Saturday, March 17, 2018

பெண் நிருபர் கேள்வி.. கேலி, கிண்டல்..!' மன்னிப்புக் கோரிய அமைச்சர் விஜயபாஸ்கர்

கா . புவனேஸ்வரி  VIKATAN 17.03.2018




தவறு செய்யும் அரசியல்வாதிகளை எதிர்த்துக் கேள்விகள் கேட்டால் 'முதலில் அவர்கள் கண்களால்தான் என்கவுன்டர் செய்வார்கள் 'என்று தனது புத்தகத்தில் பிரபல பத்திரிகையாளர் ராணா ஆயுப் எழுதியிருந்தார். ஒருமுறை பி.ஜே.பி தலைவர்களை எதிர்த்துக் கேள்விகள் கேட்டதற்கு அவ்வாறான எதிர்வினைகளை தாம் எதிர் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். அதற்கு ஒரு படி மேலே போய் அவ்வாறான தாக்குதல் தமிழகத்தில் உள்ள பெண் நிருபர்மீது நிகழ்த்தப்பட்டுள்ளது. அதையும் தமிழக அமைச்சர் ஒருவர் நிகழ்த்தியிருக்கிறார்.

தமிழகத்தின் ஆளுங்கட்சியான அ.தி.மு.க-வின் தலைமையகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது கூட்டம் முடிந்து வெளியே அமைச்சர் விஜய பாஸ்கர் வெளியில் வருகிறார். அவரை நெருங்கிய பெண் நிருபர் ஒருவர் 'இன்றைய கூட்டத்தில் என்ன விவாதிக்கப்பட்டது?' எனக் கேள்வி எழுப்புகிறார். அதற்கு அமைச்சர் விஜய பாஸ்கர் நிருபரின் கேள்விக்கு பதில் சொல்லாமல், 'உங்கள் கண்ணாடி அழகாக இருக்கிறது' எனக் கூறுகிறார். 'அதை நான் தினமும்தான் அணிகிறேன். கூட்டத்தில் என்ன விவாதிக்கப்பட்டது' என மீண்டும் கேட்கிறார். அதற்கு சிரித்துக்கொண்டே 'இன்று உங்களுக்குக் கண்ணாடி அழகா இருக்கு', என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார். அமைச்சரின் இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு பெண் ஊடகவியலாளர்கள் மையம் கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்..

"தமிழகத்தின் ஆளுங்கட்சியான அதிமுகவின் தலைமையகத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் என்ன விவாதிக்கப்பட்டது என்ற கேள்விக்கு பதில் கூறாமல் சென்றிருக்கலாம். கருத்துக் கூற விருப்பமில்லை என்று கூறியிருக்கலாம். ஆனால், அதை விடுத்து பணி ரீதியாக கேள்விகள் கேட்ட பெண் பத்திரிகையாளரை இழிவுபடுத்தும் வகையில் பதில் சொன்ன சுகாதாரத் துறை அமைச்சரின் செயல் கண்டனத்துக்குரியது. பெண்கள் எவ்வளவு முன்னேறி வந்தாலும் அவர்களை உடலாக மட்டுமே பார்க்கும் அணுகுமுறையின் வெளிப்பாடாகவே அமைச்சரின் கருத்து இருக்கிறது. பணிரீதியாகக் கேள்வி கேட்கும் பெண் பத்திரிகையாளரிடம் இப்படி ஒரு பதிலை கூறுவதன் மூலம், அதை ஏற்றுக்கொண்டு மறு கேள்வி கேட்க மாட்டார்கள் என்று எதிர்பார்கிறாரா அமைச்சர்?

கட்சியின் முக்கியப் பிரதிநிதிகளில் ஒருவரான அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர் கேட்ட கேள்விக்கு அவரை அவமதிக்கும் விதமாக பதிலளித்தது கண்டனத்துக்குரியது. பெண் செய்தியாளரிடம் முறையற்ற வகையில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் பகிரங்க மன்னிப்பு கடிதம் வெளியிட வேண்டும்." என்று அந்த அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அமைச்சரின் இந்தப் பேச்சு குறித்து நிருபரின் கருத்தைப் பதிவு செய்ய பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். அதற்கு "நான் வேலை நிமித்தமாக வெளியே இருப்பதால் தற்போது பதில் தர முடியாது" என்று கூறினார். இந்த நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியது குறித்து அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வனிடம் பேசினோம், "அவருடைய இந்தக் கருத்து தவறானதுதான். தன்னுடைய பேச்சுக்கு மன்னிப்புக் கேட்பதாக அமைச்சர் விஜபாஸ்கர் கூறியுள்ளார். நிருபரின் கேள்விகளைத் தவிர்ப்பதற்காகவே அவர் அவ்வாறு பேசியதாகவும், யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை என்றும் கூறியுள்ளார். ஆனாலும், அவர் பேசியது தவறு என்பதை மறுக்க முடியாது. இதுகுறித்து அமைச்சரிடம் விளக்கம் கேட்பது பற்றி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அல்லது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்தான் முடிவுஎடுக்க முடியும்" என்றார்.

இந்நிலையில், இந்தச் சர்ச்சைக் கருத்து தொடர்பாக மன்னிப்பு கேட்டுள்ளார் அமைச்சர் விஜயபாஸ்கர். மேலும் அவர், "அரசியல் தொடர்பான கேள்விகளை தவிர்க்கவேதான் அவ்வாறு கூறினேன். அதில் எந்த உள்நோக்கமும் இல்லை. அனைத்துப் பத்திரிகையாளர்களையும் நான் மதிக்கிறேன். அனைவருமே எனது சகோதர, சகோதரிகள்தான். சம்பந்தப்பட்ட பெண் நிருபரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நான் என் வருத்தத்தை தெரிவித்தேன். இந்தப் பிரச்னையைப் பெரிதுபடுத்த வேண்டாம்." எனத் தெரிவித்திருக்கிறார்.

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...