Wednesday, May 24, 2017

பல் மருத்துவ பட்டமேற்படிப்புக்கான கலந்தாய்வில் இடங்களை குறைத்துவிட்டதாக மாணவர்கள் தகராறு செய்தனர்.
மே 24, 2017, 04:15 AM

சென்னை,

கலந்தாய்வு நடத்தப்படாமல் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது.பல் மருத்துவம்

தமிழகத்தில் மருத்துவ பட்டமேற்படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு சென்னையில் உள்ள பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையில் நடந்தது. பல் மருத்துவ பட்டமேற்படிப்புக்கான கலந்தாய்வு நேற்று பகல் 2 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. இதற்காக பல் மருத்துவ பட்டதாரிகள் ஏராளமானோர் கூடியிருந்தார்கள். 108 இடங்களுக்கான கலந்தாய்வுக்கு 601 பேர் அழைக்கப்பட்டு இருந்தனர்.

அவர்கள் அனைவரும் கடந்த வருடம் நடைபெற்ற நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, ரேங்க் அடிப்படையில் அழைக்கப்பட்டு இருந்தனர். ஆனால் சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில் இருந்து 50 சதவீத இடங்களை பெறவில்லை என தெரிகிறது. மேலும் எத்தனை இடங்கள் உள்ளன என்பது தமிழக சுகாதாரத்துறை இணையதளத்தில் வழக்கமாக 2 நாட்களுக்கு முன்பு வெளியிடப்படும். ஆனால் கலந்தாய்வுக்கு முந்தைய நாள் இரவில் தான் இந்த பட்டியல் வெளியிடப்பட்டது.மாணவர்கள் தகராறு

அரசுக்கு சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து சமர்ப்பிக்கப்பட்ட இடங்கள் கிளினிக்கல் படிப்பு சார்ந்த இடங்கள் இல்லை என்றும் தெரியவந்தது. இதன் காரணமாக கலந்தாய்வை நடத்தவிடாமல் மாணவர்கள் பலர் தகராறு செய்தனர். ஏராளமான பல் மருத்துவ பட்டதாரி மாணவ–மாணவிகள் தங்களது கோரிக்கைகளையும், வருத்தத்தையும் கலந்தாய்வு நடத்தவந்த ஊழியர்களிடம் தெரிவித்தனர்.

இதனால் கலந்தாய்வு நடத்தப்படாமல் பாதுகாப்புக்கு போலீசார் வரவழைக்கப்பட்டனர். போலீஸ் அதிகாரிகள் மாணவர்களை சமரசம் செய்ய முயன்றனர். ஆனால் அவர்கள் அதனை ஏற்காததால், அமைதியாக வெளியேறும்படி போலீசார் கூறினார்கள். இந்த சம்பவம் காரணமாக கலந்தாய்வு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது.

இதுகுறித்து கலந்தாய்வுக்கு வந்திருந்த மாணவர்கள் சிலர் கூறியதாவது:–மாணவர்கள் குமுறல்

நீட் விதிமுறைப்படி 50 சதவீத இடங்களை தனியார் கல்லூரிகள் மாநில அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் கலந்தாய்வுக்கு 108 இடங்கள் தான் வந்துள்ளன. அதிகமான இடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் மதிப்பெண் குறைவாக பெற்றவர்கள் ஏற்கனவே சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. அவர்கள் அதிக கட்டணம் கொடுத்து சேர்ந்துள்ளனர். கலந்தாய்வுக்கு கிளினிக்கல் இடம் சமர்ப்பிக்கப்படாததால் நாங்கள் பாதிக்கப்படுகிறோம். கிளினிக்கல் படிப்பிற்கான இடங்களை சமர்ப்பித்தால் தான் எங்களுக்கு இடம் கிடைக்கும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மருத்துவ மாணவர் சேர்க்கை செயலாளர் டாக்டர் செல்வராஜ் கூறியதாவது:–சிறுபான்மை கல்லூரிகள்

சுப்ரீம் கோர்ட்டு, சிறுபான்மை சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகள் 70 சதவீத இடங்களை வைத்துக்கொண்டு, 30 சதவீத இடங்களை அரசுக்கு வழங்கினால் போதும் என்று கூறியுள்ளது. ஐகோர்ட்டு சமீபத்திய தீர்ப்பில், சிறுபான்மை சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகள் விரும்பினால் இடங்களை அரசுக்கு கொடுக்கலாம் என்று உத்தரவிட்டுள்ளது. சில வருடங்களுக்கு முன் தமிழக அரசு சட்டம் ஒன்றை பிறப்பித்தது. அதில் சிறுபான்மை கல்லூரிகள் அவர்களாக விரும்பி தரும் இடங்களை பெற்றுக்கொள்ளலாம் என்று கூறியுள்ளது.

அரசு பல் மருத்துவ கல்லூரியில் மருத்துவ பட்டமேற்படிப்பிற்கான இடங்கள் 19 இருந்தன. கலந்தாய்வில் அதில் 17 இடங்களை மாணவர்கள் தேர்ந்து எடுத்தனர். சுயநிதி கல்லூரிகளில் பல் மருத்துவ பட்டமேற்படிப்பில் சேர கலந்தாய்வுக்கு 108 இடங்கள் தான் உள்ளன. இதில் சிறுபான்மை பல் மருத்துவ கல்லூரிகள் 50 சதவீத இடங்களை அரசுக்கு சமர்ப்பிக்கவில்லை. இதனால் தான் இந்த பிரச்சினை எழுந்துள்ளது.கலந்தாய்வு தள்ளிவைப்பு

இந்த பிரச்சினை காரணமாக கலந்தாய்வு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அரசிடம் ஆலோசனை பெற்று கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு டாக்டர் செல்வராஜ் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2025