Monday, May 1, 2017

அரசு மருத்துவர்களைத் தள்ளாட வைக்கும் நீட் தேர்வும் ஒதுக்கீடும்! 

SAKTHIVEL MURUGAN G

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு குறித்த சர்ச்சைகள் தீர்ந்தபாடில்லை. தமிழக மாணவர்களின் எம்.பி.பி.எஸ் படிப்புக்கு 'நீட் தேர்வு' பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று விவாதம் நடந்துகொண்டிருக்கிறது. இதே வேளையில் 'முதுநிலை மாணவச் சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கான உள்ஒதுக்கீடு இல்லை' என்ற உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மருத்துவமனையில் பணியாற்றிவரும் மருத்துவர்கள் பத்து நாள்களுக்கும் மேலாகப் போராடிவருகிறார்கள்.



இவர்களின் போராட்டம் குறித்தும், முதுநிலை மருத்துவத்துக்கான நீட் தேர்வு குறித்தும் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மருத்துவர்களிடம் பேசினோம்.

சமூகச் சமத்துவத்துக்கான மருத்துவச் சங்கத்தின் பொதுச்செயலாளர் மருத்துவர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் "இந்தக் கல்வியாண்டுக்கான முதுநிலை மருத்துவக் கல்வி இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே `நீட் தேர்வை' நடத்தியது மத்திய அரசு. இதை நடத்திய இந்திய மருத்துவ கவுன்சிலிங், சரியான வழிகாட்டுதலையும் விதிமுறைகளையும் ஏற்படுத்தவில்லை. ஏற்கெனவே உள்ள ஒதுக்கீடுகளையும் கணக்கில்கொள்ளவில்லை. இதனால் முதுநிலை படிக்க விண்ணப்பித்த மாணவர்கள் `நீட் தேர்வில் அனைவருக்கும் ஒரே ஒதுக்கீடு வழங்க வேண்டும்' என்று தொடுத்த வழக்கில், தமிழக மருத்துவத் துறையில் பணியாற்றிவரும் மருத்துவர்களுக்கான ஒதுக்கீட்டை ரத்துசெய்ய உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

இதை எதிர்த்து அரசு மருத்துவர்கள் போராடிவருகிறார்கள். இவர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், உடனே இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவர வேண்டும். இந்த விதிமுறையை ஏற்றுக்கொள்ளும் வகையில் முதுநிலை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கான இடஒதுக்கீட்டைப் (Service quota) பாதுகாத்திட மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வரவேண்டும்.

அரசு மருத்துவமனைகளில் இரண்டு ஆண்டுகளாக வேலைசெய்யும் மருத்துவர்களுக்கு, முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர கடந்த ஆண்டு வரை 50 சதவிகிதம் தனி இடஒதுக்கீடு (Service Quota) இருந்தது. இதன்மூலம் ஒவ்வோர் ஆண்டும் 600-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் பயன்பெற்றுவந்தனர். இவர்கள் முதுநிலை மருத்துவம் படிப்பதால் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு மருத்துவர்களின் சேவை அதிகரித்து, அரசுப் பொது மருத்துவமனைகளையே நம்பி இருக்கும் ஏழை எளிய மக்கள் பயன்பெறுகிறார்கள். தமிழகம் பல மாநிலங்களைவிட மருத்துவத் துறையிலும், மனிதவளக் குறியீட்டிலும் முன்னேறியிருப்பதற்கு இதுவும் மிக முக்கியக் காரணம்" என்கிறார் ரவீந்திரநாத்.

"கிராமம் மற்றும் மலைப் பகுதிகளில் பணியாற்றுபவர்களுக்கு போனஸ் மதிப்பெண், மத்திய, மாநில அரசுக்கான 50 சதவிகித ஒதுக்கீடு, 25 சதவிகித உள்ஒதுக்கீடு எனப் பல சிக்கல்களுடன் இருக்கிறது முதுநிலை மருத்துவப் படிப்புக்கான சேர்க்கை. எம்.பி.பி.எஸ் படித்து முடித்தவுடன் அரசு வேலையில் சேராமல் இருப்பவர்கள், நீட் தேர்வின் மூலம் ஒதுக்கீடு இல்லாமல் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர விரும்புகிறார்கள். ஆனால், அரசு மருத்துவமனையில் பணியாற்றிவரும் மருத்துவர்கள் குறிப்பிட்ட வருட அனுபவ போனஸ் மதிப்பெண்களுடன் மாநில ஒதுக்கீட்டில் உள்ள உள்ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை நடைபெறுவதை விரும்புகிறார்கள். இவர்கள் புதியதாகப் படித்து முடித்துவிட்டு நீட் தேர்வு எழுதுபவர்களுடன் தேர்வு எழுதும்போது பெரும் போட்டியைச் சந்திக்கவேண்டியிருக்கிறது. இதனால் இவர்களுக்கு இடம் கிடைக்காமல்போக வாய்ப்பு அதிகம். போனஸ் மதிப்பெண்களுடன் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர வேண்டும் என்று அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு இது சோதனையான காலம்தான்'' என்கிறார் நீட் தேர்வில் தேர்ச்சிபெற்றுள்ள இளம் மருத்துவர்.

மருத்துவர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றம் 'முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான விரிவான வழிகாட்டுதல் வரையறையை' இந்திய மருத்துவ கவுன்சில் மே முதல் வாரத்தில் நீதிமன்றத்துக்குத் தாக்கல்செய்ய வேண்டும். இதுகுறித்து மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் தங்களுடைய கருத்துகளைப் பதிவுசெய்யவும் உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.



 மே முதல் வாரத்தில் இளநிலை (எம்.பி.பி.எஸ்) படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற இருக்கிறது. அதே சமயத்தில் முதுநிலை படிப்புக்கான ஒதுக்கீடுகுறித்த நீதிமன்ற வழக்கு விசாரணையும் வர இருக்கிறது. இந்த விசாரணைக்குப் பின் வழங்கப்படும் நீதிமன்றத்தின் தீர்ப்பு மருத்துவத் துறையில் மிகுந்த முக்கியத்துவம் பெற இருக்கிறது.

No comments:

Post a Comment

Peon, an MA in Eng, checks Hindi answer sheets at college in MP

Peon, an MA in Eng, checks Hindi answer sheets at college in MP Amarjeet.Singh@timesofindia.com 10.04.2025 Bhopal : Twice ‘outsourced’, the ...