவகங்கை, கடலூர், பாண்டிச்சேரி, காரைக்கால், கரூர், சிதம்பரம், பெரம்பலூர், திண்டுக்கல், திருவாரூர் என்று 17 மாவட்டங்களில் இருக்கும் ரசிகர்களை மட்டுமே சந்திக்கிறார். பெரிய மாவட்டத்தில் தலா 250 ரசிகர்களையும் சிறிய மாவட்டத்தில் தலா 200 ரசிகர்களையும் சந்தித்து போட்டோ எடுத்துக்கொள்கிறார். சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட 15 மாவட்ட ரசிகர்களை,  ஜூன் மாதம் சந்தித்து போட்டோ எடுத்துக்கொள்ளத் திட்டமிட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

மே 15-ம் தேதி, வெளியூரில் இருந்து சென்னைக்கு வரும் ரசிகர்கள், காலை 7 மணிக்கே ஸ்ரீராகவேந்திரா மண்டபத்துக்கு வருமாறு சொல்லி இருக்கிறார்கள். காலை 7 மணிக்கு வரும் அனைத்து ரசிகர்களுக்கும் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் சிற்றுண்டி பரிமாறப்படும். சரியாக காலை 9 மணிக்கு வரும் ரஜினிக்கு, தனது ரசிகர்களுடன் சேர்ந்து ஆலோசனையோ, கலந்துரையாடலோ செய்யும் எண்ணம் துளியும் இல்லை. தன்னைத்தேடி வந்துள்ள ரசிகர்களுடன் இணைந்து போட்டோ மட்டுமே எடுத்துக்கொள்கிறார். 'பரிசுப் பொருள்கள் கொடுப்பது, சால்வை போர்த்துவது, மாலை அணிவிப்பது போன்ற எந்த மரியாதையும் வேண்டாம்' என்று ரசிகர்களிடன் ரஜினி அறிவுறுத்துள்ளார். முக்கியமாக, காலில் விழவே கூடாது என்பதுதான் ரஜினியின் அன்புக் கட்டளை.

ரஜினியின் நேரடி கண்காணிப்பில் உருவாக்கப்பட்ட ஐடி கார்டு ஒவ்வொன்றிலும் அந்தந்த ரசிகரின் போட்டோ, முகவரி அனைத்தையும் பக்காவாக தயார்செய்து கொடுத்து இருக்கின்றனர். ஒரு சில ரசிகர்கள், ஆர்வத்தின் காரணமாக அதேபோல ஐடி கார்டை தயார்செய்து, தங்கள் போட்டோக்களை வடிவமைத்து எடுத்துக்கொண்டு சென்னைக்கு வந்தால், அவர்களால் ரஜினியைப் பார்த்து போட்டோ எடுத்துக் கொள்ளமுடியாது. ஏனென்றால், ரஜினியின் மேற்பார்வையில் உருவாக்கப்பட்டுள்ள ஐடி கார்டுகளை ஸ்கேன் செய்து வைத்தி  ருக்கிறார்கள். பெரும் எதிர்பார்ப்போடு மண்டபம் வந்து, ரசிகர்கள் ஏமாந்து போகக்கூடாது; அவர்கள் வருத்தப்படக்கூடாது என்பதற்காக இந்த அடையாள அட்டையை முன்கூட்டியே ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

No comments:

Post a Comment

NEWS TODAY 18.12.2025