Thursday, May 25, 2017

துணைவேந்தர் தேர்வு: கவர்னர் இன்று முடிவு

பதிவு செய்த நாள்24மே2017 23:27

மூன்று பல்கலைகளின் துணைவேந்தர் தேர்வு குறித்து, கவர்னர், இன்று முடிவு எடுக்கிறார். 

தமிழகத்தில், மதுரை காமராஜர் பல்கலையில், இரு ஆண்டுகளுக்கும் மேலாக, துணைவேந்தர் பணியிடம் காலியாக உள்ளது. புதிய துணைவேந்தரை நியமிக்க, சென்னை பல்கலை முன்னாள் பேராசிரியர், முருகதாஸ் தலைமையில் தேடல் குழு அமைக்கப்பட்டது.
ஒன்றரை ஆண்டுகளாக, துணைவேந்தர் பதவி காலியாக உள்ள, சென்னை பல்கலைக்கு, லஞ்ச ஒழிப்புத் துறை முன்னாள் அதிகாரி வேதநாராயணன் தலைமையில், தேடல் குழு அமைக்கப்பட்டது. ஓராண்டாக காலியாக உள்ள, அண்ணா பல்கலை புதிய துணைவேந்தர் பதவியை நிரப்ப, திறந்தநிலை பல்கலை துணைவேந்தர் பாஸ்கரன் தலைமையில், கமிட்டி அமைக்கப்பட்டது.இந்த தேடல் குழுக்கள், மே, 21ல், கவர்னர் வித்யாசாகர் ராவிடம், இறுதி பட்டியலை சமர்ப்பித்தன. இன்று, உயர்கல்வித் துறை அதிகாரிகளுடன், கவர்னர் ஆலோசனை நடத்த உள்ளார்.
ஒவ்வொரு பல்கலைக்கும், பட்டியலில் இடம்பெற்றுள்ள, மூன்று பேரின் தகுதி, அனுபவங்களின் அடிப்படையில், ஒருவரை தேர்வு செய்வார் என, தெரிகிறது. மூன்று பேரையும் நேரில் அழைத்து, நேர்முக தேர்வு நடத்தியும், கவர்னர் முடிவு எடுக்கலாம் என, கூறப்படுகிறது.
மீன்வள பல்கலை துணைவேந்தரை, நேர்முக தேர்வு நடத்தியே முடிவு செய்தார். 

அதே போல், தேடல் குழு பட்டியலை நிராகரித்து, புதிய நபர்களின் பெயரையும், கவர்னர் பரிந்துரைக்க வாய்ப்புள்ளதாக, உயர்கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2025