Thursday, May 25, 2017

அண்ணா பல்கலை துணைவேந்தர் நியமனம் வழக்கின் முடிவுக்கு கட்டுப்பட்டது: ஐகோர்ட்
பதிவு செய்த நாள்24மே2017 23:24

சென்னை: 'அண்ணா பல்கலை துணைவேந்தர் நியமனம், வழக்கின் இறுதி முடிவுக்கு கட்டுப்பட்டது' என, உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டு உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லியைச் சேர்ந்த, பொறியியல் பட்டதாரியான ராம்பிரசாத் என்பவர், தாக்கல் செய்த மனு:அண்ணா பல்கலையில், துணைவேந்தர் பதவி காலியாக உள்ளது. துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான, தேடல் குழுவை நியமித்து, உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.கவர்னரின் பிரதிநிதியாக, திறந்தவெளி பல்கலை துணைவேந்தர் பாஸ்கரன், அரசின் பிரதிநிதியாக, ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஹேமந்த்குமார் சின்ஹா, சிண்டிகேட் பிரதிநிதியாக, டாக்டர் கருமுத்து கண்ணன் ஆகியோர், தேடல் குழுவில் இடம் பெற்றனர்.

கோரிக்கை : அண்ணா பல்கலை சட்டப்படி, தேடல் குழுவில் இடம் பெறுபவர்கள்,
பல்கலையின் கீழ் உள்ள எந்த அமைப்பிலும், உறுப்பினராக இருக்கக் கூடாது. தேடல் குழுவில், சிண்டிகேட் பிரதிநிதியாக இடம் பெற்றுள்ள, கருமுத்து கண்ணன், மதுரை, தியாகராஜர் பொறியியல் கல்லுாரியின் தலைவராக உள்ளார்.அண்ணா பல்கலையின் இணைப்பு பெற்ற
கல்லுாரியாக, தியாகராஜர் கல்லுாரி உள்ளது. இதை சரிபார்க்காமல், தேடல் குழுவை, கவர்னரின் முதன்மை செயலர் நியமித்து உள்ளார். அண்ணா பல்கலை சட்டத்துக்கு முரணாக, சிண்டிகேட் பிரதிநிதி இடம் பெற்றுள்ளார்.எனவே, புதிய உறுப்பினர்களை கொண்டு, தேடல் குழுவை மாற்றி அமைக்க வேண்டும். தற்போதைய தேடல் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், அண்ணா பல்கலை துணைவேந்தரை நியமிக்க, தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதிகள், எம்.எம்.சுந்தரேஷ், மகாதேவன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர், எல்.சந்திரகுமார் ஆஜரானார்.

உத்தரவு : மனுவுக்கு, நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, கவர்னரின் முதன்மை செயலர், உயர்கல்வித் துறை செயலர் உள்ளிட்டோருக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது.துணைவேந்தர் நியமனமோ, தேடல் குழுவின் பரிந்துரையோ, எது நடந்தாலும், அது, இந்த வழக்கின் இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது எனவும், டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டு உள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2025