Wednesday, May 24, 2017

தமிழகம் முழுவதும் ஆதார் எண் இணைக்காத குடும்ப அட்டைகள் நீக்கம்

By DIN  |   Published on : 24th May 2017 03:18 AM  |  
தமிழகம் முழுவதும் ஆதார் எண் இணைக்காத குடும்ப அட்டைகள் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளன. இவர்களில், தகுதியான நபர்கள் ஆதார் எண் இணைக்காமல் இருந்தால், அவர்கள் குடும்ப அட்டைக்கு புதிதாக விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுவிநியோகத் திட்டத்தில் முறைகேடுகளைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நியாய விலைக் கடைகளில் பயன்படுத்தப்படும் பிஓஎஸ் இயந்திரங்கள் மூலம் விற்பனை நடைமுறை வந்த பிறகு, போலி ரசீது குறைந்துவிட்டது.
குடும்ப அட்டைதாரர்களின் செல்லிடப்பேசிக்கு விற்பனை விவரம் சென்றுவிடுவதால், பொருள்கள் வாங்காதவர்களின் பெயரில் விற்பனை செய்வது தவிர்க்கப்பட்டுள்ளது.
போலி குடும்ப அட்டைகளை ஒழிக்கும் நடவடிக்கையின் தொடர்ச்சியாக, குடும்ப அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் 1.95 கோடி குடும்ப அட்டைதாரர்களிடம் இருந்து 5.97 கோடி ஆதார் எண் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆதார் எண் பதிவு செய்யாத குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் விநியோகம் செய்வது கடந்த டிசம்பரில் நிறுத்தப்பட்டது.
இத்தகைய அட்டைதாரர்கள் தனிப்பட்டியலுக்கு கொண்டு வரப்பட்டனர். குடிமைப் பொருள் வழங்கல் பிரிவு மண்டல அலுவலகங்கள், குடிமைப் பொருள் தனி வட்டாட்சியர் அலுவலகங்களில் ஆதார் எண் பதிவு செய்து, பொருள்கள் நிறுத்தப் பட்டியலில் இருந்து குடும்ப அட்டைகளை விடுவித்து வந்தனர்.
ஆதார் எண் இணைப்பு நிறுத்தப்பட்டு இப்போது மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன.இதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் பொருள்கள் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட்ட பட்டியலில் இருந்த லட்சக்கணக்கான குடும்ப அட்டைகள் நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளன.
மதுரை மாவட்டத்தில் மட்டும் ஏறத்தாழ 1 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு பொருள்கள் நிறுத்தப்பட்டன. இவர்களில் 20 ஆயிரம் பேர் தங்களது ஆதார் எண்களைப் பதிவு செய்து, பொருள்கள் நீக்கப் பட்டியலில் இருந்து தங்களது குடும்ப அட்டைகளை விடுவித்துள்ளனர். மற்றவர்களின் குடும்ப அட்டைகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து உணவுப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் கூறியது:
குடும்ப அட்டையுடன் ஆதார் எண் இணைக்க போதிய அவகாசம் அளிக்கப்பட்டது. பொருள்கள் நிறுத்தம் செய்யப்பட்ட பிறகும், குடும்ப அட்டைதாரர்கள் பலர் ஆதார் எண் பதிவு செய்திருக்கின்றனர். அதற்குப் பிறகே பொருள்கள் நிறுத்தப் பட்டியலில் இருந்த குடும்ப அட்டைகள் நீக்கப்பட்டுள்ளன.
குடும்ப அட்டைதாரர்கள் தங்களது ஆதார் எண்ணை ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில் பதிவு செய்ய முடியாது.

இதன் மூலம் ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள், போலி குடும்ப அட்டைகள் வைத்திருப்பது தற்போது முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. நீக்கப்பட்டவர்களில் ஆதார் எண் இருந்தும் அதை பதிவு செய்யாத தகுதியான குடும்ப அட்டைதாரராக இருப்பின் புதிய குடும்ப அட்டைக்கு இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மின்னணு குடும்ப அட்டை வழங்கப்படும் என்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2025