Sunday, May 7, 2017

விதிமீறும் டாக்டர்களுக்கு மருத்துவ கவுன்சில் எச்சரிக்கை

பதிவு செய்த நாள் 06 மே 2017

20:58 ''எம்.பி.பி.எஸ்., மட்டும் படித்த மருத்துவர்கள், நிபுணர் எனக்கூறி, நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, தமிழக மருத்துவ கவுன்சில் தலைவர், செந்தில்குமார் எச்சரித்துள்ளார்.
மருத்துவ கவுன்சில் விதிப்படி, எம்.பி.பி.எஸ்., படித்த பின், எம்.டி., - எம்.எஸ்., போன்ற மேற்படிப்பு படித்த டாக்டர்கள் மட்டும் தான், துறை சார்ந்த நிபுணர்கள் எனக்கூறி, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.

ஆனால், கிராமங்களில், எம்.பி.பி.எஸ்., மட்டும் படித்த டாக்டர்கள், தங்களை துறை சார்ந்த நிபுணர்கள் எனக்கூறி, இதய நோய் உள்ளிட்ட சிகிச்சை அளித்து வருவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுபோன்று சிகிச்சை அளித்த டாக்டர்களால், உயிரிழப்புகள் ஏற்பட்டு, மருத்துவமனைகள் மீது, தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி உள்ளன. இதுகுறித்து, மருத்துவ கவுன்சில் தலைவர், டாக்டர் செந்தில்குமார் கூறியதாவது:

எம்.பி.பி.எஸ்., படித்த டாக்டர்கள், குழந்தைகளுக்கும், நீரிழிவு போன்ற நோய்களுக்கும், பொது சிகிச்சை அளிக்கலாம். ஆனால், பட்ட மேற்படிப்பு முடிக்காமல், நிபுணர் எனக்கூறி, ஆபத்தான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கக் கூடாது.

அதுபோன்று, டாக்டர்கள் விதிமீறல்களில் ஈடுபட்டால், ஆதாரங்களுடன், 'பதிவாளர், தமிழ்நாடு மருத்துவ கவுன்சில், சென்னை' என்ற முகவரிக்கு புகார் அனுப்பலாம். முறைகேடு உறுதி செய்யப்பட்டால், அந்த டாக்டர் மீது, அபராதம் அல்லது பதிவு ரத்து போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

அடையாளம் அறிவது எப்படி?

தமிழக மருத்துவ கவுன்சிலின், www.tnmedicalcouncil.org என்ற இணையதளத்தில், டாக்டர்கள் விபரங்கள் உள்ளன. அதில், சந்தேகப்படும் டாக்டரின் பதிவு எண் மற்றும் பெயரை, 'டைப்' செய்தால், அந்த டாக்டரின் கல்வித் தகுதியை தெரிந்து கொள்ளலாம். அவர் போலி டாக்டர் என்றால், அதில் எந்த விபரமும் இருக்காது.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

BHOPAL NEWS