Saturday, May 13, 2017

குறைந்த மதிப்பெண் ஒரு குறையல்லவழிகாட்டுகிறார் வருமான வரி அதிகாரி

பிளஸ் 2 தேர்வில், குறைந்த மதிப்பெண் பெற்று, இன்ஜினியரிங், மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்தவர்கள், வாழ்க்கையே இடிந்து போனது போல கவலை அடையத் தேவையில்லை. முயன்றால், அதிக மதிப்பெண் எடுத்தவர்களை விட, உன்னத நிலையை வாழ்க்கையில் எட்ட முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக, வருமான வரித்துறை இணை ஆணையர், நந்தகுமார் இருக்கிறார்.

மிக வறுமையான குடும்பத்தில் பிறந்த நந்தகுமார், கற்றல் குறைபாடு பிரச்னையால், ஆறாம் வகுப்போடு பள்ளிக்கு முழுக்குப் போட்டார். குடும்பத்திற்கு உதவுவதற்காக, பல வேலைகளைச் செய்து வளர்ந்தார். ஆனால், வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற வேட்கை மட்டும், அவருக்குள் இருந்தது. நேரம் கிடைத்த போதெல்லாம் படித்து, தனித் தேர்வராக, சென்னையில் பள்ளிப் படிப்பை முடித்தார்.

பிளஸ் 2வில் குறைந்த மதிப்பெண் பெற்ற அவருக்கு, வியாசர்பாடி அம்பேத்கர் கல்லுாரியில், பி.ஏ., ஆங்கில இலக்கியத்தில் தான், 'சீட்' கிடைத்தது. கடின முயற்சியால், இவர் மட்டுமே, இறுதியாண்டில் தேர்ச்சி பெற்றார். பின், தமிழக அரசு பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய, போட்டித் தேர்வு வெற்றி தந்த உத்வேகத்தால், மத்திய பணியாளர் தேர்வு எழுதினார்; 2004ல், இந்திய வருவாய் பணியில் சேர்ந்தார்.

தற்போது, சென்னையில், வருமான வரி இணை ஆணையர் அளவிற்கு, 42 வயதில் உயர்ந்துள்ளார். தற்போது, தன் பரபரப்பான பணிச்சூழலிலும், ஐ.ஏ.எஸ்., நேர்முகத் தேர்வுக்குத் தயாராகி வரும், 145 இளைய தலைமுறை மாணவர்களுக்கு, இலவச பயிற்சி வழங்கி
வருகிறார்.

நந்தகுமார் கூறியதாவது:

அகில இந்திய பணிகளில் சேருவதில், தற்போது, தமிழக மாணவர்களிடையே ஆர்வம் அதிகரித்து வருகிறது. ஆனால், போதிய அளவுக்கு வழிகாட்ட ஆள் இல்லை. அதனால், 'வாட்ஸ் ஆப்' குழுவை உருவாக்கி, விடுமுறை நாட்களில், அவர்களது கேள்விகளுக்கு பதிலும், ஆலோசனையும் வழங்கி வருகிறேன்.

தற்போது, நேர்முகத் தேர்வுக்கு தேர்வாகியிருக்கும், 145 மாணவ, மாணவியருக்காக ஆலோசனை வழங்கி வருகிறேன். ஆங்கிலம் தெரியாவிட்டாலும், அகில இந்திய போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற முடியும். வருமான வரித்துறை உள்ளிட்ட மத்திய பணியில், இடைநிலை பணிப் பிரிவுகளில், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மிக குறைந்த அளவில் உள்ளனர். அதற்கு, அவர்கள், 'ஸ்டாப் செலக் ஷன் கமிஷன்' போன்ற மத்திய போட்டித் தேர்வை எழுதாததே முக்கிய காரணம்.

அதனால் தான், சென்னையில் உள்ள மத்திய அலுவலகங்களில், வெளிமாநிலத்தவர் அதிகமாகப் பணிபுரிகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், அதிக அளவில் போட்டித் தேர்வுகளில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 18.12.2025