Tuesday, May 23, 2017


சிந்தித்து செயல்படுவோம்

By ஆர். அபுல் ஹசன்  |   Published on : 23rd May 2017 02:42 AM  |
ஒவ்வொரு வியாபாரத்திற்கும் ஒரு பருவம் இருப்பது போல் நமது கல்விக் கடைகளில் வியாபாரம் ஜோராக நடப்பது மே - ஜூன் மாதங்களில். தனியார் பள்ளி, கல்லூரிகளில் எல்.கே.ஜி. தொடங்கி எம்.பி.பி.எஸ். வரை சேர்க்கை எவ்வாறு நடைபெறுகிறது? கல்விக் கட்டணம் எவ்வளவு? வளர்ச்சி நிதி என்கிற பெயரில் பிடுங்கப்படுவது எவ்வளவு? அந்தப் பள்ளி, கல்லூரிகளில் எத்தகைய உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளன? பாடம் நடத்தும் ஆசிரியர்களின் கல்வி, அறிவுத் தரம் என்ன? இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் தேடும் வேலை எளிதல்ல.
12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடித்தவுடன் பெற்றோர்களும் மாணவர்களும் செய்யும் முதல் வேலை எந்த பொறியியல் கல்லூரியில் எவ்வளவு பணம் கட்டினால் இடம் கிடைக்கும்? படிப்பு முடித்தவுடன் பன்னாட்டுக் கம்பெனியில் கை நிறைய சம்பளத்துடன் வேலை கிடைக்குமா என்று சல்லடை போட்டு சலித்து எடுப்பதுதான்.
சற்று பணம் படைத்தவர்களாக இருந்தால் எவ்வளவு கொட்டிக் கொடுத்தேனும் மருத்துவக் கல்லூரியில் இடம் பிடிக்க பகீரதப் பிரயத்தனம் செய்வர்.
நண்பர் ஒருவர் சென்னையில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் 5 இலட்ச ரூபாய் நன்கொடை கட்டி சேர்ந்ததுடன் வருடம் ஒரு இலட்ச ரூபாய் கட்டணம் செலுத்தி படித்துள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தனியார் பொறியியல் கல்லூரிகளிலும் ஏறக்குறைய இதே நிலைதான்.
பொறியியல் படிப்பு குறித்த ஒரு புள்ளிவிவரம். 2012-2013இல் 20 லட்சம் மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். அதில் 16 சதவீதம் பேர் அதாவது கிட்டத்தட்ட 3.5 லட்சம் பேர் பொறியியல் படிப்பைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
சரி படித்து முடித்து வேலை கிடைக்கின்றதா என்று பார்த்தால் அதுவும் கிடையாது. இந்தியாவில் கல்லூரி முடித்து வெளியே வருபவர்களில் 60 சதவீதம் பேர் வேலை பெற தகுதியற்றவர்களாக வெளிவருகின்றனர் என்று போட்டு உடைக்கின்றது ஓர் ஆய்வறிக்கை.
நண்பர் ஒருவர் 2010-இல் பொறியியல் முடித்துவிட்டு முன்று வருடங்கள் ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்தில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகின்றார். பொறியியல் படிப்பு எங்கே? விற்பனையாளர் வேலை எங்கே? ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற அரசு நிறுவனங்கள், பெரிய பண முதலைகளின் கல்வி நிறுவனங்களில் படித்த சில ஆயிரம் மாணவர்கள் மட்டுமே பன்னாட்டு நிறுவனங்களில் வேலை கிடைக்கப் பெறுகின்றனர்.
ஆனாலும் அவர்களைத் தேர்ந்தெடுத்த நிறுவனங்கள் லட்சங்களைக் கொட்டி அவர்களுக்கு மீண்டும் பயிற்சி அளிக்கின்றன. இதுதான் இன்றைய நமது பொறியியல் கல்வியின் நிலை.
அப்படியானால் இன்னும் ஏன் பாமர மக்கள் பொறியியலின் பின்னால் அலைகின்றனர்?
நாம் விரும்பிப் படிக்கும் தினசரிகளில் திடீரென்று முழுப்பக்க விளம்பரம் வரும். ஒரு குறிப்பிட்ட பத்திரிகை - குறிப்பிட்ட பொறியியல் கல்லூரி இணைந்து நடத்தும் மாபெரும் கல்வி - வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி. நமது அப்பாக்கள், அம்மாக்கள் அங்கு அழைத்துச் செல்வார்கள்.
முழுவதும் குளிரூட்டப்பட்ட அரங்கிற்குள் நுழைந்தவுடன் எங்கு திரும்பினும் பொறியியல் கல்லூரிகள் குறித்த விளம்பரப் பலகைகள் விதவிதமாக இருக்கும். காசு வாங்கிக் கொண்டு பேச வந்திருக்கும் கோட்டு போட்ட கனவான்கள் பொறியியல் கல்வி மட்டும்தான் உங்கள் பிள்ளைகளை உயர்ந்தவர்களாக்கும் என்கிற ரீதியில் வாங்கிய காசுக்கு வார்த்தைகளை அளந்து விடுவர்.
அதைக் கேட்டு நம்மவர்கள் வாயைப் பிளந்து விடுவர். அந்த நாளிதழ் நுழைவுக் கட்டணம், பொறியியல் கல்லூரியின் விளம்பரங்கள், கடலை மிட்டாய் கடைகள் என்று வலுவாக கல்லா கட்டியிருக்கும். நம் வீட்டிலோ விவசாய நிலம், அம்மாவின் தாலி என்று ஏதாவது ஒன்று அடகுக் கடை அல்லது வங்கியின் வாசலை எட்டியிருக்கும்.
இது ஒரே ஒரு உதாரணம்தான். இப்படி கவர்ச்சியான விளம்பரங்கள் மூலமே பொறியியல் மீதான ஆர்வம், மோகமாக மாற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் மூன்று இலட்சம் பொறியியல் பட்டதாரிகள் வெளிவருகின்றனர்.
அனைவருக்கும் வேலை கிடைப்பது நடைமுறைச் சாத்தியமா? சிந்தித்தால் பொறியியல் குறித்த மாயை விலகும். ஒரு காலம் இருந்தது. பொறியியல் முடித்தவுடன் கை நிறைய சம்பளத்துடன் வேலை கிடைத்தது. அது பொறியியல் யுகத்தின் துவக்கம்.
ஆனால் இன்று அதனைத் தாண்டி பல்வேறு புதிய துறைகள் ஒளிவீசுகின்றன. அறிவோடு பணத்தையும் சேர்த்தே தரக்கூடிய பல்வேறு புதிய படிப்புகள் கல்விச் சந்தையில் உலா வருகின்றன.
குறிப்பாக மானுடவியல் சார்ந்த துறைகள், கலை, அடிப்படை அறிவியல் சார்ந்த துறைகள், வழக்குரைஞர் கல்வி, வரலாறு, பொது நிர்வாகம், அரசியல் அறிவியல் படிப்புகள் போன்ற எண்ணற்ற துறைகள் உலக நாடுகள் பலவற்றிலும் சிறந்த மாணவர்களை ஆண்டுதோறும் உருவாக்கு
கின்றன.
இன்னும் உணவு பதப்படுத்துதல் சார்ந்த கல்விக்கு முக்கியத்துவம் அதிகரிக்க இருப்பதாக கல்வியாளர்கள் கருதுகின்றனர். புதுதில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இந்தத் துறைகளில் சேருவதற்கு வெளிநாடுகளில் இருந்தும் மாணவர்கள் படையெடுக்கின்றனர்.
மண்ணியல், புவியியல், தொல்லியல், தத்துவம், பொருளாதாரம் போன்ற துறைகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகின்றது. ஆனால் இத்துறைகள் நமது வாழ்வு முடியும் வரையிலும் பலனளிக்கக் கூடியவை.
ஆதலால் மாணவர்கள் கவர்ச்சிக்கு விலை போகாமல், சிந்தித்து தமது விருப்பத்திற்கேற்ற துறைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நாம் தேர்ந்தெடுக்கும் துறை நம் வாழ்வுடன் சமூகத்தின் எதிர்காலத்தையும் நிர்ணயிக்கும் வண்ணம் இருக்க வேண்டும்.
பெற்றோர்களும் தம் விருப்பத்தை திணிக்காமல் பிள்ளைகளின் விருப்பத்திற்கு விட்டுவிட வேண்டும். கல்வி நிறுவனங்களும், அரசுகளும், ஊடகங்களும் பொறியியல் பல்லவியையே பாடாமல் ஆக்கப்பூர்வமான மாற்று கல்வித்துறைகளை முன்னெடுக்க வேண்டும்.

    No comments:

    Post a Comment

    HC: No addl certificate needed for MD anaesthesiology docs

    HC: No addl certificate needed for MD anaesthesiology docs TIMES NEWS NETWORK 21.01.2026 Bengaluru : The high court has held that a medical ...