நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க முடியாது: பிரகாஷ் ஜவடேகர் திட்டவட்டம்

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க முடியாது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக டெல்லியில் இன்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''உச்ச நீதிமன்ற தீர்ப்புப் படியே நீட் தேர்வு நடத்தப்படுகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக மத்திய அரசால் எதுவும் செய்ய முடியாது. நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க முடியாது. மத்திய அரசின் நிலைப்பாட்டை ஏற்கெனவே தமிழக அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது'' என்றார்.
நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு (நீட் தேர்வு) அண்மையில் நடந்து முடிந்தது. இத்தேர்வு முடிவுகள் ஜூன் 8-ல் வெளியாக உள்ளது. மேலும், குடியரசுத் தலைவர் ஒப்புதலை எதிர்பார்த்து இருப்பதாலேயே இன்னும் மருத்துவப் படிப்பு விண்ணப்பங்கள் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ''நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி தமிழக சட்டப்பேரவையில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு அது குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசு முடிவுக்காக காத்திருக்கிறோம். குடியரசுத் தலைவர் ஒப்புதலை எதிர்பார்த்து இருப்பதாலேயே இன்னும் மருத்துவப் படிப்பு விண்ணப்பங்கள் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. மத்திய அரசின் முடிவுக்குப் பின்னரே மருத்துவ விண்ணப்பம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும்" என்றார்.
இந்நிலையில் நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க முடியாது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியிருப்பது மாணவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment